டெபிட் கார்டா..? கிரடிட் கார்டா.. ? வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

கிரடிட் கார்டைக் காட்டிலும் டெபிட் கார்டைப் பயன்படுத்துவது சிறந்தது என்னும் கருத்து பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. இருந்தாலும், சில பயன்பாடுகளின் அடிப்படையில் நோக்கும் பொழுது டெபிட் கார்டைக் காட்டிலும் கிரடிட் கார்டு சிறந்தது எனச் சிலர் கருதுகின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு எது சிறந்தது... பயன்மிக்கது... கிரடிட் கார்டா ? டெபிட் கார்டா ?.. கடன் அட்டையா ? பற்று அட்டையா ? என்னும் விவாதம் நிதி ஆலோசகர்களிடையே அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சிலர் கிரடிட் கார்டைத் தூக்கிப்பிடிக்க... சிலர் டெபிட் கார்டுக்காக வரிந்துகட்டி வாதாடிக் கொண்டிருக்க... இந்தப் பந்தயத்தில் முந்துவது எது கிரடிட் கார்டா ? டெபிட் கார்டா ? வாங்க...! விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம்.

டெபிட் கார்டுக்கும் கிரடிட் கார்டுக்கும் என்ன வேறுபாடு?

இரண்டுமே பார்க்கும் போதும் பயன்படுத்தும் போதும் ஒன்றுபோலவே தோன்றுகின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையில் நுணுக்கமான வேறுபாடு உள்ளது. வங்கியில் நம்முடைய கணக்கில் இருக்கும் பணத்தை நாம் பரிமாற்றம் செய்வதற்கு டெபிட் கார்டு பயன்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் தனக்குக் கிரடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் நிதியைத் தன்னுடைய கணக்கில் செலவு செய்வதற்கு அவரிடம் இருக்கும் கிரடிட் கார்டு பயன்படுகிறது. கிரடிட் கார்டில் இருக்கும் இந்த வசதி, இரு கார்டுகளுக்கும் இடையிலான பந்தயத்தில் கிரடிட் கார்டை முந்தி ஓடச்செய்கிறது. இனி, கிரடிட் கார்டினை ஆதாயம் பெறக் கூடிய வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.

கிரடிட் கார்டின் மூலம் பணத்தைச் சேமிக்கலாம்

கிரடிட் கார்டு நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளா்களுக்கு 15 முதல் 45 நாட்கள் வரையிலான வட்டியில்லாக் கடனை வழங்குகின்றன. இதன் மூலம் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொள்ளலாம். "இப்பொழுது வாங்கு.. பிறகு பணத்தைக் கொடு" என்கின்ற நடைமுறையினைக் கிரடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குவதால், அதே பொருளை ரொக்கமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ பணத்தைச் செலுத்திப் பொருளை வாங்கியிருந்தால் அப்பொழுது உடனடியாக நாம் செலுத்தியிருக்க வேண்டிய தொகைக்கான வட்டி நமக்கு மிச்சமாகிறது. ஒருவா், தன்னுடைய கிரடிட் கார்டின் அதிகப்படியான பயன்பாட்டுக்கு ஏற்ப இதுபோன்ற சேமிப்பை அதிகரிக்க முடியும்.

சலுகைகள்

கிரடிட் கார்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மூலமாகத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளின் மீதும் கழிவுகளையும் சிறப்புப் புள்ளிகளையும் (Discount and Reward Points) வழங்குகின்றன. நாம் சேர்க்கும் சிறப்புப் புள்ளிகளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம். ஹோட்டல் பில் முதல் சினிமா டிக்கெட் வரையிலும், பயணச்சீட்டுக்கள் முதல் மளிகைப் பொருட்கள் வரையிலுமான அனைத்துகையான பரிவர்த்தனைகளுக்கும் கிரடிட் கார்டு வாடிக்கையாளருக்கு அதன் நிறுவனங்கள் சிறப்புத் தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகின்றன. இவை, வாடிக்கையாளருக்குக் கிரடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான ஆவலைத் தூண்டுகின்றன.

அட்டைகளுக்கான பாரமரிப்புக் கட்டணம்

டெபிட் கார்டினைக் காட்டிலும் கிரடிட் கார்டுகளுக்கான ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் சற்று அதிகம். இருப்பினும் பெரும்பாலான நிறுவனங்கள், சில குறிப்பிட்ட சூழல்களில் தங்களுடைய கிரடிட் கார்டுகளின் மீதான பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் விதிப்பதிலை என்பது இங்குக் கவனிக்க வேண்டிய விசயமாகும். ஆனால் இப்படியான கட்டண விலக்குகள் டெபிட் கார்டுகளின் மீதான பரிவர்த்தனைகளுக்கு மிக அரிதாகவே வழங்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் நோக்கும்போது கிரடிட் கார்டுக்கான பராமரிப்புக் கட்டணம் டெபிட் கார்டுக் கட்டணத்தைக் காட்டிலும் குறைவு என்பதை உணரலாம்.

