கடந்த சில தினங்களாகவே சென்செக்ஸ் பற்றி சாதாரண மக்கள் கூட பேசும் அளவுக்கு செம அடி வாங்கியது.
இந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில், அடுத்த 3 மாதங்களுக்குள் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளுக்குக் கீழ் போகலாம் என யாராவது சொல்லி இருந்தால், எல்லோரும் வாய்விட்டு சிரித்து இருப்போம்.
ஆனால் சென்செக்ஸ், நேற்று தன் குறைந்தபட்ச புள்ளியாக 29,388 புள்ளிகளை தொட்டது. சரி இந்த சென்செக்ஸ் சரிவில் முதலீட்டாளர்கள் எவ்வளவு இழந்தார்கள் என்பதைப் பார்ப்போம். அதற்கு முன் சந்தை மதிப்பு என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம்.
யெஸ் வங்கியை காப்பாற்ற வந்த எதிர்பாராத முதலீடு.. 300 கோடி ரூபாய்..!

சந்தை மதிப்பு
இதை ஆங்கிலத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்போம். அப்படி என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.

சுருக்கமாக சந்தை மதிப்பு
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு நிறுவன பங்கின் இன்றைய விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம்.

ஒரு சந்தை
மேலே ஒரு பங்குக்கு மட்டும் சொன்னோம். அதையே ஒரு சந்தை முழுமைக்கும் கணக்கு செய்தால்..? அது தான் ஒட்டு மொத்த சந்தையின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன். அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு பங்குச் சந்தையில் இருக்கும் அனைத்து பங்குகளையும் விற்றால், கிடைக்கும் மதிப்பு தான் சந்தையின் மார்க்கேட் கேப்பிட்டலைசேஷன்.

நஷ்டம்
கடந்த மார்ச் 06, 2020 வெள்ளிக் கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு சுமாராக 144.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் மார்ச் 13, 2020 சந்தை மதிப்பு 129.26 லட்சம் கோடியாக சரிந்து இருக்கிறது. ஆக 144.31 - 129.26 = 15.05 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து இருக்கிறார்கள் மும்பை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்.