இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே ஜியோவின் அறிமுகத்தால் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், 20 வருடங்களாக அரசை ஏமாற்றியும், பல்வேறு காரணங்களைக் கட்டி அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் ஏமாற்றி வந்தது தற்போது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
மத்திய டெலிகாம் துறைக்கு டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 1,69,000 கோடி ரூபாயை கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தற்போது டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்தப் பிரச்சனையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஐடியா வோடபோன் போன்ற நிறுவனங்கள் வர்த்தகத்தை முழுவதுமாக மூடவும் வாய்ப்புள்ளது.
இதனால் இந்திய டெலிகாம் துறையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், டெலிகாம் நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ள உள்நாட்டு முதலீட்டாளர்கள், ஊழியர்கள் வரையில் அனைவரும் பயத்தில் உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை 20 டாலர் வரை குறையும்.. ஆனா பெட்ரோல் விலை..?!

1.69 லட்சம் கோடி ரூபாய்
புதன்கிழமை மத்திய தொலைத்தொடர்புத் துறை, டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய AGR கட்டணத்தை மறு கணக்கீடு செய்துகொள்ள அனுமதி வழங்கியதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி, அரசு மற்றும் மத்திய டெலிகாம் அமைச்சகத்தை 1.69 லட்சம் கோடி ரூபாய் கணக்கிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நிதியை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இது இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

வோடபோன் ஐடியா
மத்திய தொலைத்தொடர்பு துறை கொடுத்து அனுமதியின் பேரில் வர்த்தகச் சிக்கலில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா AGR கட்டணத்தை மறுகணக்கீடு செய்தது.
இதன் அடிப்படையில் மத்திய டெலிகாம் துறை கணக்கீட்டின் படி வோடபோன் 58,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும், ஆனால் வோடபோன் ஐடியாவின் கணக்கிட்ட படி மத்திய அரசு தாங்கள் செலுத்த வேண்டிய தொகை 21,533 கோடி ரூபாய் மட்டும் தான் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

மோசடி கணக்கு
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மறுகணக்கீட்டை பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கணக்கீட்டுத் தொகையில் பெரிய அளவிலான மாற்றும் இருக்கிறது, இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய தொலைத்தொடர்பு துறை கொடுத்து அனுமதியை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மறுகணக்கீட்டை மோசடி கணக்கு என்றும் விமர்சனம் செய்துள்ளது.

AGR கட்டணம்
தற்போது கணக்கிடப்பட்டுள்ள நிலுவை தொகை, ஸ்பெக்ட்ரம்-க்கான தொகை, உரிமத்திற்கான தொகை, அபராதம், வட்டி ஆகியவற்றைச் சேர்த்து தான் AGR கணக்கிடப்பட்டுள்ள இதை எந்த வகையிலும் மறுகணக்கீடு செய்ய டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள்
இதன் மூலம் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எக்காரணத்தைக் கொண்டும் 1,69,000 கோடி ரூபாய் AGR கட்டணத்தைச் செலுத்தாமல் தப்பிக்க முடியாது எனத் தெரிகிறது.