DOGE: எல்லாமே லைவ் அப்டேட்.. எலான் மஸ்க் பதிவால் ஷாக்..!
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் பலரும் அதிர்ச்சி அடைந்தாலும், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே அவருடைய செயல்பாடுகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் முக்கியமாக டிரம்ப் நேற்று வெளியிட்ட அறிக்கை. அமெரிக்க பொருளாதாரம் சுமார் 35 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கடனில் மூழ்கியிருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த இமாலய கடன் சுமையைக் களைய டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முதல் கட்டமாகத் தேவையற்ற செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதேவேளையில் அமெரிக்க அரசின் நிர்வாக முறையை மேம்படுத்தவும், வேகப்படுத்தவும், தேவையற்ற விதிமுறைகளையும், நடைமுறைகளையும் நீக்க Department of Government Efficiency என்ற அமைப்பை உருவாக்கி இதற்கு தி கிரேட் எலான் மஸ்க் மற்றும் குடியரசு கட்சியின் பிரபல உறுப்பினரான விவேக் ராமசாமி ஆகியோரை தலைவராக நியமித்துள்ளார் டொனால்டு டிரம்ப்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நொடியில் எலான் மஸ்க் - விவேக் ராமசாமி ஆகியோருக்கு டிவிட்டரில் பல பரிந்துரைகளும், ஆலோசனையும் பாராட்டுகளையும் குவிய துவங்கியது. இந்த நிலையில் எலான் மஸ்க் செய்த பதிவு பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
Elon Musk: டிரம்ப் அறிக்கை வெளியான பின்பு எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவில், நான் தலைமேயற்றுள்ள 'அரசு செயல்திறன் துறை - DOGE'யின் அனைத்து நடவடிக்கைகளும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மைக்காக ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
"பொதுமக்கள் எந்த நேரத்திலும் எங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். நாங்கள் ஏதேனும் தவறாக செயல்பட்டால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதேபோல் உங்கள் வரிப்பணம் எப்படி வீணாகிறது என்பதைக் காட்டும் ஒரு 'லீடர்போர்டையும்' உருவாக்க உள்ளோம். இது மிகவும் சோகமானது மட்டுமல்லாமல் மிகவும் பொழுதுபோக்குமாக இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோல் டிவிட்டர் வாசி ஒருவர் அமெரிக்காவில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கனடியருமான இரு அமெரிக்க குடிமக்கள், அமெரிக்க அரசியலை புரட்சிகரமாக மாற்றத் தயாராக உள்ளனர். இந்த இருவரும் இணைந்து அமெரிக்காவின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் திட்டமிட்டுள்ளனர் என்று பதிவிட்டார். இதற்கு விவேக் ராமசாமி Afuera! என கமெண்ட் செய்துள்ளார்.
Vivek Ramaswamy: இதேபோல் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையிக்கு பதில் அளிக்கும் விதிமாக DOGE அமைப்பு அரசின் தேவையற்ற செலவுகளை இரும்பு கரங்கள் கொண்டு குறைக்கப்படும். இந்த பணியில் எவ்விதமான தொய்வும் இருக்காது என எலான் மஸ்க்-ஐ டேக் செய்து பதிவிட்டு உள்ளார்.
எலான் மஸ்க் கூறியது போல் DOGE அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் லைவ் அப்டேட் ஆக அறிவிக்கப்பட்டால், முந்தைய அரது எவ்வளவு மோசமாக செயல்பட்டு உள்ளது வெளிச்சம் போட்டு காட்டுவது மட்டும் அல்லாமல் மக்களின் பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிய வரும்.