விவசாயிகளுக்கு 1% வட்டிக்கு கடன் தரும் வங்கி! கந்து வட்டிக்காரர்களை விரட்டியடித்த Dullopur கிராமம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாபெரும் நிறுவனங்களுக்கு கொடுக்க பணம் இல்லை என கவலைப்பட்டு, வங்கிகளுக்கு பணம் கொடுக்கும் அரசுகள், விவசாயிகளுக்கு, வங்கிகள் போதிய கடன் கொடுப்பதில்லை எனக் கவலைப்படுவதும் இல்லை. அதைப் பற்றி அரசுகள் வருத்தப்படுவதும் இல்லை.

 

இந்த பாரபட்சமுள்ள இந்திய துணைக் கண்டத்தில், நமக்கு சோறு போட்ட விவசாயிகளுக்கு பணம் தேவை என்றால், ஆபத்பாண்டவனாக வந்து அவர்களை அழித்தொழிக்கும் அசுரர்கள், கந்து வட்டிக்காரர்கள் தான்.

இந்த கந்து வட்டி எனும் பேயால், படாத பாடு பட்ட, விவசாயிகள் நிறைந்த கிராமங்களில் ஒன்று தான் இந்த Dullopur கிராமம். இந்த கந்து வட்டி பிரச்னையில் இருந்து தப்பிக்க இவர்கள் என்ன செய்தார்கள்.? இவர்களுக்கும் அந்த Dullopur People Bank-க்கும் என்ன சம்பந்தம்..?

அமைப்பு

அமைப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மாவட்டம் திந்தூரி (Dindori). இந்தியாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட 250 மாவட்டங்களில் திந்தூரியும் ஒன்று. இன்று வரை பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் இந்த மாவட்டத்துக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றனவாம். அந்த மாவட்டத்தின் ஒரு குக் கிராமம் தான் இந்த Dullopur கிராமம். ஆண்டுக்கு 792 மிமீ மழை பொழியும் இந்த இடத்தில் விவசாயம் இன்று வரை முக்கிய தொழில்களில் ஒன்றாக இருக்கிறது.

கடன்

கடன்

விவசாயம் என்றால் எல்லாம் விளையும் என எண்ணி விட வேண்டாம். Dullopur கிராம தட்ப வெப்ப சூழலுக்கு சோளம் மட்டும் தான் விளையுமாம். 10 வருடங்களுக்கு முன்பு வரை சோள விதைகளை வாங்க வேண்டும் என்றால் கூட கந்து வட்டிக் கடைகாரர்களின் தயவு வேண்டும். அவர்களின் கருணைப் பார்வை இந்த ஏழை விவசாயிகள் மீது பட்டால் தான் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 80% வட்டிக்கு அந்த 500 ரூபாய் பணம் கிடைக்குமாம்.

வட்டிப் பிரச்னை
 

வட்டிப் பிரச்னை

வழக்கம் போல அந்த விவசாயியும் நம்பி 500 ரூபாய்க்கு விதை வாங்கி, விவசாயம் செய்வார். எல்லா விளைச்சலையும் விற்ற பின், வந்த பணத்தை கந்து வட்டிக்காரர்களிடம் கொடுத்தால் "வட்டிக்கு சரியா போச்சு, அசல் எப்பயா தருவீங்க" என மிரட்டுவார்கள். அடுத்த முறை கொடுக்கப் போனால் "இந்த நாலு மாச வட்டிக்கு இது சரியா போச்சு. அப்புறம் பாக்கலாம்" என வட்டி கணக்கு மட்டுமே குறையும். அசலை அடைபதற்குள், விவசாயி செத்தே விடுவான். இப்படி ஒரு முறை வாங்கிய கடனுக்காக பல வருட விளைச்சலை விலை கொடுத்த கதை நம் Dullopur கிராம மக்களுக்கும் நிறைய உண்டு.

சுய மரியாதை

சுய மரியாதை

தென் இந்தியாவில் கந்து வட்டியானால் கூட, கடன் வாங்குபவரால் கொஞ்சமாவது பேச முடியும். ஆனால் வட இந்தியாவில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவனை எதிர்த்துப் பேசினாலேயே மொத்த கந்து வட்டிக் கடைக்காரர்களும் ஒன்று சேர்ந்து, கடன் கொடுக்காமல் அலையவிடுவார்கள். ஆகையால் கடன் வாங்குபவர் கிட்டத்தட்ட தன் சுய மரியாதையை எல்லாம் விட்டு, ஒரு அடிமை போல, அவர்கள் சொல்லும் விலைக்கு, வட்டிக்கு வெறும் 400 ரூபாய், 500 ரூபாய் என கடன் வாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

அரசு வங்கிகள்

அரசு வங்கிகள்

ஏங்க, அதான் அரசாங்கம் விவசாயிகளுக்கு கடன் கொடுக்குதே..? அப்புறம் எதுக்கு இவிய்ங்க கிட்ட கடன் வாங்கி, வட்டி கட்டிச் சாகணும்..? நல்ல கேள்வி. Dullopur கிராமத்திலோ அல்லது அதன் சுற்று வட்டாரங்களிலோ வங்கி எங்கே இருக்கிறது...? இன்னும் முறையாக சாலை வசதிகள் கூட இல்லாத குக் கிராமத்தில் வங்கிகள் மட்டும் வந்து விடுமா என்ன..? என நம்மைத் திருப்பி 2 கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை.

இந்தியாவின் அவல நிலை

இந்தியாவின் அவல நிலை

2017-ம் ஆண்டு உலக வங்கியின் தரவுகள் படி 1 லட்சம் மக்களுக்கு எத்தனை வங்கிக் கிளைகள் சேவை வழங்குகிறது என்கிற பட்டியலில் இந்தியா, 1 லட்சம் பேருக்கு 14.72 வங்கிக் கிளைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். நம்மை விட குட்டி நாடான இலங்கையில் கூட 1 லட்சம் பேருக்கு 18.58 வங்கிக் கிளைகள் சேவை வழங்குகிறதாம். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அதே 1 லட்சம் பேருக்கு 31.46 வங்கிக் கிளைகள் சேவை வழங்குகிறதாம். இந்த அவல நிலையின் சத்திய சாட்சி தான் இந்த Dullopur கிராம கந்து வட்டிப் பிரச்னைகள்.

கல்வி இல்லாமை

கல்வி இல்லாமை

இத்தனை அவல நிலைக்கு, இந்த கிராமத்தில் குறைந்தபட்ச கல்வி கற்றவர்கள் கூட மிக மிகக் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். கந்து வட்டிக் காரர்கள் சொல்லும் கணக்கு சரியா தவறா என கணக்கிட்டுக் கொள்ள முடியாத அப்பாவி இந்தியர்கள். ஒரு கட்டத்தில், தாங்கள் சுரண்டப்படுவது அப்பட்டமாக Dullopur கிராம மக்களுக்கே தெரிய வருகிறது. இந்த கந்து வட்டிக் கடை தொல்லைகளை சகித்துக் கொள்ள முடியாமல் 2008-ல், Dullopur-ல் ஒரு மக்கள் வங்கி தொடங்கப்படுகிறது. அந்த மக்கள் வங்கியின் பெயர் ‘Jan Shakti Sakh Shahkari Samiti Maryadit, Dullopur'. இந்த வங்கி மத்தியப் பிரதேசத்தின் கூட்டுறவுச் சங்க விதிகள் படி நிறுவப்படுகிறது.

கை கோர்ப்பு

கை கோர்ப்பு

சரி கூட்டுறவுச் சங்கமாக வங்கியைத் தொடங்கிவிட்டோம். கடன் கொடுக்க யார் பணம் கொடுப்பார்கள்...? கிராம மக்களின் ஒற்றுமை பணம் கொடுத்தது. Dullopur People Bank-க்கு Dullopur கிராமம் மட்டுமின்றி, சுத்து பட்டு 14 கிராமங்களில் இருந்தும் கிராம மக்கள் கை கோர்த்தார்கள். 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கிராம வாசிகள் தங்களால் முடிந்தவற்றை முதலாகக் கொடுத்தார்கள். ஒரு பெரிய நிதி திரண்டது. கடன் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த ஊரிலேயே பெரிய படிப்பாக 10-வது வரை படித்த அஜய் சிங் மார்வி தான் கணக்கு வழக்குகளை எல்லாம் பார்த்துக் கொள்கிறார்.

வங்கி செயல்பாடு

வங்கி செயல்பாடு

வங்கி சம்பந்தப்பட்ட எல்லா கணக்கு வழக்குகளும் இப்போது தான் (2019-ல்..!) கொஞ்சம் கொஞ்சமாக கணிணி மயமாக்கப்படுகிறதாம். எல்லா தகவல்களும் பழைய முறைப்படி நோட்டு புத்தகங்களில் தான் இருக்கிறது. நம் அஜய் சிங் கணிணியை இப்போது தான் கற்றுக் கொண்டிருக்கிறாராம். இந்த மக்கள் வங்கியில் விவசாயம் செய்ய மற்றும் ‘டோலக்' என்கிற இசைக் கருவியை மூலம் பிழைத்துக் கொள்ள கடன் கொடுக்கிறார்கள். ஒருவருக்கு மாதம் 1 சதவிகிதம் வட்டி எனக் கடன் கொடுக்கிறார்கள். அல்லது ஆண்டுக்கு 12 சதவிகிதம் என கடன் வழங்குகிறார்களாம். இந்த வங்கியில் பாதுகாப்பு அதிகாரிகளோ, பெயர் பலகையோ எதுவுமே கிடையாது. ஏதோ நம் வீட்டு அறை போல் ஒரு சிறிய இடத்தில் வங்கியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி கடன் கொடுக்கிறார்கள்

எப்படி கடன் கொடுக்கிறார்கள்

ஒருவர் கடன் கேட்டால், முதலில் 14 கிராமங்களில், அவருக்கு எந்த கிராமமோ அந்த கிராம கமிட்டி அனுமதி கொடுக்கிறது. அதன் பின் ‘Jan Shakti Sakh Shahkari Samiti Maryadit, Dullopur' என்கிற மக்கள் வங்கியின் 11 பேர் கொண்ட கமிட்டி விசாரித்து அனுமதி கொடுக்கிறார்கள். அதன் பின் தான் அவருக்குத் தேவையான தொகையை வங்கி வழங்குகிறது. ஒருவருக்கு கடன் கொடுத்தால் பிழைத்துக் கொள்வார் என கிராம கமிட்டி நினைத்தால், அவர்களுக்கும் கடன் கொடுக்க 11 பேர் கொண்ட வங்கி கமிட்டிக்கு பரிந்துரைக்கிறது கிராம கமிட்டி.

கெடுபிடி

கெடுபிடி

ஒரு கிராம வாசி கொடுத்த முதல் (Capital) பணத்தை விட கூடுதலாக கடன் கேட்கிறார் என்றால், அவர் அந்த கிராம வாசிகள் அனைவரின் சம்மதம் இருந்தால் மட்டுமே கடன் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி கிராமவாசிகள் அனுமதி மறுத்தால், அவர்களுக்கான கடன் வழங்கப்படாது. இந்த விதிப் படி Dullopur மக்கள் வங்கியின் தலைவர் சம்ஹார் சிங் பராஸ்தேவுக்கே கடன் கொடுக்க மறுத்திருக்கிறார்கள் இந்த நாணய மனிதர்கள். அதையும் சிரித்துக் கொண்டே பெருமையாகச் சொல்கிறார் சம்ஹார் சிங் பராஸ்தே.

வாராக் கடன்

வாராக் கடன்

கடந்த 11 வருடத்தில், வங்கியின் முதல் தொகை சுமார் 20 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது. சுமார் 960 பேர் இந்த வங்கியில் உறுப்பினராக இருக்கிறார்களாம். இப்போது சம்ஹார் சிங் பராஸ்தே இந்த வங்கியின் தலைவராக இருந்து நிர்வகித்து வருகிறார். எல்லா வங்கியிலும் வாராக் கடன் பிரச்னை உண்டே..? இந்த வங்கிக்கு இருக்கிறதா..? எனக் கேட்டால்... ஆம், இதுவரை கடந்த 11 ஆண்டுகளில் 24 பேர் தாங்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்கிறார் தலைவர்.

அவசரங்கள்

அவசரங்கள்

தன் தாய் இறந்ததற்கு கடைசி காரியம் செய்ய காசில்லாதவருக்கு அவசரக் கடன் கொடுத்தது தொடங்கி, விவசாய விதை வாங்க, உரம் வாங்க, வியாபாரம் செய்யக் கடன் கொடுத்தது வரை பல தேவைகளுக்கு கடன் கொடுத்து 14 கிராம மக்களையும், கந்து வட்டி பிசாசிடமிருந்து, பக்குவமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறது இந்த Dullopur People Bank என செல்லமாக அழைக்கப்படும் டுல்லோபூர் மக்கள் வங்கி.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

10 வருடம் முன், கந்து வட்டிக்காரர்களிடம் கை கட்டி, குனிந்த முதுகு நிமிராமல் கடனுக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்த Dullopur உழவர்கள்...

இன்று மார் நிமிர்த்தி, தங்கள் மண்ணில் உழுது கொண்டிருக்கிறார்கள். அந்த 14 கிராம மக்களின் ஒற்றுமைக்கும், அவர்களின் Dullopur People Bank முன்னெடுப்புக்கும் தலை வணங்குவோம்.

இந்த செய்தி நம் இளைஞர்களின் மனத்தையும் உழுட்டும்,

உழவர்களுக்கு எதிரான கடன் கொடுமைகள் தமிழகத்தில் ஒழியட்டும்,

உழவு ஜெயிக்கட்டும்,

உழவன் ஜெயிக்கட்டும்... நாடு தானாக வல்லரசாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dullopur People Bank giving farm loan for 1 percent to protect villagers from private loan sharks

Dullopur People Bank giving farm loan for 1 percent to protect villagers from private loan sharks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X