உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியிலில் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் எனச் சீனா திட்டமிட்டு கடந்த 15 வருடத்தில் கடினமாக உழைத்து தரத்தையும் சேவையின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தி இன்று பல துறைகளில் கிங் மேக்கர் ஆக உள்ளது. அதிலும் குறிப்பாக டெலிகாம், மொபைல் தயாரிப்பு மற்றும் மொபைல் டெக்னாலஜிகளில் சீனாவுடன் போட்டிப் போட இன்றளவும் யாரும் இல்லை என்பது தான் வியப்பு அளிக்கும் விஷயம்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் கனவிலும் எதிர்பார்க்காத வகையில் பல வர்த்தகத் தடைகளை விதித்து உள்ளனர். இப்படி இருக்கும் சூழ்நிலையிலும் அசராத அமெரிக்காவையும் எதிர்த்துப் பல வர்த்தகத் தடையை விதித்து வருகிறது.
சீனாவின் வர்த்தகச் சந்தை தலைகீழாகப் புரட்டி போட்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்தியா - சீனா இடைய வர்த்தக அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் புதுப் புதுப் பொருட்களின் ஏற்றுமதியும் வர்த்தகம் அதிகரித்து வருகிறது.

இந்தியா - சீனா
இந்தியாவின் 2வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டணி நாடு என்றால் அது சீனா தான். அமெரிக்கா விதித்து வரும் வர்த்தகப் போரின் காரணமாகச் சீனா தற்போது மற்ற நாடுகளிடம் தனது வர்த்தகத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் பல வர்த்தக முயற்சிகளைச் செய்து வருகிறது. இதன் படி தற்போது இந்தியாவில் இருந்து பல புதிய பொருட்களைச் சீனா வாங்கி வருகிறது.

புதிய பொருட்கள்
சீனா தற்போது இந்தியாவில் இருந்து முருங்கைக்காய் பவுடர், மருதானி பவுடர், சில முக்கிய நன்மைகள் கொண்டுள்ள டீ தூள், மிளகாய் ஆகியவற்றை விரும்பி வாங்கி வருகிறது.
ஷாங்காய் நகரத்தில் நடந்த இறக்குமதி கண்காட்சியில் (Import Only Fair) பல சீன நிறுவனங்கள் புதிய புதிய பொருட்களை விரும்பி ஆர்டர் செய்துள்ளதாகத் தெரிகிறது.

3 கோடிக்கு மருதானி
நவம்பர் 5-10ஆம் தேதி வரையில் நடந்த சீனா இறக்குமதி கண்காட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மருதானி பவுடர் தயாரிக்கும் நிறுவனம் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மருதானி பவுடருக்கு ஆர்டர் பெற்றுள்ளது.
இதைப் பெருமையுடன் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாக்யராஜ் மேட்டர்
பாக்யராஜ் மேட்டர் என்றாலே நமக்கு எல்லோரின் நினைவிற்கும் வருவது முருங்கைக்காய் தான். அப்படிப்பட்ட முருங்கைக்காய்-யின் அருமை இப்போது தான் சீனா மக்களுக்குப் புரிந்துள்ளது. மருத்துவப் பயன்பாட்டிற்காக முருங்கைக்காய் பவுடர்-ஐ பல மில்லியன் டாலருக்கு ஆர்டர் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் மிளகாய், டீ குச்சிகள் போன்றவையும் பல மில்லியன் டாலருக்கு ஆர்டர் செய்துள்ளனர்.

ஏற்றுமதி
2019-20 ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில் மட்டும் 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள முருங்கைக்காய் பவுடர், மருதானி பவுடர், சில முக்கிய நன்மைகள் கொண்டுள்ள டீ தூள், மிளகாய் ஆகிய பொருட்களைச் சீனாவிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி கண்காட்சி
சீனாவில் நடந்த இந்த இறக்குமதி கண்காட்சியில் முக்கிய வர்த்தக நாடுகளுக்கு மட்டும் தான் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தனது முக்கிய வர்த்தக நாடுகளுடன் இருக்கும் வர்த்தக வித்தியாசத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இத்தகைய கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்தக் கண்காட்சியின் மூலம் 10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது சீனா.

வர்த்தக வித்தியாசம்
2019-20ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத வர்த்தகத்தில் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப் பொருட்களின் மதிப்பு 8.5 பில்லியன் டாலர், அதுவே சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 36.3 பில்லியன் டாலர். இந்த வர்த்தக வித்தியாசத்தைக் குறைத்து இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதே இந்த இறக்குமதி கண்காட்சியின் நோக்கம்.
கடந்த வருடம் இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை 53.6 பில்லியன் டாலர்.