நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா? அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான்.
ஏற்கெனவே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் கிரெடிட் கார்டில் வசூல் செய்யப்படும் கட்டணங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.சரி அப்படி என்னவெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாருங்கள் பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு பயனுள்ளதா?
பொதுவாக பலரும் கேட்கும் கேள்வி கிரெடிட் நல்ல விஷயமா? அது பயனுள்ளதா? என்பது உங்களை பொறுத்தான் உள்ளது. ஏனெனில் அதனை சரியாக பயன்படுத்தினால் அது உங்களுக்கு நல்ல நண்பன் தான். ஆனால் அதனை தவறாக பயன்படுத்தினால் அதனை விட மோசமான விஷயம் எதுவும் இல்லை. ஏனெனில் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் தொகைக்கு 50 நாட்களுக்கு வட்டி கிடையாது. ஆனால் அதனை தாண்டிவிட்டால் பிரச்சனை தான்.

எவ்வளவு வட்டி விகிதம்
கிரெடிட் கார்டு வைத்திருப்பர்வகள் அனைவரிடமும் இந்த நிதிக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். அதேபோல, ஒரு வங்கியில் கிரெடிட் கார்டின் வகையைப் பொறுத்தும் இந்த கட்டணங்கள் மாறுபடும். ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் நிதிக் கட்டணம் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் உங்களது கிரெடிட் கார்டுகளுக்கான பாக்கித் தொகையை முழுவதுமாகச் செலுத்தா விட்டால் தான் இந்த வட்டி உங்களிடம் பிடித்தம் செய்யப்படும். நீங்கள் அவ்வாறு முழுவதும் செலுத்தத் தவறினால் அந்த தொகைக்கு ஏற்ப சுமார் 33 - 42 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல, ஏடிஎம் மையங்களில் கிரெடிட் கார்டை வைத்துப் பணம் எடுத்தாலும் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும். இது வங்கிகளுக்கு வங்கி வேறுபடும்.

வருடாந்திர பராமரிப்புக் கட்டணம்
நம்மில் பலருக்கு ஏதேனும் ஒரு வங்கியிடமிருந்து இவ்வாறு நிச்சயம் அழைப்பு வந்திருக்கலாம். நாங்கள் உங்களுக்கு இலவசமாக கிரெடிட் கார்டை வழங்குகிறோம் என்று. இலவசம் தான், நீங்கள் வாங்கும் கிரெடிட் கார்டின் முதல் ஆண்டுக்கான பராமரிப்புக் கட்டணத்தை ரத்து செய்து, உங்களுக்கு கொடுப்பார்கள். ஆனால் இரண்டாவது ஆண்டிலிருந்து நீங்கள் பராமரிப்புக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்.
இந்த கட்டணம் ஒரு வருடத்திற்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. இதற்கான தொகை ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் வங்கிகளுக்கும் ஏற்ப மாறுபடும். எனவே நீங்கள் கிரெடிட் கார்டை வாங்குவதற்கு முன்னரே, இதனையெல்லாம் தெரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்றதா? என தெரிந்து கொண்டு பின்னர், கார்டினை வாங்கலாம்.

பணம் எடுப்பதற்கும் கட்டணம் உண்டு
கிரெடிட் கார்டு மூலமாகவும் நீங்கள் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க முடியும். ஆனால் அதற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும்பாலானோர் அதைப் பயன்படுத்துவதில்லை. ஆக மிக தவிர்க்க முடியாத அவசர தேவைகளில் மட்டும் நீங்கள் இதனை பயன்படுத்தலாம்.
கிரெடிட் கார்டில் நீங்கள் பணத்தை எடுத்த நேரத்திலிருந்து வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. நீங்கள் ஏடிஎம்மில் எடுத்த பணத்தில் 2.5 சதவீதம் வரையில் கூட கட்டணம் வசூலிக்கப்படும். இதனால்தான் கிரெடிட் கார்டுகளை வைத்து பெரும்பாலும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதில்லை. கிரெடிட் கார்டுகளின் நிதிக் கட்டணங்கள் உங்கள் கார்டைப் பொறுத்து ஆண்டுக்கு 49 சதவீதத்திற்கு மேல் இருக்கலாம்.

அதிகப்படியான செலவுகளுக்கான கட்டணங்கள்
உங்கள் கிரெடிட் கார்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாகப் செலவிட்டால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். வரம்புத் தொகையை விட நீங்கள் ஒரு ரூபாய் அதிகமாகவோ அல்லது ஆயிரக்கணக்கில் அதிகமாகவோ செலவிட்டால் அதற்குக் கட்டணம் செலுத்தித் தான் ஆக வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் வரம்பை விட 2.5 சதவீத தொகையை வசூலிக்கின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு வங்கிகள் 1.99 சதவீதம் முதல் 3.55 சதவீதம் வரை வெளிநாட்டு நாணய மார்க்-அப் கட்டணத்தையும் வசூலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமாக செலுத்தினால் கட்டணம் எவ்வளவு?
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதன் முழு பாக்கியைச் செலுத்தாவிட்டாலும் குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய தொகையை சரியான நேரத்தில் செலுத்தத் தவறும் போது வங்கிகள் அதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. தாமதமாக செலுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. மினிமம் டியூ அல்லது குறைந்தபட்ச தொகை என்பது உங்களது மொத்த நிலுவைத் தொகையில் 5 சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது.
ஆனால், ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐயில் ஏதாவது வாங்கினாலோ அல்லது கிரெடிட் வரம்பை விட அதிகமாக செலவு செய்தால் இன்னும் அதிகமான அபராதம் விதிக்கப்படும். உரிய தேதியில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை திருப்பிச் செலுத்தத் தவறினால் அதற்கு குறைந்தபட்சம் 500 ரூபாயும், அதிகபட்சம் ரூ.750 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது. இதுவும் ஒவ்வொரு வங்கியினை பொறுத்து மாறுபடும்.

ஜிஎஸ்டி வரி
உங்களது கிரெடிட் கார்டு மூலம் பயன்படுத்தும் தொகைக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் உண்டு. இது 18 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர கிரெடிட் கார்டை பயன்படுத்தி இணையம் வழியாகவோ அல்லது விற்பனை மையம் வழியாகவே அயல் நாட்டு பரிவர்த்தனையை பயன்படுத்தினால், உங்கள் வங்கிகளை பொறுத்து 5 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக இதுபோன்ற கட்டணங்களை தவிர்க்க அயல் நாடுகளில் உங்களது கார்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

கார்டு மூலம் செய்யப்படும் பரிமாற்ற தொகைக்கு கட்டணம்
ஒரு கிரெடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டு மூலம் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கென தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். இது வங்கிகளுகு வங்கிகள் மாறுபடும். ஆக மொத்தத்தில் உங்களது கிரெடிட் கார்டு தொகையை சரியான நேரத்தில் செலுத்துவது மிக நல்லது.