2020-21 நிதியாண்டு துவங்கும் போதே லாக்டவுன் உடன் துவங்கிய காரணத்தால் நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டதால் இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது.
இதனால் வர்த்தகம் இல்லாமல் ஜூன் காலாண்டு வரையில் தவித்து வந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் லாக்டவுன் தளர்வுகள் படிப்படியாகத் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சில முக்கியமான சலுகைகளை அளித்தது.
இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நீண்ட காலத்திற்குச் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் விழாக்காலத் தள்ளுபடி, ஊரகப் பகுதிகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கார்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு என அனைத்தும் ஆட்டோமொபைல் சந்தை மகிழ்ச்சியுடன் 2020ஆம் ஆண்டை முடித்துள்ளது.

டிவிஎஸ் மாஸ்
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் டிசம்பர் 2020ல் சுமார் 2,72,084 வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் எண்ணிக்கை 2,31,571 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பல்வேறு பாதிப்பு நிறைந்த 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் விற்பனையில் 17.5 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஹூண்டாய் கலக்கல்
இதேபோல் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹூண்டாய், டிசம்பர் மாதம் 2020ல் 66,750 கார்களை விற்பனை செய்து சுமார் 33.14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஹூண்டாய் 50,135 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2019 டிசம்பரை ஒப்பிடுகையில் உள்நாட்டில் 24.89 சதவீதமும், ஏற்றுமதியில் 58.84 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் 2020ல் ஹூண்டாய் மொத்தம் 5,22,542 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

டாடா அதிரடி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தைப் போலவே டிசம்பர் மாதம் சுமார் 53,430 கார்களை விற்பனை செய்து சுமார் 21 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
உள்நாட்டு விற்பனையில் கடந்த வருடம் வெறும் 12,785 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் இந்த வருடம் 84 சதவீத வளர்ச்சியில் 23,545 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா அருமை
கார் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் ஹோண்டா நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் கடந்த வருடம் 8,412 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில் டிசம்பர் 2020ல் 2.68 சதவீத வளர்ச்சியில் 8,638 கார்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி சுசூகி அசத்தல்
இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனம் டிசம்பர் 2019ல் 1,33,296 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், 2020ல் 20.2 சதவீத வளர்ச்சியில் சுமார் 1,60,226 வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் 1,50,288 வாகனங்களை உள்நாட்டிலும், 9938 கார்களை வெளிநாட்டிலும் விற்பனை செய்து அசத்தியுள்ளது.