மாத சம்பளக்காரர்கள் Gig Economy-யை பயன்படுத்துவது எப்படி? இதிலுள்ள நன்மை என்ன..?

By N. Chokkan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்பெல்லாம் கல்லூரியில் படிக்கிற பலருடைய உடனடிக் கனவு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்பதுதான். அதன்பிறகு அங்குப் படிப்படியாக வளரவேண்டும், பதவி உயர்வு பெறவேண்டும், சம்பளம் கூடவேண்டும், வெளிநாடு செல்லவேண்டும் என்பது போன்ற கனவுகள் வரும். ஆனால் அவையும் அந்த முதல் வேலையை அடித்தளமாகக் கொண்டுதான் அமையும்.

 

இன்னொருபக்கம், தொழில் முனைவோராக வேண்டும் என்று கனவு காண்கிறவர்களும் இருப்பார்கள். இவர்கள் இன்னொருவரிடம் சம்பளம் பெறுவதைவிட நாம் பலருக்குச் சம்பளம் தருகிறவர்களாக மாறவேண்டும் என்கிற முனைப்புடன் செயல்படுவார்கள்.

2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய டாப் 10 நாடுகள்! 2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய டாப் 10 நாடுகள்!

புதிய வேலைவாய்ப்பு

புதிய வேலைவாய்ப்பு

கடந்த சில ஆண்டுகளில், இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு வகையும் வந்திருக்கிறது. இவர்கள் மற்றவர்களுக்கு வேலை செய்வார்கள், ஆனால், அவர்களிடம் மாத சம்பளம் பெற்றுக்கொண்டு நிரந்தரமாக இணைந்துவிடுவதில்லை. அதற்குப்பதிலாக, ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து தருவது, அதற்கு உரிய மதிப்பூதியத்தைப் பெற்றுக்கொள்வது, அதன்பிறகு வேறு பணி இருந்தால் தொடர்வது, இல்லாவிட்டால் வேறொரு வாடிக்கையாளரிடம் செல்வது என்கிற அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். இதன்மூலம் இவர்களுக்கு வருவாயும் வரும், விரும்பியதைச் செய்கிற சுதந்திரமும் பறிபோய்விடாது.

உதாரணம்

உதாரணம்

எடுத்துக்காட்டாக, நீங்கள் பிரமாதமான ஜாவா நிரலாளர் (டெவலப்பர்) என்று வைத்துக்கொள்வோம். அந்தத் திறமையின்மூலம், ஜாவா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிரல்கள் எழுதுகிறவர்களை வேலைக்குச் சேர்க்கும் ஒரு நிறுவனத்தில் நீங்கள் சேரலாம். அந்தக் கணத்திலிருந்து, அவர்கள் தரும் வேலைகளில் தான் நீங்கள் பணியாற்ற வேண்டும், அது உங்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, அதுதான் உங்கள் வேலை. அதற்கு அவர்கள் நிர்ணயிப்பதுதான் சம்பளம். இதில் நீங்கள் கொஞ்சம் பேரம் பேசலாம், வேறு வேலையை மாற்றிக்கொடுங்கள், இன்னும் கொஞ்சம் சம்பளம் வேண்டும் என்றெல்லாம் கேட்கலாம், ஆனால் அவையெல்லாம் ஓரளவுதான் செல்லுபடியாகும்.

ஃப்ரீலேன்சர் ஊழியர்
 

ஃப்ரீலேன்சர் ஊழியர்

மாறாக, அதே ஜாவா திறமையைக் கொண்டு நீங்கள் ஒரு சுதந்திரமான பணியாளராக (Freelancing Developer) அமர்ந்துவிட்டால், அதே நிறுவனத்திடம் வேலை அடிப்படையில் பணியாற்றலாம். 'இந்த வேலை எனக்குப் பிடித்திருக்கிறது, இத்தனை நாளில் இந்த அளவு சிறந்த தரத்துடன் செய்து தருகிறேன், அதற்கு என் கட்டணம் இவ்வளவு' என்று பேசிக்கொள்ளலாம். ஒருவேளை அந்த வேலை மனத்துக்குப் பிடிக்காவிட்டால் வேறு நிறுவனத்தைத் தேடிச் சென்றுவிடலாம்.