வரையறுக்கப்பட்ட பயன்பாடு

பொதுவாக, டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையளவுக்கு மட்டுமே பரிவா்த்தனை செய்ய இயலும். நம்முடைய கணக்கில் போதுமான அளவுக்குப் பணம் இருந்தாலும் தேவையேற்படும்போது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒரே நாளில் அதனை முழுமையாகப் பயன்படுத்த இயலாது. அதேவேளையில் கிரடிட் கார்டைப் பயன்படுத்தி நமக்கென அனுமதிக்கப்பட்ட தொகையை முழுமையாக ஒரேநாளில் பயன்படுத்திக் கொள்ள இயலும். வரையறைக்குட்பட்ட பயன்பாட்டின் காரணமாக, நமக்குச் சொந்தமான பணத்தைத் தேவையேற்படும் பொழுது முழுமையாகப் பயன்படுத்த இயலாமல் போவது டெபிட் கார்டு பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது.

அவசரநிலையின்போது துணை நிற்கும் கிரடிட் கார்டு

அவசரத் தேவைகளின் போது கிரடிட் கார்டு மிகவும் உறுதுணையாக இருக்கும். கையில் பணம் இல்லாத போது தேவையான செலவுகளைச் செய்யக் கடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தன்னுடைய கிரடிட் கார்டுக்கென வரையறுக்கப்பட்ட தொகையினை எந்த நேரத்திலும் எவ்விடத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேவேளையில் நம்முடைய கணக்கில் தேவைக்கும் குறைவான தொகைமட்டும் இருக்கும் நிலையில், கையிலிருக்கும் டெபிட் கார்டால் எவ்விதப் பயனுமில்லை.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் பார்க்கும்போது டெபிட் கார்டு வைத்திருப்பவர்களைக் காட்டிலும் கிரடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவா்களுடைய நிறுவனங்கள் அதிகப்படியான உதவிக்கரங்களை நீட்டுகின்றன. நாம் வைத்திருக்கும் கிரடிட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது நமக்குத் தெரியாமல் அதனை வேறு யாராவது எடுத்து முறைகேடாகப் பயன்படுத்திப் பணப்பரிவர்த்தனை செய்திருந்தாலோ அது தொடர்பாகப் புகார் பதிவு செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய ஏழுநாட்கள் வரையிலான முறைகேடான பரிவர்த்தனைகளுக்கான இழப்புகளைச் சரிசெய்யக் கிரடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் முன்வருகின்றன.

இதுபோன்று எதிர்பாரா இழப்புகளிலிருந்து கிரடிட்கார்டு உரிமையாளருக்குக் கிடைக்கும் பாதுகாப்பு, டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை. கார்டுகளைப் பயன்படுத்தும் போது நிகழும் தவறுகளால் பரிவர்த்தனைகளில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் டெபிட் கார்டு வாடிக்கையாளரைக் காட்டிலும் கிரடிட் கார்டு வாடிக்கையாளருக்கு விரைவில் தீர்வு கிடைக்கிறது என்பதையும் இங்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

 

செலவுகளுக்கான தொகையினை மாதத்தவணையாகச் செலுத்தும் வசதி

கிரடிட் கார்டினைப் பயன்படுத்தி நாம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக்கான தொகை அதிகமாக இருந்தால் நாம் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு அப்பரிவர்த்தனைக்கான தொகையினை மாதத்தவணையாகச் (EMI) செலுத்தும் வசதியினைப் பெறலாம். அதற்காகக் கிரடிட் கார்டு நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டிவிகிதங்கள் பிற இடங்களில் நாம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களைவிட மிகவும் குறைவு. அதுமட்டும் அல்லாமல் கிரடிட் கார்டு மூலமாகத் தாமதம் ஏதுமின்றி நினைத்த நிமிடத்தில் இவ்வசதியை விரைவாகப் பெறமுடிகிறது.

கடன் பெறுவதற்கான தகுதியை எளிதாக்குகிறது

கிரடிட் கார்டினை முறையாகப் பயன்படுத்துவதன் மூலமாக ஒருவருடைய கடன் மேலாண்மைத் திறன் கூடுகிறது. இது கிரடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளருடைய கடன் பெறுவதற்கான தகுதிப்பாட்டினை அதிகரிக்கிறது. இதன்மூலம் நமக்குக் கடன் வழங்குவோரிடமிருந்து நாம் வாங்கும் கடனுக்கான கட்டணங்கள் மற்றும் வட்டிவிகிதங்களின் மீது சிறந்த சலுகைகளைப் பெறமுடியும்.

இப்படியாகப் பல கோணங்களில் யோசித்துப் பார்க்கையில், ஒரு வாடிக்கையாளர், தன்னுடைய கிரடிட் கார்டு மீதான கடன் தொகையினை ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்த முடியும் என்னும் நிலையிலிருந்தால் அவருக்கு டெபிட் கார்டைக் காட்டிலும் கிரடிட் கார்டு அதிகப் பயன் தரக்கூடியதாக அமையும் என்னும் முடிவுக்கு வரலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Debit vs Credit Card: Are debit cards necessarily better than credit cards? Find out

Debit vs Credit Card: Are debit cards necessarily better than credit cards? Find out
Story first published: Saturday, February 10, 2018, 15:23 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns