தங்கம் விலை, சில மாதங்களுக்கு முன்பு வரை, சர சரவென ஏற்றம் கண்டு வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட விலை ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது அல்லது விற்பனை ஆகி வருகிறது.
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, கடந்த பல வாரங்களாக 51,870 முதல் 54,200 ரூபாய்க்குள்ளேயே விற்பனை ஆகி வருகிறது.
டிசம்பர் மாத காண்டிராக்டுக்கான எம் சி எக்ஸ் தங்கம் விலை 49,252 ரூபாய் முதல் 52,390 ரூபாய் வரைக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச தங்கம் விலை 1,861 - 1,970 டாலருக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது.

கேள்விகளுக்கு விடை காண்போம் வாருங்கள்
இன்றும் அனைத்து தளங்களிலும் வர்த்தகமாகும் தங்கம் விலை இந்த ரேஞ்சுக்குள் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறதா? சென்னை ஆபரணத் தங்கம் விலை என்ன? எம் சி எக்ஸ் தங்கம் விலை நிலவரம் என்ன? சர்வதேச தங்கம் விலை விவரம் என்ன? தங்கம் விலை சரிவில் இருந்து இன்று ஏற்றம் காண்பதற்கான காரணங்கள் என்ன? அடுத்து தங்கம் விலை என்ன ஆகும்? போன்ற கேள்விகளுக்கு விடை காண்போம்.

இன்றைய தங்கம் விலை - சென்னை ஆபரணத் தங்கம்
அடுத்த ஆண்டு சட்ட சபைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் தமிழகத்தின் தலை நகரான சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 52,820 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,420 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

MCX Gold rate - 9 அக்டோபர் 2020 விலை
இந்தியாவின் எம் சி எக்ஸ் கமாடிட்டி சந்தையில், டிசம்பர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,175 ரூபாயை விட 351 ரூபாய் (0.7 %) விலை ஏற்றம் கண்டு 50,526 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

XAU USD CUR - 09 அக் 2020 தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்றைய குளோசிங் விலையான 1,893 டாலரில் இருந்து 21 டாலர் (1.09 %) விலை ஏற்றம் கண்டு, 1,914 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எலா தங்கமும் இன்றும் விலை ரேஞ்சுக்குள் தான் இருக்கின்றன. இருப்பினும் தங்கம் விலை, முந்தைய நாள் விலை இறக்கத்தில் இருந்து, இன்று விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? வாங்க பார்க்கலாம்.

செம சரிவில் டாலர் இண்டெக்ஸ்
உலகின் ஆறு முக்கிய கரன்சிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலர் எப்படி இருக்கிறது என்பதை காட்டு டாலர் இண்டெக்ஸ் காட்டும். கடந்த 25 செப்டம்பர் 2020 அன்று 94.64 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது அமெரிக்க டாலர் இண்டெக்ஸ். ஆனால் இன்று 93.37 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. சுருக்கமாக அமெரிக்க டாலர் பலவீனமடைந்து இருக்கிறது.

டாலர் அடிவாங்கினால் தங்கத்துக்கு ஜாலி தான்
பொதுவாக டாலர் மதிப்பு குறைந்தால், மற்ற கரன்சிகள் பலமடைந்து இருக்கிறது என பொருள். அதாவது மற்ற நாட்டு கரன்சிகளை குறைவாக கொடுத்து அமெரிக்க டாலரை வாங்கிவிடலாம். இதனால் தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும். முதலீட்டாளர்கள் கரன்சி மதிப்பு இழப்பு மற்றும் பணவீக்கத்தில் இருந்து தப்பிக்க, தங்கத்தில் தஞ்சம் புகுவார்கள். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும்.

அமெரிக்காவின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விரைவில் ஸ்டிமுலஸ் பேக்கேஜை கொண்டு வரச் சொல்கிறார். எவ்வளவு விரைவாக ஸ்டிமுலஸ் பேக்கேஜ்கள் கொண்டு வரப்படுகிறதோ அந்த அளவுக்கு விரைவாக தங்கம் விலையும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம். இவைகள் எல்லாம் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு வழி வகுக்கின்றன. தங்கம் விலையை ஏற விடாமல் தடுக்கும் சில காரணிகளும் இருக்கின்றன. அவைகளையும் பார்ப்போம்.

மத்திய வங்கிகள் - தங்கத்தில் குறையும் முதலீடுகள்
முன்பைப் போல உலக நாடுகளின் மத்திய வங்கிகள், தங்கத்தை வாங்கிக் குவிக்கவில்லை. கடந்த ஆகஸ்டில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள், வாங்கிய தங்கத்தை விட, விற்ற தங்கம் அதிகம் என்கிறது உலக தங்க கவுன்சில். உலகின் மிகப் பெரிய தங்க டிரஸ்டான எஸ் பி டி ஆர் கோல்ட் ட்ரஸ்டின் கையிருப்புகளும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு தடையாக இருக்கலாம். பொதுவாகவே ஒரு பொருளின் தேவை குறைந்தால் விலை குறையத் தானே செய்யும்?

தங்கம் விலை எதிர்காலத்தில் என்ன ஆகும்
இப்போதைக்கு தங்கம் விலை, தடுமாறிக் கொண்டு இருக்கிறது. ஏற்றம் காணுமா, இறக்கம் காணுமா என ஒரு தெளிவில்லாமல் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அனலிஸ்ட்கள் சொல்வது போல, தங்கம் விலை 1,900 முதல் 1,920 டாலருக்கு மேல் வலுவாக வர்த்தகமாகத் தொடங்கினால், தங்க விலை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது எனலாம்.

சூப்பர் ஏற்றம் காணும்
பல்வேறு தரகு நிறுவனங்கள் மற்றும் அனலிஸ்ட்கள் தங்கம் விலை அதீத ஏற்றம் காணும் எனச் சொல்லி இருக்கிறார்கள். உலக பொருளாதார சூழல், அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை போன்ற பிரச்சனைகளால் தங்கம் விலை ஒரு நல்ல ஏற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கலாம்.