டிரம்ப் உருவாக்கும் அணு ஆயுதம்.. எலான் மஸ்க்- விவேக் ராமசாமி தலைமை தாங்கும் DOGE..!
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில், அடுத்த சில வாரத்தில் பதவியேற்க உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் தனது குடியரசு கட்சி உறுப்பினர்களில் யாருக்கு எந்த பொறுப்பு என்பதைத் தொடர்ந்து முடிவெடுத்து வரும் வேளையில், தேர்தலுக்கு முன்பில் இருந்தே அதிகம் பேசப்பட்ட DOGE அமைப்பின் தலைவராக எலான் மஸ்க்- விவேக் ராமசாமி ஆகியோரை நியமித்துள்ளார் டிரம்ப்.
DOGE என்பது Department of Government Efficiency என்பதன் சுருக்கமே, இந்த டோஜ் அமைப்பு அரசு அமைப்பு கிடையாது. அரசு நிர்வாகத்திற்கு வெளியிலிருந்து இயக்கும் ஒரு திங்க் டேங்க் அமைப்பாக விளங்கும். இந்த அமைப்புக்கு அரசு நிர்வாகம் குறித்தும், அரசின் செலவுகள் குறித்தும் அனைத்து தரவுகளும் வழங்கப்படும்.

இந்த தகவலை அடிப்படையாக வைத்து எலான் மஸ்க்- விவேக் ராமசாமி தலைமையிலான DOGE அமைப்பு அரசு நிர்வாகத்தை உடைத்து எளிதானதாக்கி, தேவையற்ற விதிமுறைகளைப் பயன்பாட்டில் இருந்து நீக்கி, தேவையற்ற செலவுகளை நீக்கி, அரசு அமைப்புகள் மறுசீரமைப்பு செய்யும் முக்கியமான பணிகளை செய்யும்.
இந்த டோஜ் அமைப்பின் செயல்பாடுகள் கட்டாயம் அமெரிக்க அரசு நிர்வாகத்தில் ஷாக்வேவ் கொடுக்கும், இதேபோல் தேவையற்ற செலவுகளை செய்யும் அரசு அமைப்புகளும், அதிகாரிகளுக்கும் டோஜ் அமைப்பு சிம்மசொப்பனமாக இருக்கும் என டொனால்டு டிரம்ப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் டிரம்ப் இதை இந்த காலத்து The Manhattan Project எனவும் அழைத்துள்ளார், அரசு கட்டமைப்பைச் சீர்திருத்தம் செய்யும் மாறும் அணு ஆயுதமாக இந்த டோஜ் இருக்கும் என்பதைத் தான் The Manhattan Project உடன் ஒப்பிட்டு டிரம்ப் பேசியுள்ளார். 2ஆம் உலக போரின் போது அமெரிக்க அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்திற்கு வைக்கப்பட்ட பெயர் தான் இந்த The Manhattan Project.
குடியரசு கட்சி தலைவர்கள் DOGE அமைப்பு பற்றி நீண்ட காலமாக பேசி வரும் வேளையில், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. DOGE அமைப்பு அமெரிக்க அரசுக்கு, அரசு கட்டமைப்புக்கு வெளியில் இகுந்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தவும் செலவுகளை குறைக்கவும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். இதை அமெரிக்க அரசு வெள்ளை மாளிகை மற்றும் ஆபீஸ் ஆப் மேனேஜ்மென்ட் & பட்ஜெட் வாயிலாக நடைமுறைப்படுத்தும் என DOGE அமைப்பின் செயல்பாடுகளை டொனால்டு டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 6.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வரி பணத்தை செலவு செய்கிறது. இதில் பெரும் பகுதி தொகை தேவையற்றதாக உள்ளது என டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது. இதை களையவே DOGE அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.