கொரோனா பாதிப்பால் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அதிகளவிலான பாதிப்பைச் சந்தித்து வந்தாலும், சிலருக்கு மட்டும் இந்தக் கொரோனா காலம் ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவர் முகேஷ் அம்பானி, அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்தக் கொரோனா காலத்தில் பல மடங்கு உயர்ந்திருந்தாலும், வளர்ச்சி அளவீடு என்பது 'இவரை' ஒப்பிடுகையில் சற்றுக் குறைவு தான்.
ஆம் இந்தக் கொரோனா காலத்தில் இந்தியாவில் யாரும் அடைந்திடாத வளர்ச்சியை இந்தியாவின் 2வது பணக்கார பெண்ணான கிரன் மசும்தார் அடைந்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இந்த லாக்டவுன் காலத்தில் கிரன் மசும்தார்-ன் சொத்து மதிப்பு இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 16% தடாலடி உயர்வு.. என்ன காரணம் தெரியுமா..?!

கிரன் மசும்தார்
இந்தியாவின் முன்னணி மருத்துத் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகவும் பயோகான் நிறுவனம், இந்தியாவில் மருந்து பொருட்களைத் தயார் செய்து உலகில் சுமார் 120 நாடுகளில் விற்பனை செய்யும் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் தான் கிரன் மசும்தார்.
67 வயதாகும் கிரன் மசும்தார் இந்தியாவின் 2வது பணக்கார பெண்ணாக உள்ளார். 2019ஆம் ஆண்டின் இவரது சொத்து மதிப்பு வெறும் 2.38 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2020ல் 4.6 பில்லியன் டாலராக அதிரடி வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த ஒரு வருட காலத்தில் மட்டும் கிரன் மசும்தார்-ன் சொத்து மதிப்பு 93.28 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

500 டாலர்
இந்தியாவில் இருக்கும் 5 பெண் பில்லியனர்களில் ஒருவரான கிரன் மசும்தார் 42 வருடத்திற்கு முன்பு 2 ஊழியர்கள் உடன் வெறும் 500 டாலர் முதலீட்டில் உருவாக்கிய இந்தப் பயோகான் சாம்ராஜ்ஜியம், இன்று நாட்டின் மிகப்பெரிய பார்மா நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

1 பில்லியன் டாலர்
பல தடைகளைத் தாண்டி தொடர் வளர்ச்சிப் பாதையில் கிரன் மசும்தார் உருவாக்கிய பயோகான் நிறுவனத்தை 2014ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. முதல் நாள் வர்த்தகத்திலேயே பயோகான் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தொட்டு அசத்தியது.
கடந்த 10 வருடத்தில் பல்வேறு போட்டி, உயர்வு, சரிவுகளைக் கடந்து இன்று பயோகான் 5 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு அளவிற்கு உயர்ந்துள்ளது.

100 சதவீத வளர்ச்சி
அக்டோபர் 9, 2019ல் வெறும் 233 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட பயோகாந் பங்குகள் அக்டோபர் 8, 2020 வர்த்தகத்தில் அதிகப்படியாக 472 ரூபாய் வரையில் உயர்ந்து 100 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 3.76 சதவீதம் சரிவுடன் 451.50 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

கொரோனா
கிரன் மசும்தார்-ன் பயோகான் நிறுவனம் தற்போது நாட்டையே பயமுறுத்தி வரும் கொரோனா-விற்குத் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதே வேளையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி கிரன் மசும்தார் கொரோனா-வால் பாதிக்கப்பட்டு 15 நாள் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்தியா
உலக நாடுகள் மத்தியில் அதிகளவில் பணக்காரர்களை உருவாக்கும் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை அமெரிக்கா மற்றும் சீனா பெற்றுள்ள நிலையில் 3வது இடத்தை இந்தியா பிடித்து அசத்தியுள்ளதாக ஹூரன் ரிச் லிஸ்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 2020ல் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ரூபாய் மதிப்புச் சரிந்தாலும், இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

புதிய பணக்காரர்கள்
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமாகச் சொத்து வைத்திருப்பவர்கள் பட்டியலில் சுமார் 828 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 162 பேர் புதிதாக இப்பட்டியலில் இணைந்துள்ளனர். இந்த 828 பேரின் மொத்த சொத்து மதிப்பு 828 பில்லியன் டாலர், அதாவது இந்தியாவின் ஜிடிபி-யில் 3ல் ஒரு பங்கு..!