துபாய் விசா விதிமுறைகளில் திடீர் மாற்றம்.. மக்களே உஷார்..!
தமிழர்களும், இந்தியர்களும் அதிகம் வசிக்கும் ஒரு வெளிநாட்டு நகரங்களில் ஒன்று துபாய். இந்நகரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல ஆயிரம் பயணித்து வரும் வேளையில் துபாய் அரசு விசா முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
துபாய் இமிகிரேஷன் துறை, சுற்றுலா விசா பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. விசா விண்ணப்ப செயல்முறையை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

புது மாற்றம்: இனி துபாய்-க்கு சுற்றுலா விசா பெறுவதற்கு, QR குறியீடுடன் கூடிய ஹோட்டல் பதிவு ஆவணங்கள் மற்றும் திரும்ப சொந்த ஊருக்கு செல்லும் டிக்கெட் நகலை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என துபாய் இமிகிரேஷன் துறை தெரிவித்துள்ளது.
முன்பும் இந்த விதிமுறை இருந்தாலும் அது கட்டாயமாக இல்லை, தற்போது இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், புதிய விதிகளின்படி, டூரிஸ்ட் விசா விண்ணப்ப செயல்முறையின் போது இந்த ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விசா விண்ணப்ப செயல்முறை: இனி சுற்றுலா விசாக்களை விண்ணப்பிக்க மட்டுமே டிராவல் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், விசிட் விசாக்களை வர்த்தக நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது குடும்பங்கள் சொந்தமாக விண்ணப்பிக்கலாம். இருப்பினும், இரண்டு விசா வகைகளுக்கும் அதே விதிகள் பொருந்தும், அதாவது ஹோட்டல் புக்கிங் மற்றும் ரிட்டன் டிக்கெட்-ன் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
நிதி ஆதாரம்: இது மட்டும் அல்லாமல் டூரிஸ்ட் விசா விண்ணப்பம் செய்யும் போது போதுமான நிதி ஆதாரத்தை தங்களுடைய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டில் காட்ட வேண்டும். இதை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஸ்டேட்மென்ட் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இரண்டு மாத விசாவிற்கு 5,000 திர்ஹம் மற்றும் மூன்று மாத விசாவிற்கு 3,000 திர்ஹம் மதிப்பிலான நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும்.
பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு: இந்த கடுமையான விதிமுறைகள் மூலம் பலருக்கு மிகவும் தாமதமாக விசா கிடைக்கப்பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தேவையான ஆவணங்களை முன்கூட்டியே வழங்க முடியாதவர்களுக்கு அதிகப்படியான நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக, டுரிஸ்ட் விசாவல் துபாய்க்கு வரும் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். ஆனால், புதிய விதிகளின்படி, விசா விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பு அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்வது அவசியமாக்கப்பட்டு உள்ளது.