இதுதான் Gig Economy

இதுதான் Gig Economy

இப்படி நிரல் எழுதுதல், தர உறுதிப்படுத்தல், இணையத் தளங்கள், மொபைல், கணினிச் செயலிகளை வடிவமைத்தல், சந்தைப்படுத்தல் பணிகள், சமூக ஊடகப் பணிகள், ஆசிரியர்/பயிற்றுநர் பணிகள் என்று இன்னும் பலவற்றையும் சம்பளத்துக்குச் செய்யாமல் தனிப்பட்ட முறையில் செய்கிறவர்கள் மிகுதியாகிவிட்டார்கள். இவர்களைக் கொண்டு Gig Economy எனப்படும் பணி அடிப்படையிலான பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

Gig Economyயால் நமக்கு என்ன நன்மை?

Gig Economyயால் நமக்கு என்ன நன்மை?

 

1. பிடித்த வேலைகளை மட்டும் செய்யலாம்.
2. அவற்றை நமக்கு விருப்பமான நேரத்தில் செய்யலாம். விருப்பமில்லாவிட்டால் ஓய்வு எடுக்கலாம், ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் அலுவலகத்துக்கு வந்து அமர்ந்தாக வேண்டும் என்று யாரும் நமக்குக் கட்டளை போடமுடியாது. வீட்டிலிருந்து ஒரு நாளைக்குச் சில மணி நேரம் மட்டும் பணியாற்ற விரும்புகிற இல்லத்தரசிகள் போன்றோருக்கு இது மிகவும் வசதி.


3. நம் பணிக்கான ஊதியத்தை நாம் தீர்மானிக்கலாம். அதை ஏற்றுக்கொள்கிறவர்களுடன் மட்டும் பணியாற்றலாம்.
4. எந்த இடத்தில் இருந்தபடியும் எந்த நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுடனும் பணியாற்றலாம். அதாவது, நம்முடைய சந்தை விரிவடைகிறது.
5. திறமைக்கு முழு மதிப்பு கிடைக்கும்.

இதனால் நிறுவனங்களுக்கு என்ன நன்மை?

இதனால் நிறுவனங்களுக்கு என்ன நன்மை?

1. ஒவ்வொரு திறனுக்கும் சில குறிப்பிட்ட நபர்களை வேலைக்குச் சேர்த்துச் சம்பளம் கொடுக்கவேண்டியதில்லை. தேவையுள்ள நேரங்களில் சரியான நபர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், உரிய ஊதியத்தைச் செலுத்திவிடலாம்.

2. சம்பளம் நீங்கலான மற்ற ஊழியர் நன்மைகளுக்கு (அலுவலக வாடகை, கணினி, சேம நிதி, காப்பீடு போன்றவை) செலவு ஏதுமில்லை.
3. குறுகிய நேரத்தில் நிறையப் பேரை வேலைக்கு அமர்த்தி முக்கியமான வேலைகளை விரைவாகச் செய்யலாம்.
4. தெளிவான ஒப்பந்தங்களின் அடிப்படையில் பணியாற்றுவதால் கொடுக்கிற காசுக்கு ஏற்ற பலன் (தரம்) கிடைக்கும்.

நியூ நார்மல்

நியூ நார்மல்

இப்படி Gig Economyல் இருதரப்பினருக்கும் நன்மைகள் இருப்பதால் எல்லாத் துறைகளிலும், குறிப்பாக, இணையத்தின் மூலம் செய்யக்கூடிய வேலைகள் மிகுதியாக உள்ள துறைகளில் இது விரைவாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பலரும் வழக்கமான (அதாவது, வேலைக்குச் சென்று இன்னொருவரிடம் சம்பளம் பெறுகிற) பணியைவிட இது சிறப்பானது என்று கருதத் தொடங்கியிருக்கிறார்கள்.

