"கஷ்டப்படாமல், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தாமல் இலட்சாதிபதியாவதற்கு எதாவது வழியிருக்கிறதா ?" எல்லோருடைய மனதிலும் எப்போதாவது இந்த எண்ணம் தோன்றியிருக்கும். கேள்வியைப் பார்த்தால் நடைமுறைக்கு ஒத்துவராதது போலத் தோன்றும். கவலைப்படாதீர்கள் பாஸ், அதுக்கு ஒரு பக்காவன வழியிருக்கு. சரியான திட்டமிடல், நியாயமான வணிக நடைமுறை, தொடர்ச்சியான சேமிப்பு ஆகிய குணநலன்கள் உங்களிடம் இருந்தால் உங்களுடைய இலட்சாதிபதிக் கனவு கைகூடுவதற்கு வெகு நாட்களாகாது.
உங்களுடைய சேமிப்பினைச் சில குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்தால் அதன் மூலமாக உங்களுடைய பணத்தைப் பல மடங்கு பெருக்க முடியும்.
எங்கே முதலீடு செய்வது ?
பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை நம்முடைய அன்றாட வாழ்வின் நடைமுறையாகக் கொள்வதுதான் நாம் இலட்சாதிபதியாவதற்கு முதலாவதும் முக்கியமானதுமான வழிமுறையாகும். சேமிப்பு இல்லாமல் முதலீடு இல்லை. முதலீடு இல்லாமல் இலாபம் இல்லை. சேமிக்கும் பழக்கம் உங்களுக்கு வந்துவிட்டால், சேமித்த பணத்தைப் பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்து இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
நிலையான சொத்துக்களில் (ரியல் எஸ்டேட்) முதலீடு செய்தல்
நிலம், வீடு போன்றவற்றை உள்ளடக்கிய ரியல் எஸ்டேட் தொழில், முதலீட்டுக்கான அதிகப்படியான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட்டில் நாம் செய்கின்ற முதலீட்டின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து முடிவெடுத்தால், நல்ல இலாபம் தரக்கூடிய நீண்ட கால முதலீட்டிற்கு ரியல்எஸ்டேட் துறையைவிடச் சிறந்த துறை வேறு எதுவுமில்லை என்பதை உணரலாம்.
உதாரணமாக, 2017ஆம் ஆண்டில் ஒரு நிலம் அல்லது வீட்டினை 30 இலட்ச ரூபாய்க்கு வாங்குகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதனுடைய மதிப்பு 50 இலட்ச ரூபாய் வரை உயரக்கூடும். அவ்வாறு உயர்ந்தால், ஐந்து ஆண்டுகளில் 20 இலட்ச ரூபாய் இலாபம் ஈட்ட முடியும். இலாபமாகக் கிடைத்த 20 இலட்சரூபாயை வேறு ஏதாவது திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். தொடக்கத்தில் முதலீடு செய்த 30 இலட்ச ரூபாய் அப்படியே கையில் இருக்கும்.
பங்குச் சந்தை முதலீடு
நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளில் முதலீடு செய்வதும் இலாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகளில் ஒன்று. வாங்கும் பங்குகளை அதன் மதிப்புக் கணிசமாக உயரும் வரை நீண்ட காலம் வைத்திருக்க வேண்டும். நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் நாமும் ஒரு வகையில் அந்நிறுவனத்தின் உரிமையாளராக மாறுகிறோம். நிறுவனத்தின் இலாபத்தில் நாம் வாங்கி வைத்திருக்கின்ற பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பங்காதாயம் மற்றும் போனஸ் போன்ற பணப்பயன்கள் நமக்குக் கிடைக்கும். நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு அதிகப்படியான இலாபம் ஈட்டும் வேளையில் அந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயரும். இந்த நேரத்தில் நாம் வாங்கி வைத்திருக்கும் அந்நிறுவனத்தின் பங்குகளைச் சந்தையில் விற்றால் இலாபம் கொட்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உதாரணமாக, ABC என்னும் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை, ஒன்றின் விலை 500 ரூபாய் என்கின்ற வகையில் 1000 பங்குகளை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். 1000 பங்குகளை வாங்கிய வகையில் நாம் அந்நிறுவனத்தில் 5 இலட்ச ரூபாய் முதலீடு செய்கிறோம். நீங்கள் அந்தப் பங்குகளை வைத்திருக்கும் காலம் வரை ABC நிறுவனம் உங்களுக்கு வருடம்தோறும் தன்னுடைய இலாபத்திலிருந்து பங்காதாயத் தொகையை வழங்க வேண்டும். அந்நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தால், அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 1000 ரூபாய் வரை உயரக்கூடும். அந்த நேரத்தில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குகளை விற்றுவிட நினைத்தால் அது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு உயர்ந்த நிலையில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குகளை, ஒன்றின் விலை 1000 ரூபாய் என்னும் அடிப்படையில் விற்றால் உங்களுக்குப் பத்து இலட்சரூபாய் கிடைக்கும். ஆக, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களுக்கு 5 இலட்ச ரூபாய் இலாபம் கிடைக்கிறது.
மியூச்சுவல் ஃபண்டு முதலீடு
ஓரளவுக்கு மதிப்பு வாய்ந்த தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து இலாபம் ஈட்ட நினைப்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நல நிதித் திட்டம் உகந்ததாகும். முறையான முதலீட்டுத் திட்டத்தின் (SIP - Systematic Investment Plan) அடிப்படையில் பரஸ்பர நலநிதியத்தில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். SIP என்பது மிகவும் எளிமையானது அதே சமயத்தில் மிகுந்த பயனுள்ள முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் உங்களிடமிருந்து திரட்டப்படும் ஒரு குறிப்பிட்ட தொகை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூலமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். நம்முடைய முதலீட்டின் அளவுக்கு ஏற்ப நிறுவனத்தின் இலாபத்தில் நமக்குப் பங்கு கிடைக்கும். ஒவ்வொரு மாதத்திற்குமான முதலீட்டுத் தொகை நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்யப்படும். எவ்வளவு தொகை என்பதை நம் வசதிக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம். குறைந்த பட்சம் மாதம் ரூபாய் 500 முதலீடு செய்யலாம். நம்முடைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப மாத முதலீட்டுத் தொகையை அதிகப்படுத்திக் கொள்ளலாம். கூட்டு வட்டித் தொகையின் மாயாஜாலம் நம்முடைய முதலீட்டைப் பல மடங்கு பெருக்கிவிடும்.
உதாரணமாக மாதம் 5000 ரூபாய் என்னும் வகையில் 15ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். எதிர்பார்க்கப்படும் இலாபம் சராசரியாக 12% என்றால் பதினைந்து ஆண்டு முடிவில் நம்முடைய முதலீட்டுத் தொகை 25.22 இலட்சமாக உயர்ந்திருக்கும். எதிர்பார்க்கும் இலாபம் சராசரியாக 14% என்றால், நம்முடைய முதலீட்டுத் தொகை 30.64 இலட்சமாக உயரும். இப்படியாகக் கிடைத்த இலாபத்தை மீண்டும் ரியல் எஸ்டேட் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதனைப் பலடமடங்கு பெருக்க முடியும்.
நிதிசார் ஆவண வணிகம் (Derivative Trading)
"Derivative" என்னும் ஆங்கிலச் சொல்லை நிதிசார் வணிக ஆவணம் எனப் பொருள் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது எழுகின்ற நிதிசார்ந்த ஒப்பந்தத்தை இந்தச் சொல் குறிக்கும். அது, பங்குகள், குறியீடுகள், வணிகப் பொருட்கள், நாணயங்கள், நாணயப் பரிமாற்ற விகிதங்கள், அல்லது வட்டி விகிதங்கள் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். இந்த நிதிசார் ஆவணங்கள் மீதான முதலீடு நமக்கு இலாபத்தை ஈட்டித் தரும். இந்த நிதிசார் ஆவணங்களின் தற்போதைய மதிப்பிலிருந்து அதனுடைய எதிர்கால மதிப்பு கூடும் அல்லது குறையும் என யூகித்து அதன் வழி ஒப்பந்தங்கள் செய்வதன் மூலமாக நாம் வருமானத்தை ஈட்டலாம்.
நிதிசார் வணிக ஆவணஙகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. வருங்காலக் கணிப்புகள் - Futures
2. வாய்ப்புகள் - Options
வருங்காலக் கணிப்புகள் – Futures
வருங்காலக் கணிப்புகள் (Futures ) அடிப்படையிலான நிதிசார் ஆவணங்கள் என்பது, நிறுவனத்தின் பங்குகள், நாணயத்தின் மதிப்பு, அல்லது வணிகப் பொருட்களின் விலை போன்றவற்றை எதிர்காலச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதனுடைய ஏற்ற இறக்கங்களைக் கணித்துச் செய்யும் ஒப்பந்தம் அடிப்படையிலான முதலீட்டைக் குறிக்கும். பங்குகள் போன்ற நிதிசார் ஆவணங்களுக்கான மொத்த விலையையும் நாம் முன்கூட்டி செலுத்த வேண்டியதில்லை. அதன் ஒரு பகுதியை மட்டும் செலுத்தினால் போதுமானது.
வாய்ப்புகள் – Options
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு ஏற்ப, பங்குகள், பொருட்கள், கடன் பத்திரங்கள், போன்றவற்றை விற்பது அல்லது வாங்குவதை இவ்வகைப் பிரிவுக்குள் அடக்கலாம்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்கின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி ரூபாய் 100 என வைத்துக் கொள்வோம். ஒரு மாதத்திற்குள் அதனுடைய மதிப்பு 150 ரூபாய்வரை உயர வாய்ப்புள்ளதாக நீங்கள் கணிப்பதாகக் கொள்வோம். ஒரு ஒப்பந்தத்தின் மூலமாக ரூபாய் 100 விலையில் 1000 பங்குகளை ஒரு இலட்சம் ரூபாய்க்கு வாங்கிப் பிறகு மாத இறுதியில் அதனை 150 ரூபாய்க்கு விற்றால் நீங்கள் 50,000 ரூபாயை இலாபமாக ஈட்டலாம்.
இது போன்று பல்வேறு வகையான வாய்ப்புகள் உங்களைப் பணக்காரராக மாற்றக் காத்திருக்கின்றன. சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்தால் உங்களுடைய சேமிப்பைப் பெருக்கலாம்.


Click it and Unblock the Notifications