இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகன நிறுவனமான ஹூண்டாய் தனது பிரபலமான கிராண்டு ஐ10 மாடல் காரின் விலை 3 சதவீதம் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இக்கார் தயாரிப்பில் உள்ளீட்டுச் செலவுகள் அதிகமாகியுள்ள காரணத்தால் இக்காரின் விலை ஆகஸ்ட் மாதம் முதல் 3 சதவீதம் வரையில் உயர்த்த உள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா தெரிவித்துள்ளது. அதேபோல் பிற மாடல்களின் விலையை உயர்த்தவில்லை என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
தற்போது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 4.74 லட்சம் முதல் 7.51 லட்சம் ரூபாய் வரையில் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது ஹூண்டாய் நிறுவனம் புதிய காம்பேக்ட் காரை அறிமுகம் செய்ய உள்ள காரணத்தால் தற்போது இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. இப்புதிய அறிமுகம் தனது வெற்றி பிராண்டான சான்ட்ரோ-வாக இருக்கலாம் எனப் பலர் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
ஹூண்டாய் நிறுவனத்தின் அறிமுகம் மாருதி சுசூகி நிறுவனத்திற்கு மிகப்பெரிய வர்த்தக நெருக்கடியை உருவாக்கும் எனத் தெரிகிறது.