வெற்றி

வெற்றி

ஆனால், இந்தத் துறையில் நுழைகிற எல்லாரும் வெற்றியடைந்து விடுவதில்லை. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், இந்தப் பண்புகள் உள்ளவர்கள்தான் வெல்கிறார்கள், தாங்கள் ஒரு வழக்கமான வேலைக்குச் சென்று பெறக்கூடிய சம்பளத்தைவிடச் சில மடங்கு கூடுதலாகச் சம்பாதிக்கிறார்கள், அத்துடன் நேரச் சுதந்திரத்தையும் அனுபவிக்கிறார்கள்:

சுதந்திரம்

சுதந்திரம்

1. சொன்ன வாக்கைக் காப்பாற்றவேண்டும். இந்த நேரத்தில் வேலையை நிறைவு செய்கிறேன் என்றால் அந்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும். ஏதாவது பிரச்சனை என்றால் முன்கூட்டியே சொல்ல வேண்டும். கடைசி நேரத்தில் காணாமல் போய்விடக்கூடாது.

2. தரம். அது இல்லாவிட்டால் எதுவும் இல்லை.
3. நெகிழ்வுத்தன்மை. அதாவது, 'என் வேலை நிறைவடைந்துவிட்டது, இனி நீங்கள் யாரோ, நான் யாரோ' என்று நினைக்காமல் வாடிக்கையாளர் கேட்கிற சிறிய, பெரிய திருத்தங்களை முகம் கோணாமல் செய்துகொடுப்பது. (அவை உங்களுடைய பிழைகள் இல்லை என்றால் திருத்தங்களுக்கு உரிய கூடுதல் கட்டணத்தையும் பெற்றுக்கொள்ளலாம், இலவசமாகச் செய்யவேண்டியதில்லை.)
4. தொடர்ந்த, வெளிப்படையான தகவல் தொடர்பு
5. ஒவ்வொரு பணியையும் வாடிக்கையாளருடைய கோணத்திலிருந்து பார்த்துப் புரிந்துகொண்டு செயல்படுவது. அதாவது, கொடுத்த வேலையை மட்டும் செய்யாமல் அது ஏன் செய்யப்படுகிறது என்று சிந்தித்துச் செயல்படுவது, அவர்களுக்குக் கூடுதல் கருத்துகளைச் சொல்லி உதவுவது, அவர்களுடைய குழுவின் ஓர் உறுப்பினரைப் போலவே நடந்து கொள்வது.

முதன்மைப் பண்புகள்

முதன்மைப் பண்புகள்

இவற்றுக்கு வெளியில் ஒவ்வொரு ஃப்ரீலான்சருக்கும் இருக்க வேண்டிய மேலும் இரண்டு முதன்மைப் பண்புகள்:

1. விரைவாகக் கற்றுக்கொள்வது. அதாவது, நம்மிடம் இருக்கும் திறமைகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டும் கூர்தீட்டிக்கொண்டும் இருப்பது.
2. என்னதான் சுதந்திரமாகச் செயல்படுகிறோம் என்றாலும் ஒவ்வொரு நிமிடமும் வேலையில் மூழ்கியிருக்காமல் போதுமான ஓய்வு எடுத்துக்கொண்டு உடலை, மனத்தை நலத்துடன் பார்த்துக் கொள்வது.

வளர்ச்சி..!

வளர்ச்சி..!

சுருக்கமாகச் சொன்னால், திறமையுடன் Professionalism எனப்படும் தொழில் சார்ந்த மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், வாழ்க்கை ஒழுங்கும் வேண்டும். இவற்றைச் செய்துவிட்டால், இனி வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிதாக வளரப்போகும் Gig Economyஐ நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம், பெரிய அளவில் முன்னேறலாம், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How IT employees can use Gig Economy; What are the benfits and requirements

How IT employees can use Gig Economy; What are the benfits and requirements ஐடி ஊழியர்கள் Gig Economyயை பயன்படுத்துவது எப்படி?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X