உக்ரைன் மீதான போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யாவிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேறிய நிலையில் தற்போது 17 வருடமாக ரஷ்யாவில் வணிகம் செய்த பிரிட்டனைச் சேர்ந்த மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனம் வெளியேற முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் நிறுவனமான மார்க்ஸ் & ஸ்பென்ஸர் கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் இருந்து வெளியேற முடிவு செய்தது.
ஆனால் இந்நிறுவனம் அவுட்சோர்ஸ் முறையில் மூன்றாம் தரப்பு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து இருந்ததால் உடனடியாக வெளியேற முடியாத சட்ட சிக்கல் ஏற்பட்டது.
ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் அதிக லாபம் பார்த்த ரிலையன்ஸ்.. எப்படி தெரியுமா..?

மார்க்ஸ் & ஸ்பென்ஸர்
மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனத்திற்கு ரஷ்யாவில் 48 கடைகள் உள்ளன. இந்த கடைகளை துருக்கியை சேர்ந்த பிஃபா என்ற நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தி வந்தது.

ரஷ்யாவில் இருந்து வெளியேற்றம்
இந்த நிலையில் தற்போது சட்ட சிக்கல்கள் அனைத்தும் நீங்கிய நிலையில் 17 வருடங்கள் கழித்து ரஷ்யாவில் இருந்து முழுமையாக வெளியேற மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் செலவு
ரஷ்யாவில் இருந்து வெளியேறி வேறு நாட்டுக்கு இந்த நிறுவனத்தை மாற்றுவதால் இந்நிறுவனத்திற்கு சுமார் 33 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை
இது குறித்து மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது, 'உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உக்ரைனில் உள்ள எங்களுடைய பல வணிகங்கள் மூடப்பட்டது. ஆனால் முடிந்தவரை அந்நாட்டில் எங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு உக்ரைனில் சேவை செய்து வருகிறோம்.

விற்பனை இல்லை
ஆனால் ரஷ்யாவில் உள்ள வணிகத்தை துரதிஷ்டவசமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இனி ரஷ்யாவில் மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனத்தின் பிராண்ட்கள் விற்பனை செய்யப்படாது என்றும் அந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில நிறுவனங்கள்
மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனத்தின் இந்த முடிவு ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், உக்ரைன் நாட்டின் மீதான போர் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனத்தை அடுத்து வேறு சில நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.