அமெரிக்காவிலேயே மிகப்பெரிய பணக்கார நிறுவனம் எது தெரியுமா..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

உலகின் வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்கா, உலகின் மிகப்பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. உலகின் பெரும் பணக்காரர்களும், அதீத பணபலம் படைத்த நிறுவனங்களும் பெரும்பாலும் அமெரிக்காவில் தான் உள்ளனர்.

வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்நிறுவனங்கள் அமெரிக்கப் பொருளாதாரம், அமெரிக்க மக்கள் மற்றும் சர்வதேச சந்தை ஆகியவற்றின் மீது தம் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

செல்வம் கொழிக்கும் இந்நிறுவனங்களுள் பெரும்பாலானவை கோடிக்கணக்கான டாலர்களை ஆண்டு வருமானமாக ஈட்டுவதுடன், அதில் கணிசமான அளவு பணத்தை கடல் கடந்து பல நாடுகளிலும் முதலீடு செய்துள்ளன.

இப்படி 2017 ஆண்டின் டாப் 10 பணக்கார அமெரிக்க நிறுவனங்களை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.

10. ஃபோர்டு மோட்டார் - 151.8 பில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்காவின் செல்வம் கொழிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான ஃபோர்டு மோட்டார், பல்வேறு வித ஆட்டோமொபைல்களை உருவாக்குவதோடு, அவற்றை உலகெங்கிலும் விற்பனை செய்தும் வருகிறது. 1903 ஆம் ஆண்டில் ஹென்றி ஃபோர்டு என்பவரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தன் தலைமையகத்தை மிச்சிகனில் அமைத்துக்கொண்டுள்ளது. வாகன உற்பத்தியைப் பொறுத்தவரை, ஃபோர்டு மோட்டார் நிறுவனம், அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாகவும், உலகின் ஐந்தாவது பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது.

20 லட்சம் ஊழியர்கள்

உலகம் முழுவதிலும் 90 உற்பத்தி தொழிற்சாலைகளையும், உற்பத்தி மையங்களையும் கொண்டிருக்கும் இந்நிறுவனம் வருடத்துக்கு ஏறத்தாழ 6 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கும் ஃபோர்டு நிறுவனம் ஒரு ஃபார்ச்யூன் 500 நிறுவனமாகும். இதன் ஆண்டு வருமானம் சுமார் 151.8 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

9. ஏடி&டி - 163.8 பில்லியன் டாலர்

அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான ஏடி&டி இன்க், டிஜிட்டல் டெலிவிஷன், பிராட்பேண்ட் இன்டெர்நெட் ஆக்செஸ் மற்றும் டிஜிட்டல் ஹோம் செக்யூரிட்டி போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மொபைல் டெலிஃபோன் சேவைகள் நிறுவனமாக விளங்கும் இது, ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் உலகின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் திகழ்கிறது. அமெரிக்காவில் சுமார் 26 மில்லியன் பேரும், இதர பல நாடுகளில் சுமார் 19 மில்லியன் பேரும் இந்நிறுவனத்தின் சேவைகளை உபயோகித்து வருகின்றனர்.

ஃபார்ச்யூன் 500 நிறுவனங்கள்

134 மில்லியன் மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் யுனைட்டெட் ஸ்டேட்ஸில் பே டிவி சேவைகள் வழங்குவதில் முன்னணியில் உள்ளது. மேலும், இந்நிறுவனம் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட இடங்களில் அதி-வேக இன்டெர்நெட் சேவைகளையும் வழங்கி வருகிறது. ஃபார்ச்யூன் 500 நிறுவனங்களுள் ஒன்றான ஏடி&டி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 163.8 பில்லியன் டாலர்கள்.

8. ஜெனரல் மோட்டார்ஸ் - 166.3 பில்லியன் டாலர்

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்கள் மற்றும் அவற்றின் பாகங்களை உருவாக்கி, தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. டெட்ராயிட்டின் மிச்சிகனில் உள்ள இந்நிறுவனம் வில்லியம் ஸி. ட்யூரன்ட் என்பவரால் 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஜிஎம் சுமார் 35 நாடுகளில் ஜிஎம்ஸி, காடில்லாக், பாவ்ஜன், ஹெச்எஸ்வி, ஓப்பல் மற்றும் ப்யூக் என்ற பலவேறு ப்ராண்டுகளில் ஆட்டோமொபைல் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

166.3 பில்லியன் டாலர் வருமானம்

2016 ஆம் ஆண்டில் இதன் உற்பத்தி அளவு சுமார் 9,958,000 வாகனங்களாகும். இவ்வருடத்தின் போது இந்நிறுவனம் ஈட்டிய ஆண்டு வருமானம் சுமார் 166.3 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்காவின் முதன்மையான 10 பணக்கார நிறுவனங்களுக்கான நமது பட்டியலில் ஜிஎம் எட்டாவது இடத்தைப் பிடித்திருப்பதற்கு இதுவே காரணம்.

7. ஸிவிஎஸ் ஹெல்த் - 177.5 பில்லியன் டாலர்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹெல்த் அண்ட் ரீடெயில் நிறுவனமான ஸிவிஎஸ் ஹெல்த், மருந்தாக்கவியல் (ஃபார்மஸி) மற்றும் உடல்நலப் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. ஃபார்மஸி ஹெல்த்கேர் வழங்குவதில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஸிவிஎஸ், அமெரிக்கா முழுவதிலும் சுமார் 9700 -க்கும் மேற்பட்ட இடங்களில் ரீடெயில் மையங்களை அமைத்துள்ளது.

பல துணை நிறுவனங்கள்

250,000 ஊழியர்களை பணியமர்த்தியுள்ள இந்நிறுவனம் சுமார் 177.5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வருகிறது. ஸிவிஎஸ் ஃபார்மஸி, மினிட்கிளினிக், ஸிவிஎஸ் கேர்மார்க், ஸிவிஎஸ் ஸ்பெஷாலிட்டி மற்றும் இதர பல துணை நிறுவனங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் அமெரிக்காவின் வளம் கொழிக்கும் முதன்மையான 10 நிறுவனங்களுள் ஒன்றாகும்.

6. யுனைட்டெட் ஹெல்த் குரூப் - 184.8 பில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்க ஹெல்த்கேர் நிறுவனமான யுனைட்டெட் ஹெல்த், உடல்நலம் சார்ந்த தன் சேவைகளை யுனைட்டெட்ஹெல்த்கேர் மற்றும் ஆப்டம் என்ற இரண்டு வகை வர்த்தகங்களின் மூலம் வழங்கி வருகிறது.

அமெரிக்காவில் சுமார் 80 மில்லியனுக்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கும், உலகின் இதர நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 மில்லியன் நபர்களுக்கும், தன் சேவைகளை வழங்கியுள்ளது இந்நிறுவனம். அமெரிக்காவின் முன்னணி ஹெல்த்கேர் இன்ஷூரன்ஸ் நிறுவனமான இது 2016 ஆம் ஆண்டின் போது சுமார் 184.8 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது.

 

5. மெக்கெஸ்ஸன் - 190.8 பில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்காவில் அதிக வருமானம் கொழிக்கும் நிறுவனங்களுள் மெக்கெஸ்ஸன் நிறுவனமும் ஒன்று. கேர் மேனேஜ்மென்ட் டூல்ஸ், மெடிக்கல் சப்ளைஸ் மற்றும் ஹெல்த் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற பலவகை சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம் அமெரிக்காவின் சிறந்த ஃபார்மசூட்டிகல் நிறுவனங்களுள் ஒன்றாகும்.

1833ஆம் ஆண்டு

சார்லஸ் ஓல்காட் மற்றும் ஜான் மெக்கெஸ்ஸன் ஆகியோரால் 1833 ஆம் வருடம் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அயர்லாந்து, ஃபிரான்ஸ் மற்றும் யுனைட்டெட் கிங்டம் உள்ளிட்ட பல நாடுகளில் அதன் அலுவலகங்களை அமைத்து இயங்கி வருகிறது. ஃபார்ச்யூன் குளோபல் 500 நிறுவனமான இதன் ஆண்டு வருமானம் சுமார் 190.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

4. ஆப்பிள் - 215.6 பில்லியன் டாலர்

ஆப்பிள் இன்க் நிறுவனம் உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். ஆண்டு வருமான அடிப்படையில், இந்த அமெரிக்க நிறுவனம் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தியாளராகவும், முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகவும் அறியப்படுகிறது.

முக்கிய தயாரிப்புகள்

ஆப்பிள் நிறுவனம் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர், ஆன்லைன் சேவைகள் மற்றும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் போன்றவற்றை உருவாக்கம் செய்து, தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

ஆப்பிள் ஐஃபோன், ஐபாட், ஐமேக், மேக் பர்ஸனல் கம்ப்யூட்டர்கள், ஆப்பிள் வாட்ச் போன்றவை இந்நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற தயாரிப்புகளாகும். சுமார் 215.6 பில்லியனு டாலருக்கும் மேற்பட்ட ஆண்டு வருமானத்துடன் அமெரிக்காவின் டாப் 10 பணக்கார நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம்.

 

3. எக்ஸான் மொபில் - 218.6 பில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணை நிறுவனமான எக்ஸான் மொபில் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இர்விங் என்ற இடத்தை தன் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரும் சுத்திகரிப்பு நிறுவனமான இது 21 நாடுகளில் சுமார் 37 எண்ணை சுத்திகரிப்பு மையங்களை நிறுவி நாளொன்றுக்கு சுமார் 6.3 மில்லியன் எண்ணை பேரல்களை சுத்திகரிப்பு செய்து வருகிறது.

இதுவே பொது வணிகத்தில் ஈடுபட்டுள்ள உலகின் மிகப்பெரும் எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் ஆகும். ஃபார்ச்யூன் 500 நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ள எக்ஸான் மொபில் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 218.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

 

2. பெர்க்ஷையர் ஹாத்அவே - 223.60 பில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான பெர்க்ஷையர் ஹாத்அவே இன்க் உலகின் இரண்டாவது பெரும் பணக்காரரான வாரன் பஃபெட் என்பவருக்குச் சொந்தமானதாகும். ஆலிவர் சேஸ் என்பவரால் 1839 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் நெப்ரஸ்காவைச் சேர்ந்த ஒமாஹாவில் உள்ள கீவிட் பிளாசாவில் அமையப்பெற்றுள்ளது. இப்பன்னாட்டு நிறுவனம் இன்ஷூரன்ஸ், யுடிலிட்டீஸ், எனர்ஜி, உற்பத்தி, சேவைகள், இரயில் போக்குவரத்து, ரீடெயிலிங் மற்றும் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் தன் துணை நிறுவனங்களின் வாயிலாக ஈடுபட்டு வருகிறது.

முக்கிய நிறுவனங்கள்

டெய்ரி குவின், கெய்கோ, பிஎன்எஸ்எஃப், ஃப்ரூட் ஆஃப் த லூம், ஹெல்ஸ்பெர்க் டயமண்ட்ஸ் மற்றும் இன்னும் பல நிறுவனங்களையும் சொந்தமாகக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் ஆப்பிள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், வெல்ஸ் ஃபார்கோ மற்றும் கொக்கோ-கோலா உள்ளிட்ட நிறுவனங்களில் சிறுபான்மையான பங்குகளையும் வைத்துள்ளது. அமெரிக்காவின் முதன்மையான 10 பணக்கார நிறுவனங்களுள் ஒன்றான இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 223.60 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

1. வால்மார்ட் - 485.87 பில்லியன் அமெரிக்க டாலர்

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு ரீடெயில் நிறுவனமான வால்மார்ட், ஆண்டு வருமான அடிப்படையில் உலகின் மிகப்பெரும் நிறுவனமாகவும், அமெரிக்காவின் டாப் 10 பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. சாம் வால்டன் என்பவரால் 1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது உலகெங்கிலும் கிளை பரப்பியுள்ளது. அமெரிக்காவில் இருப்பவை தவிர்த்து இந்நிறுவனம் 26 நாடுகளில் சுமார் ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான ஹைப்பர் மார்க்கெட்கள், தள்ளுபடி அங்காடிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது.

வால்டன் குடும்பம்

வால்மார்ட் நிறுவனம் வால்டன் குடும்பத்தினருக்குச் சொந்தமாகவே உள்ளது. நிறுவனத்தின் 50 சதவீதத்தை சாம் வால்டனின் வாரிசுகள் அவர்தம் ஹோல்டிங் நிறுவனமான வால்டன் எண்டர்பிரைசஸ் மூலமாகவும், தனிப்பட்ட ஹோல்டிங்குகளின் மூலமாகவும் தன்னகத்தே வைத்துள்ளனர். 2016 ஆம் வருடத்தைய நிலவரப்படி, இந்நிறுவனம் அதன் ஆண்டு வருமானமாக சுமார் 485.87 பில்லியன் அமெரிக்க டாலரையும், நிகர லாபமாக சுமார் 13.6 பில்லியன் அமெரிக்க டாலரையும் பதிவு செய்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Richest Companies in USA

Richest Companies in USA
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns