வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் பல முன்னணி பிரபலங்களின் ஆதரவு மற்றும் முதலீடுகளைத் தொடர்ந்து அதிகளவிலான முதலீட்டை பிட்காயின் மீது செய்தனர். இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தகச் சந்தையின் துவக்கிய பின்பு, ஆரம்பம் முதல் தொடர் வளர்ச்சியில் இருந்த பிட்காயின், எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் மட்டும் சுமார் 3500 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் ஒரு பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்ச அளவான 56,563 டாலர் அளவீட்டை அடைந்துள்ளது. இதன் மூலம் மொத்த பிட்காயின் சந்தை மதிப்பு 1.06 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
உலகளவில் கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் மட்டுமே இதுவரை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவீட்டை அடைந்துள்ள நிலையில் முதல் முறையாகப் பிட்காயின் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது.
சமீபத்தில் டெஸ்லா உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாகவும் அதிகளவில் முதலீடு செய்யும் நிலையில் கிரிப்டோ சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட அதிரடி வளர்ச்சியின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிட்காயின் சுமார் 18 சதவீதமும், இந்த வருடத்தில் அதிகப்படியாக 92 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது.
மேலும் சந்தையில் இருக்கும் அனைத்து டிஜிட்டல் கரன்சியின் மொத்த சந்தை மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர், இதில் பிட்காயின் மதிப்பு மட்டும் 1.06 டிரில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.