தமிழ்நாடு அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மூலம் தொடர்ந்து புதிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்ப கட்டுமானம், போக்குவரத்து, வீட்டு வசதி, நகர மேம்பாடுகள் போன்ற பல திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இவை அனைத்தும் முழுமையாக வெற்றி அடைய வேண்டும் என்றால் போதுமான ஊழியர்களை இருந்தால் மட்டுமே முடியும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் இரண்டையும் இணைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சொந்தமாக வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
20000 ஹெக்டர் நிலத்தை கைப்பற்றிய தமிழ்நாடு அரசு.. எதற்காக தெரியுமா..?

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு அமைப்புப் புதிதாக ஒரு ஜாப் போர்ட்டல் அதாவது நிறுவனத்தையும், மக்களையும் இணைக்கும் ஒரு வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. விரைவில் இந்தத் தளத்தைத் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் துவக்கிவைப்பார் என அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு தேடல் தளம்
தமிழ்நாட்டு அரசுக்கு தற்போது நல்ல தேடுதல் அம்சத்துடன் கூடிய வேலைவாய்ப்பு தேடல் தளம் தேவை இருக்கும் நிலையில் விரைவில் இதை அரசு அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜே இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

ப்ளூ காலர் வேலைவாய்ப்புகள்
தமிழ்நாட்டில் ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளில் (அதாவது பட்டப்படிப்பு தேவைப்படாத வேலைவாய்ப்புகள்) பங்குபெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் பெரும் கவலையாக இருக்கிறது.

அடிப்படை காரணம்
இத்தகைய ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை விரும்பி எடுக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சனைக்கான அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து மக்களை வேலைவாய்ப்பு சந்தைக்குள் கொண்டு வர முயற்சியில் கொண்டு வரப்பட்டது தான் இந்தப் புதிய வேலைவாய்ப்பு தேடல் தளம்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தமிழக அரசு பல வருடமாக விவசாயத் துறை உட்படப் பல துறையில் மக்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் படித்த மாணவர்களுக்கு ஐபிஎம், டிசிஎல், ஹெச்சிஎல் உடன் இணைந்து பல பிரிவுகளிலும், தொழில்நுட்பத்திலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி
இதேபோல் பல தனியார் நிறுவனங்களும், அமைப்புகளும் தானாக முன்வந்து இத்தகைய பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பு சந்தைக்குத் தேவையான திறன்கள் மக்களுக்குக் கிடைத்துவிடும் பட்சத்திலும், அதிகளவிலான பெண்கள் வேலைவாய்ப்பு சந்தைக்கு வரும் பட்சத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அளவு புதிய உச்சத்தைத் தொடும்.