இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல்-ன் பார்தி ஏர்டெல் புதிய வர்த்தகத்திற்காகவும், புதிய வாடிக்கையாளர்களுக்காகவும் கடுமையாகப் போட்டிப் போட்டு வருகிறது, குறிப்பாக 4ஜி சேவையில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும் சூழ்நிலையில் கிட்டதட்ட 2 வருடமாக முடங்கியிருந்த வர்த்தகச் சந்தை தற்போது திறக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஆகஸ்ட் 2019 முதல் 4ஜி சேவை முடக்கி வைக்கப்பட்டு இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மத்திய அரசு மொத்த ஜம்மு காஷ்மீர் பகுதிக்கும் 4ஜி சேவையை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

4ஜி டெலிகாம் சேவை
ஜம்மு காஷ்மீர் பகுதியில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக இந்திய மக்கள் அனைவரும் அனுபவித்து வரும் அதிவேக 4ஜி இண்டர்நெட் சேவையை இப்பகுதி மக்கள் பெற முடியாமல் சுமார் 2 வருட காலம் தவித்தனர்.
தற்போது இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருக்கும் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான டெலிகாம் வாடிக்கையாளர்கள் அதிவேக 4ஜி சேவை பெற்ற முடியும்.

2.8 பில்லியன் டாலர்
பிரிட்டன் நாட்டின் இண்டர்நெட் பாதுகாப்பு ஆராய்ச்சி துறை அமைப்பான டாப்10விபிஎன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 2020ஆம் ஆண்டில் உலகில் சுமார் 21 நாடுகளில் ஏற்பட்ட இண்டர்நெட் சேவை முடக்கத்தின் வாயிலாக ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளில், இந்தியா சுமார் 2.8 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இண்டர்நெட் முடக்கம்
உலகில் எந்த ஒரு நாடுகளிலும் இல்லாத வகையில் இந்தியாவில் பல பகுதிகளில் இண்டர்நெட் முடக்கப்பட்டு உள்ளதாகவும், 2020ல் இப்பட்டியலில் இருக்கும் 20 நாடுகளை விடவும் சுமார் 75 மடங்கு அதிக மணிநேரம் இண்டர்நெட் சேவை இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது என்றும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடத்தக்கது.

ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல்
தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதி மக்களுக்கு 4ஜி சேவை கிடைத்துள்ளதன் மூலம் இப்பகுதியில் இருந்து புதிதாக 4ஜி வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் பெற முடியும். இதனால் இந்நிறுவனங்களின் வர்த்தகம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் கன்சால்
4ஜி சேவை அளிக்கப்பட்டுள்ளது குறித்து ஜம்மு காஷ்மீர் பகுதி நிர்வாகத்தின் தலைமைச் செயலாளர் ரோஹித் கன்சால், ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி மொபைல் இண்டர்நெட் சேவை திரும்ப அளிக்கப்பட்டு உள்ளது எனத் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
உமர் அப்துல்லா
இவரைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர்-ன் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா 4ஜி முபாரக்! ஆகஸ்ட் 2019க்குப் பின் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர்-ல் 4ஜி மொபைல் டேட்டா கிடைத்துள்ளது எனவும் டிவிட் செய்துள்ளார்.