கடந்த வாரத்தில் பெங்களூரில் வெளுத்து வாங்கிய மழையால் இந்தியாவின் சிலிக்கான் வேலியே ஸ்தம்பித்து போயுள்ளது எனலாம். இதனால் பெங்களூரில் அமைந்துள்ள ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களும் பெரும் சவால்களை எதிர்கொண்ட நிலையில், பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுக்கு தெரிவித்துள்ளன.
மேலும் தங்களது இழப்பினை ஈடுகட்ட நிவாரணம் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரத்திலேயே ஐடி நிறுவனங்கள் 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியிருந்தன.

WFH or WFO?
இதற்கிடையில் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியாவின் சிலிக்கான் வேலியில் பெங்களூரில் வெள்ளத்தால் ஊழியர்கள் மீண்டும் வீட்டில் இருந்து பணியாற்றுவதா? அல்லது மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புவதா? என்ற பெரும் விவாதமே எழுந்துள்ளது.

ஐடி நிறுவனங்களின் அறிவிப்பு
விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐடி ஜாம்பவான்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் உள்ளிட்ட பலவும், தங்களின் ஊழியர்களின் நலன் கருதி வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதி கொடுத்துள்ளன.
எனினும் இது இப்படியே தொடருமா? தற்போது பெங்களூரில் என்ன நிலை? அலுவலகத்திற்கு எப்போது திரும்புவது என்பது குறித்தான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக தெரிகின்றது.

நிலைமை எப்படியுள்ளது?
இந்தியா வானிலை ஆய்வுத் துறையின் தரவுகளின் படி, கடந்த திங்கட்கிழமையன்று 24 மணி நேரத்தில் 131.6 மி.மீ மழை பெய்தது. இது கடந்த 2014-க்கு பிறகு கனத்த மழை பெய்த நாளாக அமைந்தது. இதன் காரணமாக ஐடி ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் டிராக்டர்களில் படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களின் கருத்து என்ன?
ஐடி ஊழியர்களின் நிலைமை பரிதாபம். ஊழியர்கள் நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி புரிய அனுமதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊழியர்கள் தரப்பில் இதுபோன்ற சவாலான காலகட்டத்தில் அலுவலகத்தில் சென்று பணிபுரிவதால் அதிக நேரம் செலவாகிறது. இதனால் உற்பத்தி திறனும் பாதிக்கிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி போக இரண்டு மணி நேரம், வர இரண்டு மணி நேரம் ஆகிறது. இது நேரத்தை மட்டுமல்ல, ஊழியர்களின் ஆற்றலையும் வீணடிக்கிறது.

ஐடி ஜாம்பவான்களின் முடிவென்ன?
ஐடி ஜாம்பவான்களான விப்ரோ மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து பணி என்ற ஆப்சனை கொடுத்துள்ளன. இது தவிர கோல்டுமேன் சாச்சஸ், மார்கன் ஸ்டேன்லி உள்ளிட்ட நிறுவனங்களும் வீட்டில் பணிய புரிய கூறியுள்ளன.

மழை நீடிக்கலாம்
இந்த நிலைமை இனி வரவிருக்கும் நாட்களில் நிலைமையை கருத்தில் கொண்டு, முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. IMD இனி வரவிருக்கும் நாட்களில் இன்னும் மழை நீடிக்கலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், ஊழியர்கள் மத்தியில் வீட்டில் இருந்து பணியை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.