இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவு நவம்பர் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 8.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. CMIE அமைப்பின் தரவுகள் படி அக்டோபர் மாதம் 7.77 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பரில் 3 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 8.96 சதவீதமாகவும், ஊரகப் பகுதியில் நவம்பர் மாத வேலைவாய்ப்பின்மை அளவீடு 7.55 சதவீதமாக உள்ளது. இம்மாதத்தில் நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, கிராமங்களில் குறைந்தும் உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு 2 வருடத்தில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

டிஜிட்டல் எகானமி
மத்திய ஐடி மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் அடுத்த 2 வருடத்தில் எலக்ட்ரானிக்ஸ், ஸ்டார்ட்அப், ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த டிஜிட்டல் எகானமி துறையில் 1 கோடி பேர் பணிபுரியும் துறையாக மாறும் என அறிவித்துள்ளார்.

அஸ்வினி வைஷ்ணவ்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கவுன்சில் (ESC) மற்றும் இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (STPI) இணைந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மத்திய அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்.

1 கோடி பேர்
இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் 3 முக்கியத் தூண்களாக இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, ஐடி மற்றும் ஐடிஸ், ஸ்டார்ட்அப் துறையில் தற்போது 88 - 90 லட்சம் பேர் பணியாற்றும் நிலையில் அடுத்த 2 வருடத்தில் இதன் எண்ணிக்கை 1 கோடி என்ற புதிய மைல்கல் சாதனையை எட்டும் என அறிவித்துள்ளார்.

மத்திய அரசு
மத்திய அரசு டிஜிட்டல் எகானமி துறையில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1 கோடியை அடுத்த 2 வருடத்தில் எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் இதைக் கட்டாயம் அடைந்து விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்.

ஸ்டார்ட்அப்
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு நகரங்களில் தான் ஸ்டார்ட்அப் பற்றி அதிகம் பேசப்படும், ஆனால் தற்போது சிறு கிராமம்,டவுன் பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் கூட ஸ்டார்ட்அப் பற்றியும், ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அமைப்பது குறித்தும் பேசப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொழில்நுட்பம்
மேலும் இந்தியாவில் தற்போது டிஜிட்டல் எகானமி தான் டிரெண்ட் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்தியா தற்போது தொழில்நுட்ப நுகர்வோர் என்ற நிலையில் இருந்து தொழில்நுட்ப உற்பத்தியாளராக மாறி வருவதாக அமைச்சர் கூறினார்.

மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா
இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (STPI) ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிதாக இயங்கவும் வேகமாகச் செயல்படவும் நாடு முழுவதும் பிளக் அண்ட் ப்ளே உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

பிளக் அண்ட் ப்ளே உள்கட்டமைப்பு
இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ இயக்குநர் ஜெனரல் அரவிந்த் குமார் கூறுகையில், தனது அமைப்பு ஸ்டார்ட்அப்களுக்காக 64 நகரங்களில் பிளக் அண்ட் ப்ளே உள்கட்டமைப்பை வழங்குகிறது, அவற்றில் 54 கட்டமைப்புகள் நாட்டின் 2 ஆம் மற்றும் 3 ஆம் நகரங்களில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.