தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் என்றால் என்ன..? அதன் அதிகாரம் என்ன..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் வசதி வாய்ப்புகள் அன்றாட மனித வாழ்க்கையில் புதிய உற்சாகத்தையும் அளப்பரிய ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. வசதி வாய்ப்புகளின் மீது மோகம் கொண்டு தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் குறுக்கு வழியில் பணம் சேர்க்கும் முயற்சியில் சிலர் இறங்குகின்றனர். தனிநபர்கள் மட்டுமின்றிச் சில பெரு நிறுவனங்களும் இத்தகைய முறையற்ற செயல்களில் ஈடுபடுவது அன்றாடச் செய்தியாக உள்ளது. நிறுவனங்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான், தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) என்பதாகும்.

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) என்றால் என்ன?

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) என்பது நீதிமன்றத்தைப் போன்றே சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் எழும் சிக்கல்களை விசாரித்துத் தகுந்த தீர்ப்புகளை இத்தீர்ப்பாயம் வழங்குகிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை இத் தீர்ப்பாயம் கண்காணிக்கிறது. நிறுவனச் சட்ட வாரியத்துக்கு (National Law Board) மாற்றாக இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத் உட்பட 11 இடங்களில் இத்தீர்ப்பாயத்தின் அமர்வுகள் (Benches) ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகச் (MCA) செயலாளர் தலைமையிலான குழுவினரால், தீர்ப்பாய அமர்வுகளுக்கான உறுப்பினர்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் எப்பொழுது நிறுவப்பட்டது?

2013ஆம் ஆண்டின் இந்திய நிறுவனச் சட்ட விதிமுறை 408-ன் படி ஏற்படுத்தப்பட்ட தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம், 2016, ஜீன் 1 முதல் செயல்படத் தொடங்கியது.

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் அதிகார எல்லை

தொழில் மற்றும் நிதிசார் மறுகட்டமைப்புக்கான மேல்முறையீட்டு ஆணையம் (AAIFR), நிறுவனச் சட்ட வாரியம், தொழில் மற்றும் நிதிசார் மறுகட்டமைப்புக்கான வாரியம் (BIFR) ஆகியவற்றின் சட்ட அதிகாரங்களையும், உயர்நீதி மன்றங்களிடம் உள்ள நிறுவனம் மூடல் மற்றும் பிற அதிகாரங்களையும் ஒருங்கே பெற்ற அமைப்பாக தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் விளங்குகிறது.

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) மற்றும் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT) ஆகியவை ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக 1956 ஆம் ஆண்டின் நிறுவனச்சட்டப்படி தோற்றுவிக்கப்பட்ட நிறுவனச் சட்ட வாரியம் கலைக்கப்பட்டது.
தேசிய நிறுவனச் சட்டத் தீா்ப்பாயத்தின் பணிகள் மற்றும் பயன்கள்

 

நன்மைகள்

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தினால் பின்வரும் நன்மைகள் விளைகின்றன.

• பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் குவிந்துகிடக்கும் வழக்குகளைக் குறைக்க உதவுகின்றது.
• இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட சிறப்புத் தீர்ப்பாயம் இது.
• வழக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக நீதித்துறை மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்தவா்களை உறுப்பினர்களாகக் கொண்டு இத்தீர்ப்பாயம் இயங்குகிறது.
• இந்தியா முழுவதும் பரவலாகப் பல கிளை அமர்வுகளைக் கொண்டு இயங்குகிறது.
• வெகுதூரம் அலையாமல் அருகில் உள்ள தீர்ப்பாயங்களை அணுகி வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள இயலும்.
• நிறுவனங்களை மூடுவதற்கான நடைமுறை தீர்வுகள் மிகக்குறுகிய காலத்தில் கிடைக்கின்றன.
• வழக்குகள் மிக விரைவாகத் தீர்த்து வைக்கப்படுவதால் தேங்கி நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைகிறது.
• தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) மற்றும் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT) ஆகியவை தங்களுக்கென்று சிறப்பு அதிகார எல்லைகளைக் கொண்டு இயங்குகின்றன.

 

அதிகார எல்லை வரம்பு

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) அமர்வுகளும் அதனுடைய அதிகார எல்லை வரம்புகளும்

அமர்வு : NCLT, முதன்மை அமர்வு, புதுதில்லி.
அதிகார எல்லை : தில்லி யூனியன் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியான மாநிலங்கள்

அமா்வு : அகமதாபாத்
அதிகார எல்லை: குஜராத், மத்தியபிரதேசம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி , டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்கள்

அமா்வு : அலகாபாத்
அதிகார எல்லை : உத்திரபிரதேசம், உத்தரகாண்ட்

அமா்வு : பெங்களுரு
அதிகார எல்லை : கா்நாடகா

அமா்வு : சண்டிகா்
அதிகார எல்லை : ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு& காஷ்மீா், பஞ்சாப் மற்றும் சண்டிகா் யூனியன் பிரதேசம்

அமா்வு : சென்னை
அதிகார எல்லை : தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள்

அமா்வு : குவஹாத்தி
அதிகார எல்லை : அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், மிசோரம் மற்றும் திரிபுரா

அமா்வு : ஹைதராபாத்
அதிகார எல்லை : ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா

அமா்வு : கொல்கத்தா
அதிகார எல்லை : மேற்கு வங்காளம், ஒதிசா, பீகார், ஜார்கண்ட், அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகள் (யூ.பி)

அமா்வு : மும்பை
அதிகார எல்லை : மகாராஷ்டிரா, சத்தீஸ்கா், கோவா

 

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) செயல்பாட்டு அதிகாரங்கள்

• உறுப்பினர்களின் பொறுப்புகள் வரையறைக்கு உட்படாதவை என அறிவிப்பது.
• முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் பதிவை ரத்துச் செய்வது.
• முறைகேடுகள் மற்றும் உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவது.
• நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கிவைப்பது.
• பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்துறை நிறுவனங்களாக மாற்றுவது.
• இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் நிதியாண்டுகளில் திருத்தம் செய்வது.
• நிறுவன முறைகேடுகளை விசாரிப்பது அல்லது விசாரணையைத் தொடங்குவதற்கான நடைமுறைகளை முன்னெடுப்பது.

மேல்முறையீட்டுக்கான நடைமுறைகள்

உரிமையியல் நடைமுறை சட்டம், இயற்கை நீதிக் கொள்கைகள், மத்திய அரசால் அமல்படுத்தப்படும் பிற சட்ட நடைமுறைகள் ஆகியவற்றை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயமும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் பின்பற்றுகின்றன. தீர்ப்பாயமும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் அதனுடைய விதிமுறைகளைச் செயல்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் அதிகார வரம்பிற்குள் வேறு எந்த உரிமையியல் நீதி மன்றமும் தலையிட முடியாது. தீர்ப்பாயத்தால் வழங்கப்படுகின்ற ஆணைகளை எதிர்த்து தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்த்து 45 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவேண்டும்.

தீர்ப்பாயத்தின் ஆணைகளால் பாதிப்படையக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அதனை விசாரித்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தீர்ப்பினை வழங்க வேண்டும்.

சமீபத்தில், வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட நீரவ்மோடியின் நிறுவனத்தோடு தொடர்புடைய 64 சொத்துக்களை முடக்கிவைப்பதற்குப் பெருநிறுவன விவகார அமைச்சகத்திற்கு (MCA) தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது என்பது இங்குக் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is National Company Law Tribunal?

What is National Company Law Tribunal?
Story first published: Saturday, March 31, 2018, 18:07 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns