சம்பளம் பெற்ற சில தினங்களிலேயே பலரும் கடன் வாங்கும் சூழல் தான் இன்றைய சம்பளதாரர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இன்னும் தெளிவாக சொல்லபோனால் சம்பளம் வாங்கிய முதல் சில நாட்கள், ராஜாவாக வலம் வருபவர்கள், அடுத்த சில வாரங்களில் அன்றாட செலவுக்கே தள்ளாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த சமயத்தில் கடன் கிடைக்குமா? என அல்லாடுவார்கள். ஆக சம்பளம் வாங்க தொடங்கியது முதல் முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
அப்படி செய்யும் போது குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டுவது எப்படி? என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வியே. இப்படி முதலீடு செய்யும்போது அவசியம் கவனிக்க வேண்டிய திட்டங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பல்வேறு முதலீட்டு திட்டங்கள்
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றில் எது சிறந்தது? எதில் முதலீடு செய்யலாம்? அப்படி செய்யும் போது எந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும். எது பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். வாருங்கள் பார்க்கலாம்.

பிரித்து முதலீடு செய்யுங்கள்
நீங்கள் செய்யும் முதலீட்டினை ஒரே ஃபண்டில் செய்யாமல் பிரித்து முதலீடு செய்யுங்கள். பல துறைகளில் பிரித்து செய்யுங்கள். இது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ரிஸ்கினை குறைக்க வழிவகுக்கும். லாபமும் சீராக இருக்கும். பிரித்து முதலீடு செய்யும்போது ஒரு துறை சரிவினைக் கண்டால், மற்ற துறைகள் மூலம் பேலன்ஸ் செய்ய முடியும். ஆக எப்போதும் உங்கள் முதலீட்டினை பிரித்து முதலீடு செய்வது நல்லது.

ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்
முதலீட்டினை செய்யும்போது அதனை பற்றிய தெளிவான புரிதல் என்பது இல்லாமல் செய்யாதீர்கள். உதாரணத்திற்கு ஒரு பங்கினை தேர்வு செய்கிறீர்கள் எனில் அதன் வரலாறு என்ன? இதற்கு முன்பு எந்தளவுக்கு லாபம் கொடுத்துள்ளது. நீங்கள் செய்யும் முதலீடு எந்த துறையை சேர்ந்தது. இதற்கான தேவை என்பது எந்தளவுக்கு உள்ளது, நிறுவனத்தின் பின்னணி என்ன? கடன் நிலவரம்? வருவாய் நிலவரம் என்ன என பலவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதே ஏதேனும் ஃபண்ட் எனில், அது எந்த வகையான ஃபண்ட் , இதில் எதில் எல்லாம் முதலீடு செய்யப்படுகிறது. இதன் முந்தைய லாபம் எவ்வளவு? என பலவற்றையும் முழுமையான ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீண்டகால முதலீடு
நீங்கள் முதலீடு செய்யும்போது அதனை நீண்டகால முதலீடாக திட்டமிடுவது அவசியம். தொடர்ந்து முதலீட்டாளர்கள் சேமிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். நீண்டகால நோக்கில் மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்கும்போது, அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். இதற்கு முதலீட்டு காலம் என்பது மிக அவசியம்.

அப்டேட் ஆக இருங்கள்
சந்தையில் எந்த மாதிரியான மாற்றங்கள் வருகின்றது என்பதை கவனியுங்கள். முடிந்த மட்டில் அனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் முதலீடு செய்யும் பண்டுகள் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்ட் சரியாக செயல்படவில்லை என்றால், வேறு ஃபண்டிற்கு மாற்றலாம்.

முதலீட்டினை வளர விடுங்கள்
மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காண வேண்டுமெனில், நீண்டகாலம் முதலீடினை அப்படியே வைத்திருக்க வேண்டும். ஆக மிக பொருமையாக இருக்க வேண்டும். உங்கள் பணத்தினை கடுமையாக உழைக்க விடுங்கள். சந்தை போக்கால் ஈர்க்கப்பட்டு, முழுமையாக எதையும் தெரியாமல் முதலீடு செய்யாதீர்கள். நீண்டகால முதலீடுகள் என்பது நிச்சயம் ஏற்ற இறக்கத்தினை காணும். ஆக அதற்கு செவி சாய்க்காமல், நீண்டகால நோக்கில் உங்கள் முதலீட்டில் வளர விடுங்கள்.

கோடீஸ்வரர் பாதை
மேற்கண்ட 5 யுக்திகளைக் சரியாக செய்தாலே உங்கள் முதலீடானது வளர்ச்சி காணத் தொடங்கி விடும். அப்படி செய்யும் முதலீட்டினை மியூச்சுவல் ஃபண்டு, எஸ் ஐ பி மூலம் முதலீடு செய்வதன் மூலம் மிகபெரிய கார்பஸ் இலக்கினை அடைய முடியும். இதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் என்ற பாதையை தொட்டு விட முடியும்.