இந்தியாவில் பல முன்னணி மாநிலங்கள் அதிகளவிலான தொழிற்துறை நிறுவனங்களை ஈர்க்க தீவரமாக இருக்கும் நிலையில் போட்டியும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் மாபெரும் முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்திய நிலையில் நவம்பர் 30ஆம் தேதி ஒடிசா மாநிலமும் முக்கியக் கூட்டத்தை நடத்தியது.
ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் நடைபெறும் 'மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2022' மாநாட்டில் இந்தியாவின் பல முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இது மட்டும் அல்லாமல் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் உச்சி மாநாடு நிகழ்வின் போது மாநிலத்தில் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதாக உறுதி அளித்தனர்.

7.26 லட்சம் கோடி ரூபாய்
ஒடிசா மாநிலத்தின் நடந்த மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2022 உச்சி மாநாட்டின் வெளியான அறிவிப்புகள், செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு 7.26 லட்சம் கோடி ரூபாய். சுமார் 145 முதலீட்டு ஒப்பந்தங்கள் வாயிலாக 7,26,128.45 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் சுமார் 3.20 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஒடிசாவின் தொழில்துறைச் செயலர் ஹேமந்த் சர்மா தெரிவித்தார்.

முக்கியத் தலைவர்கள்
எல்என் மிட்டல், அனில் அகர்வால், சஜ்ஜன் ஜிண்டால், டிவி நரேந்திரன், நவீன் ஜிண்டால், கரண் அதானி மற்றும் பிரவீர் சின்ஹா உட்படப் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2022 கூட்டத்திற்கு வந்தனர். இதோடு 11 நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கௌதம் அதானி
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் தலைமையில் இருக்கும் அதானி குழுமம், கனிம வளங்கள் நிறைந்த மாநிலமான ஒடிசாவில் அடுத்தப் பத்து ஆண்டுகளில் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக உறுதி அளித்துள்ளது.

JSW குழுமம்
அதானி குழுமத்தை தொடர்ந்து பல துறைகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் JSW குழுமம் மட்டும் ஒடிசா மாநிலத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

டாடா ஸ்டீல்
டாடா ஸ்டீல் நிறுவனம் ஒடிசாவில் தொடர்ந்து முதலீடு செய்யும், இந்தியாவின் மொத்த ஸ்டீல் உற்பத்தித் திறனில் 25 சதவிகிதம் ஒடிசா கொண்டு உள்ளது. இதனால் டாடா ஸ்டீல் இதுவரையில் 75,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளைச் செய்துள்ளது என டாடா ஸ்டீல் MD & CEO T V நரேந்திரன் கூறினார்.

ஆர்சிலர் மிட்டல்
ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் செயல் தலைவர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டல், நிப்பான் ஸ்டீல் நிறுவனத்துடன் இணைந்து ஒடிசாவில் 24 மில்லியன் டன் எடையுள்ள வசதியை அமைப்பது குறித்து இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

வேதாந்தா குழுமம்
வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், ஒடிசாவில் இதுவரையில் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்து தனது நிறுவனம் மிகப்பெரிய முதலீட்டாளராக விளங்குகிறது எனத் தெரிவித்துள்ளார். இதோடு ஜார்சுகுடா அலுமினியப் பூங்காவுக்குக் கூடுதலாக 25,000 கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எஸ்ஸார் கேபிட்டல்
எஸ்ஸார் கேபிட்டலின் இயக்குனர் பிரசாந்த் ரூயா பேசுகையில் ஒடிசாவில் 14 MT பெல்லட் ஆலை மற்றும் 7.5 MT கச்சா எண்ணெய் முதல் பெட்ரோ கெமிக்கல் யூனிட் உட்படப் பல திட்டங்களை உருவாக்க சுமார் 52,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.