ஒரு பக்கம் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம், மறுபக்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மேம்படுத்த இந்தியா இதுவரை பார்க்காத பட்ஜெட் அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் விவசாயிகளுக்கான உர மானியத்திற்காக 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை உரத்துறை நிதியமைச்சகத்திடம் கோரியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் உரத்திற்கான மானியத்தை விவசாயிகளுக்கே நேரடியாகச் செலுத்தும் மிக முக்கியமான திட்டத்தையும் மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் இந்தியாவில் இருக்கும் 14 கோடி விவசாயிகள் நேரடியாகப் பலனைப் பெற முடியும்.

பொருளாதார ஊக்க திட்டம்
சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தில் விவசாய உரத்திற்கான மானியமாக மத்திய அரசு சுமார் 65,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த நிலையில், தற்போது உர உற்பத்தியாளர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைக்கும், வரும் நிதியாண்டுக்கான மானியத்திற்கும் கூடுதலான நிதியைக் கோரியுள்ளது விவசாய உரத் துறை.

1.36 லட்சம் கோடி ரூபாய்
இதன் அடிப்படையில், 2021-22ஆம் நிதியாண்டுக்கான விவசாய உரம் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அளிக்க வேண்டிய மானிய நிலுவைத் தொகையை அளிக்கவும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளது. மேலும் இவ்விரண்டுக்கும் தேவையான மொத்த நிதி 1.36 லட்சம் கோடி ரூபாய்.

புதிய மானிய திட்டம்
இதற்கிடையில் விவசாய உரத்திற்கான மானியத்தை நிறுவனங்களுக்கு அளிக்காமல் நேரடியாக விவசாயிகளுக்கே அளிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தத் திட்டம் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்பட்டால் விவசாய உரங்களுக்கான மானியத்தை விவசாயிகள் நேரடியாகத் தங்களது வங்கிக் கணக்கிற்கே பெறுவார்கள். இதனால் சுமார் 14 கோடி விவசாயிகள் நேரடியாக நன்மை அடைய உள்ளனர் என இத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

விவசாய உரம்
மத்திய அரசு விவசாய உரத்திற்கான மானியமாக 2019 நிதியாண்டில் 70,605 கோடி ரூபாயும், 2020ஆம் நிதியாண்டில் 79,998 கோடி ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது மத்திய அரசின் மொத்த செலவின திட்டத்தில் சுமார் 10 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவசாய உரத் துறை தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகையைக் கேட்டு உள்ள நிலையில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.10,000 கோடி சேமிப்பு
மத்திய அரசின் direct benefit transfer (DBT) திட்டத்தின் மூலம் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைச் சேமித்துள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் புதிய திட்டத்தின் மூலம் கூடுதலாகச் சேமிப்பை அளிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் நில உரிமையாளர்களுக்கு மட்டுமே பலன் கிடைத்து வரும் நிலையில் இந்த உர மானிய திட்டம் விவசாயிகளுக்கு நேரடியாக நன்மை பெற உதவும்.