சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் முதலீடா? இது பாதுகாப்பானதா? இது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்பு, பங்கு சந்தையில் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் சில வரிகளை பற்றி பார்ப்போம்.
பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். இது தான் முதலீடு செய்ய சரியான தருணம். ஏனெனில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கும்போது, சந்தைகள் மோசமாக இருக்கும். ஆக அதிகரித்து வரும் பணவீக்கம் சந்தையில் அதிக முதலீட்டினை ஈர்க்கலாம்.
3 வருடத்தில் 8 லட்சம் பேர் வெளியேற்றம்.. எல்ஐசி-யின் உண்மையான நிலை இதுதான்..!

பேராசைப் படுங்கள்
பணவீக்க காலத்தில் பொதுவாக சந்தையில் மோசமான வணிகமாக இருக்கும். அதாவது சந்தையானது சரிவில் இருக்கும். ஆக இது முதலீடு செய்ய சரியான தருணம். எல்லோரும் பேராசைப்படும் போது கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் பயப்படும்போது பேராசைப் பட வேண்டும்.( Be Fearful When Others Are Greedy and Greedy When Others Are Fearful) என்பது பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் வரிகள். இதன் அர்த்தம் எல்லோரும் பேராசைப்படும் போது, எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரும் பங்குகளை வாங்குவார்கள்.

கவனியுங்கள்
ஒரு பங்கை அதற்கு உரிய விலையை விட மிக அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஏனெனில் பங்கின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என பேராசை பட்டு முதலீடு செய்வார்கள். ஆனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என எதை பற்றியும் கவலைப் படாமல் வாங்கி விடுவார்கள்.

மீண்டும் மீண்டு வரும்
யூகத்தினால் தேவையற்ற பயத்தினால், பங்குகள் விலை மள மளவென சரியலாம். அந்த சமயத்தில் நல்ல பங்குகளும் சரியலாம். இந்த இடத்தில் நிறுவனத்தின் மோசமான செயல்பாடு காரணமாக விலை சரியவில்லை, வேறு காரணங்களால் விலை வீழ்ச்சி கண்டது. இது ஒரு தற்போதைய நிகழ்வு. இதிலிருந்து பங்கின் விலை கண்டிப்பாக மீண்டு வரும், ஏனென்றால், அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் லாப கணக்கு எதிர்பார்த்தபடியே அல்லது அதை விட அதிகமாக இருக்கும் போது பங்கு விலை அதிகரிக்கும். ஆக இந்த வீழ்ச்சி கண்டுள்ள நேரத்தில் பங்கினை வாங்கி நீண்டகால நோக்கில் லாபம் பார்க்கலாம் என்கிறார் வாரன்.

பதற்றமான நிலை
இந்த நிலை தான் தற்போது சர்வதேச அளவில் இருந்து வருகின்றது. உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது நிச்சயம் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படலாம். ஆனால் தற்போதைக்கு சந்தையானது பெரும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். இது முதலீட்டுக்கு ஒரு வாய்ப்பினை கொடுத்துள்ளது எனலாம். ஏனெனில் நல்ல நிறுவன பங்குகள் கூட பெரும் சரிவினைக் கண்டுள்ளன.

இது சரியான தருணம்
எனினும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது சர்வதேச பங்கு சந்தையினை வழி நடத்தி செல்லலாம். இதன் காரணமாக இன்னும் சில தினங்களுக்கு இந்த போக்கு நீட்டிக்கலாம். இது சந்தையில் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் இது நிறுவனங்களின் இழப்பு, வளர்ச்சியினால் ஏற்பட்ட சரிவு அல்ல, ஆக இது வாங்க சரியான தருணம். சொல்லப்போனால் குறைந்த விலையில், நல்ல நிறுவனங்களின் பங்குகளை வாங்க சரியான தருணம் எனலாம்.

இந்த வங்கி பங்குகளை வாங்கலாம்
மேலும் தற்போதைய சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் பணவீக்கமும் ஒன்று. எனினும் தற்போது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில் தனியார் துறையினை சேர்ந்த முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் நல்ல வளர்ச்சியினை காட்டலாம். ஆக தற்போதைய நிலையில் இந்த பங்குகளை வாங்கி வைக்கலாம்.

ஐடி நிறுவனங்கள்
இதே டிசிஎஸ், இன்ஃபோசிஸ் பங்குகள் உலகத் தரம் வாய்ந்த பங்குகளாக உள்ளன. சர்வதேச அளவில் இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நெருக்கடியான நேரத்தில் இவை தரமான பங்குகளாக உள்ளன. இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நுகர்வோர் சம்பந்தமான நிறுவனங்கள், பணவீக்கம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இது போன்ற பங்குகள் நீண்டகால நோக்கில் மிக சிறப்பாக செயல்படலாம்.

மாருதி சுசுகி
இதே போல மாருதி சுசுகி நிறுவன,ம் இன்று வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் 2023ல் மின்சார வாகன உற்பத்தியினை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுசுகிக்கு முன்னதாக பல நிறுவனங்கள் மின்சார வாகன சந்தையில் நுழைந்திருந்தாலும், மாருதி சுசுகி நிறுவனம் ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது இன்று மக்களின் விருப்பமான வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

ஏற்றம் காணலாம்
மார்ச் மாதத்தில் பல நாட்டின் ,மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கம் கட்டுக்குள் வரலாம். அதேபோல உக்ரைன் - ரஷ்யா பிரச்சனையும் இயல்பு நிலைக்கு திரும்பலாம். இதனால் பங்கு சந்தையும் சரிவில் இருந்து மீண்டு வரலாம். இதன் மூலம் நல்ல லாபம் ஈட்டலாம்.