உலகம் முழுக்க ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை மேற்கொள்ள, அமெரிக்க டாலர் கரன்சி அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில், அமெரிக்க டாலர் கரன்சிக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பலமாக இருந்தால், (1 டாலருக்கு குறைந்த அளவிலான ரூபாயைக் கொடுப்பது) இந்தியாவுக்கு குறைந்த செலவிலேயே தேவையான பொருட்களை இறக்குமதி செய்துவிடலாம்.
இதுவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாக இருந்தால் (1 டாலருக்கு அதிக ரூபாயைக் கொடுப்பது), அதிகம் செலவழித்து டாலரை வாங்கி, இந்தியாவுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும்.
தற்போது இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக பலமடைந்து வருகிறது.
ப்ளூம்பெர்க் தரவுகள் படி, கடந்த 06 மார்ச் 2020 அன்று ஒரு அமெரிக்க டாலருக்கு 73.78 ரூபாய் என்று இருந்தது. அதன் பின் 16 ஏப்ரல் 2020 அன்று அதே ஒரு அமெரிக்க டாலருக்கு 76.86 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமானது. அதன் பின் மெல்ல மெல்ல சரிந்து, நேற்று (28 ஆகஸ்ட் 2020, வெள்ளிக் கிழமை), ஒரு அமெரிக்க டாலருக்கு 73.40 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
ஆக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வலு அடைந்து இருக்கிறது.
கடந்த நான்கு மாத காலத்தில் (ஏப்ரல் 2020 - ஜூலை 2020), இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, 30 பில்லியன் டாலரை வாங்கி, இந்தியாவின் அந்நிய செலாவணியை அதிகரித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் படி, 21 ஆகஸ்ட் 2020 வரையான காலத்துக்கு, 537.54 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு வைத்திருக்கிறார்களாம்.
இந்த 537.54 பில்லியன் டாலரில், 494 பில்லியன் டாலர், வெளிநாட்டு கரன்சிகளாக வைத்திருக்கிறார்களாம்.
தங்கமாக 37.26 பில்லியன் டாலர் வைத்திருக்கிறார்களாம். மீதமுள்ள சுமார் 6.06 பில்லியன் டாலர் எஸ் டி ஆர் & சர்வதேச பன்னாட்டு நிதியத்திடம் ரிசர்வ்களாக வைத்திருக்கிறார்களாம்.