டெல்லி: இந்தியா ஏற்கனவே 5வது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கலாம். ஆனால் 1991ல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அரைகுறையானவை. பொருளாதார தாரளமயமாக்கல் சரியான வழிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பை ஹிந்தி விவேக் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த நிதியமைச்சர், 1991ல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார தாரளமயமாக்கல் சரியான வழிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படவில்லை. பிஜேபி ஆட்சி வரும் வரையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சுய லாபங்களில் கவனம்
வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி அமையும் வரையில் எந்த முன்னேற்றமும் பெரிதாக நிகழ்வில்லை. அதன் பிறகு உள்கட்டமைப்பு, சாலைகள், தொலைத் தொடர்பு துறை, மொபைல் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் அவர் செலுத்திய கவனம் நாட்டுக்கு பெரிய அளவில் உதவியது. ஆனால் முந்தைய ஆட்சியில் சுய லாபங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது.

பல சீர்திருத்தங்கள்
பிரதமர் நரேந்திரா மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, திருப்புமுனை வாய்ந்த சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன. ஜிஎஸ்டி உள்ளிட்ட மக்களுக்கு நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் மூலம் கிடைக்கும் பலன்களில் இருந்த சிக்கல்கள் களையப்பட்டது. வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரையிலான பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தவறுகள் அகற்றம்
நேரடி பலன் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் திட்டங்களின் பயனாளிகள், தங்களின் முழு உரிமைகளையும் இப்போது பெற்று பயனடைகிறார்கள். இது தொழில்நுட்பத்தால் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய மாற்றம். இதன் மூலம் 2 டிரில்லியன் ரூபாய் தவறானவர்கள் கைகளுக்கு செல்லாமல் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹிந்தி பேச முடியவில்லை
மேலும் தனது ஹிந்தியில் பேசுவது சிரமமாக உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் பிறந்த நான் ஹிந்தி போராட்டங்களுக்கு இடையே கல்லூரி படிப்பினை மேற்கொண்டேன். அப்போது ஹிந்திக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றன. ஒருவர் குறிப்பிட்ட வயதினை தாண்டிய பிறகு புதிய மொழியினை கற்பது சிரமம். என்னால் ஹிந்தியை சரளமாக பேச இயலவில்லை என கூறியுள்ளார்.