மதுரை : பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாலும், சொந்த தொழிலில் 50,000 ரூபாய் சம்பாதித்தாலும் கூட அது மிகுதியான மன நிறைவை தரும் என்ற மன நிலைக்கு பல இளைஞர்கள் வந்துவிட்டனர்.
அந்த வகையில் பலர் தேர்தெடுக்கும் சிறு தொழில்களில், அதிகம் உணவு சார்ந்த தொழில் மட்டுமே. ஏனெனில் இத்துறையில் மட்டுமே அன்றாட தேவைகள் அதிகம். மேலும் வருமானமும் அதிகம்.
அதிலும் இன்றைய நாளில் நம் இளைஞர்கள் மத்தியில், பர்த்டேன்னா டிரீட், திருமணம் என்றால் டிரீட் இப்படி எதற்கெடுத்தாலும் டிரீட். இந்த டிரீட்டில் இவர்கள் அனைவரும் தேர்தெடுப்பது நல்ல உணவகத்தையும், உணவையும் தாம். அதிலும் மிக வித்தியாசமான ருசியான உணவுகள் தான், இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. அப்படிப்பட்ட ஒரு உணவினையே தொழிலாக தற்போது கையில் எடுத்துள்ளார் மதுரையை சேர்ந்த இளைஞர். அதை பற்றித் தான் இன்று நம் சிறு தொழிலில் பார்க்க போகிறோம்.

அம்மாவின் தொழில்
ஒரு காலத்தில் பர்மாவில் இருந்து, இந்தியாவுக்கு வந்த சுப்ரமணியனும், பேச்சியம்மாலும் ஆரம்பித்தது தான் இந்த பர்மா இடியாப்பம் கடை. ஆரம்பத்தில் 15 வருடங்களாக பிளாட்பாரத்திலேயே கடை வைத்திருந்த இவர்கள், இதன் பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாய் விற்பனை அதிகரித்ததோடு, இவர்களின் உணவின் ருசியும் மதுரை மக்களை ஈர்த்துள்ளது. இவர்களுக்கு பின்னர் இவர்களது மகள் தேவிகா மரிவேலும், தற்போது கடந்த 21 வருடங்களாக கிறிஸ்டியன் மிஷன் ஹாஸ்பிட்டலுக்கு அருகில் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

எங்கள் குலத் தொழிலே இது தான்
தேவிகா சிறு கடையில் செய்து கொண்டிருந்த நிலையில், நாளுக்கு நாள் தேவையும் அதிகரிக்க, வளார்ச்சியும் நன்றாக இருக்கவே, தற்போது படித்துவிட்டு வேறு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த பிரபு மரிவேலும் அவரது நண்பரும் தற்போது இதை கையில் எடுத்துள்ளனர். இதை தற்போது இளைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு கடையை சற்று விரிவுபடுத்தி, பழமையான ருசியோடு, புதுப்புது, சைடு டிஷ்களோடு கொடுத்து கலக்கி வருகிறார்களாம் இந்த இளைஞர்கள்.

பாட்டியின் கைப்பக்குவம் தான், சில மாறுதல்கள்
பர்மாவில் இருந்த வந்த பாட்டியின் கைப்பக்குவம் தான் இந்த இடியாப்பம் என்றாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக, அதற்கேற்றவாறு சில பல மாற்றங்களை செய்தும், ஆனால் பழமையின் ருசி மாறாமல் இன்றளவிலும் வெற்றிகரமாக செய்து வருகின்றனர் இந்த குடும்பத்தினர். ஆரம்பத்தில் ஒரு குடும்பமாக இருந்த இவர்கள், தற்போது இளைய தலைமுறையினாரால், பல்வேறு கடைகள் மதுரையில் நிறுவப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றார் இந்த கடையின் உரிமையாளர்.

என்ன ஸ்பெஷல்?
பர்மா இடியாப்பக் கடையில் இடியாப்பம் தான் மிகப் பிரபலம் என்றாலும், இங்கு தரப்படும் அரிசி இடியாப்பம், ராகி இடியாப்பம், கம்பு இடியாப்பம், குதிரைவாலி இடியாப்பம் என உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளையே, மக்கள் விரும்பும் விதத்தில் தருகின்றனர். இதற்கு அப்படி என்ன மவுசு என்று கேட்கிறீர்களா? மாவை அரைத்து அதை இட்லி தட்டி பிழிந்து, ஆவியில் வேக வைக்கப்படும் இந்த உணவு, நோயாளிகளுக்கு சிறந்த மருந்து என்றும் கூறப்படுகிறது. காலம் பூராவும் வெறும் இட்லியையே சாப்பிட்டவர்களுக்கு சற்று மாறுதலாக, இந்த இடியாப்பம் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

யாரெல்லாம் சாப்பிடலாம்?
இடியாப்பம் என்பது பச்சரிசி மற்றும் புழுங்கரிசியில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் ஒன்று. அதிலும் ஆவியில் தயாரிக்கப்படும் இந்த உணவை 1 வயது குழந்தை முதல் 100 வயது தாத்தா வரை யார் வேண்டுமானலும் சாப்பிடலாம் என்றும் கூறுகிறார்கள். இதில் என்ன ஸ்பெஷல் எனில் ஆவியில் வேக வைத்த உணவு என்பதால், நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதிலும் இந்த உணவுக்கு தொட்டு சாப்பிட கொடுக்கும் தேங்காய் பாலும், உடலுக்கு மிக சாதகமான உணவாகவே கருதப்படுவதால் இது மக்களிடையே மிகப் பிரபலமான உணவாக கருதப்படுகிறது.

இடியாப்பமும் ஆட்டுக்கால் பாயாவும்?
பொதுவாகவே இந்த இடியாப்பத்திற்கு தொட்டுக் கொள்ள தேங்காய்பூவும் சர்க்கரையும் கொடுப்பார்கள், இதுபோக தேங்காய் பால் கொடுப்பார்கள். ஆனால் காலம் மாற மாற உணவு பழக்கங்களும் மாறிக் கொண்டிருப்பதால், அதற்கேற்ப தற்போது ஆட்டுக்கால் பாயாவும், சிக்கன் குடல் கிரேவியும் மிக பிரபலமாம். இது தவிர பர்மா சிக்கன் மசாலா, சன்னா மசாலா, குடல் செமி கிரேவி, மட்டன் குழம்பு என அதிரடியாக அசைவத்தில் அசத்துகிறார்கள். மதுரை என்றால் சொல்லவா வேண்டும். அதிலும் இவற்றையும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடும் அளவுக்கு காரமானதாகவும் சுவையானதாகவும் தருகிறார்களாம்.

கடை திறக்கும் நேரம்?
பொதுவாக கடை மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை பர்மா இடியாப்பம் கடை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் சில கடைகள் காலை நேரங்களிலும் இருக்கும். எனினும் மாலை நேரங்களில் தான் கூட்டம் அதிகமாக காணப்படும். அதிலும் வார இறுதி நாட்களில், சற்று கூட்டம் அதிகமாகவே காணப்படும் என்றும் கூறுகின்றனர் இந்த பர்மா கடையினர்.

பொதுவாக வாடிக்கையாளர்கள் எப்படி?
வாடிக்கையாளர்களை பொறுத்த வரையில் இங்கு வரும் அனைவரும், பல வருடங்களுக்கு மேலாக இவர்களின் உணவை ரசித்தவர்களாகவே உள்ளனர். பொதுவாக மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைவருமே இவர்களின் உணவுக்கு அடிமை என்றால் அது உண்மைதாம். ஏனெனில் ஒரு முறை சாப்பிட்டால் அதை மறுமுறை சாப்பிட தூண்டும் இடியாப்பத்தின் ருசியும், ஆட்டுகால் பாயாவும், ரோட்டில் போவோரை சுண்டி இழுத்துவிடுமாம்.

பெரியவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்
பொதுவாக வயதான காலத்தில் இந்த உணவை சாப்பிடாதீர்கள், அதை சாப்பிடக் கூடாது என்றும் கூறும் டாக்டர்கள், ஆவியில் வேகவைப்பட்ட இட்லியையே அதிகமாக பரிந்துரைக்கிறார்கள். ஆனால் ஆக இட்லிக்கு மாற்றாக உள்ள இந்த இடியாப்பம் உடலுக்கு எந்த கேடும் விளைவிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரியோர் இடத்திலும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மிகப்பிடித்த உணவாகவும் கருதப்படுகிறது.

சரி விலை எப்படி?
சாதாரணமாக ஒரு இடியாப்பம் பீஸின் விலை 10 ரூபாயாம். இதற்காக தொட்டுக் கொள்ள தரப்படும், தேங்காய் பாலுக்கோ அல்லது கிரேவிக்கோ நாம் எதுவும் தர வேண்டியது இல்லையாம். எனினும் ஸ்பெஷலாக தயாரிக்கப்படும் ஆட்டுக்கால் பாயா என்றால் 60 ரூபாய் என்றும், இதுவே சிக்கன் கிரேவி என்றால் 40 ரூபாய் கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாமாம்.

சராசரி விற்பனை எப்படி?
இடியாப்பம் விற்பனையானது, ஒரு நாளைக்கு 700 முதல் 800 பீஸ்கள் வரை விற்பனையாகி வருகிறது என்றும் கூறும் இவர்கள், இது மற்ற கம்பு, ராகி, குதிரைவாலி இடியாப்பங்களையும் சேர்த்து தான் என்றும் கூறுகிறார்கள். இதோடு விரைவில் இன்னும் பல புதிய இடியாப்ப உணவுகளையும் ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

செலவு அதிகம்
நாங்கள் இந்த இடியாப்பத்திற்கு தேவையான மாவினை அரைக்க ஐ.ஆர் 20 அரிசியையே பயன்படுத்துகிறோம். மேலும் தினமும் அவ்வப்போது அரிசியை அரைத்து, அதை இடியாப்ப கட்டைகளில் வைத்து பிழிந்து, இட்லி தட்டில் வைத்து, ஆவியில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கின்றோம். இறுதியில் பாட்டியின் அதே கைப்பக்குவத்துடன் ருசியான இடியாப்பம் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்.

சரி வருமானம் எப்படி?
எங்களது குடும்பமே இந்த தொழில் ஈடுபட்டு வருகிறோம். ஆரம்பத்தில் சிறிய கடையாக வைத்திருந்த எங்களுக்கு, இந்த கடை தான் சோறு போட்டது. இன்றளவில் எங்களது பிள்ளைகள் இன்று படித்துவிட்டு நல்ல வேலையில் இருப்பதும் இதனால் தான். ஆக எங்கள் குடும்பம் சந்தோஷத்துடன் இருக்கும் அளவுக்கு வருமானம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். எனினும் மூலதன செலவினம், 5 பேருக்கு சம்பளம், கடை வாடகை என்று கழித்து பார்த்தார் 1000 ரூபாயில் 700 ரூபாய் வரை செல்வாகிவிடும் என்றும் கூறுகிறார்கள்.