மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களுக்குப் பயன்படும் வரையில் வரிக் குறைப்பு, முதலீட்டுத் தளர்வுகள் அளிக்காதது ஏமாற்றமாக உள்ளது.
குறிப்பாகக் கொரோனா பாதிப்பில் இருந்து பல கோடி மக்கள் இன்னமும் வேலைவாய்ப்புக் கிடைக்காமல், வருமானத்தில் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும் இந்த வேளையில் வருமான வரியில் குறைந்தபட்ச வரித் தளர்வுகள் இருக்கும் என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்த்த நிலையில் பட்ஜெட் 2021 ஏமாற்றம் அளித்துள்ளது.
ஆயினும் மாத சம்பளக்காரர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் பல விஷயங்கள் இந்தப் பட்ஜெட்-ல் உள்ளது. அதைக் கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஈபிஎப் திட்டம்
மாத சம்பளக்காரர்கள் ஒவ்வொரு மாதம் ஈபிஎப் திட்டத்திற்குச் செலுத்தி வருகிறோம், இப்படிச் செலுத்தப்படும் பணத்திற்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு எவ்விதமான வட்டியும் இல்லை.
ஆனால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் ஈபிஎப் மற்றும் விபிஎப் திட்டங்களில் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு என அறிவித்துள்ளது. இதனால் 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் செய்யப்படும் முதலீட்டுக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வருமான வரி பலகையின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். இது வருகிற ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வருகிறது.

முன்கூட்டிய வரி
வருமான வரி செலுத்துவோர் இனி முன்கூட்டிய வரி செலுத்தும் போது அவர்களுக்குக் கிடைக்கும் ஈவுத்தொகை (Dividend) வருமானத்தை முன்கூட்டியே கணக்கிட்டு வரி செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் பணத்தை அரசுக்குச் செலுத்துவதைத் தடுக்க முடியும்.

யூலிப் திட்டம்
பிப்ரவரி 1, 2021ஆம் தேதிக்குப் பின் வாங்கப்படும் யூலிப் (ULIP) திட்டத்தில் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் செய்யப்படும் முதலீட்டுக்கு கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் விதிக்கப்படும். ஈபிஎப் திட்டத்தைப் போலவே இந்தத் திட்டத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள்
75 மற்றும் அதற்கு அதிகமாக வயதுடைய மூத்த குடிமக்களுக்குப் பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே வருடாந்திர வருமானமாக இருக்கும் பட்சத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை. இது பட்ஜெட் 2021ல் மிகவும் முக்கியமான மாற்றம். பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே இருக்கும் பட்சத்தில் வங்கிகளே வரியைக் கணக்கிட்டு வரிப் பிடித்தம் செய்துகொள்ளும்.

வருமான வரி அறிக்கையில் கூடுதல் தகவல்
வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது சம்பள வருமானம், வங்கி கணக்கு, வரி செலுத்திய தகவல், டிடிஎஸ் விபரம் ஆகியவை முன்கூட்டியே பதிவிட்டு இருக்கும் நிலையில், தற்போது கேபிடல் கெயின்ஸ், ஈவுத்தொகை வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி வருமானம், போஸ்ட் ஆபீஸ்-ல் இருந்து கிடைத்த வருமானம் ஆகியவற்றையும் நேரடியாக வருமான வரி அறிக்கையில் சேர்க்கப்படும்.

மலிவு விலை வீடு
மாத சம்பளக்காரர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது வீடு. பட்ஜெட் அறிக்கையில் மலிவு விலை வீடுகளுக்குக் கிடைக்கும் வரிச் சலுகை மீண்டும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு 45 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்பில் வீடு வாங்கும் பட்சத்தில் 1.5 லட்சம் ரூபாய் அளவிலான வரிச் சலுகை பெற முடியும்.

வெளிநாட்டில் ஊழியர்கள்
வெளிநாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை இந்தியாவில் இருக்கும் கணக்கில் செலுத்தும் போது இரண்டு முறை வரி விதிப்புச் செய்யப்படும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்கும் படி புதிய வரைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.

வருமான வரி அறிக்கை
தாமதமாக அல்லது திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கை செலுத்தும் காலம் 3 மாதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வருமான வரி துறையின் ஆய்வு காலமும் 3 மாதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இது வருமான வரி அமைப்பில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.

faceless விசாரணை
50 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர வருமானம் கொண்டவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சர்ச்சைக்குரிய வருமானம் அளவீட்டை கொண்டவர்களுக்குப் பிராந்திய வித்தியாசம் இல்லாமல் Faceless விசாரணை நடத்த Dispute Resolution Committee (DRC) என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் வருமான வரித் தாக்கலில் ஆரம்பகட்ட விசாரணைகளை முடிக்க முடியும்.

வருமான வரி விசாரணை
இதேபோல் 2ஆம் கட்ட விசாரணையும் Faceless முறையில் விசாரிக்க National Faceless Income-tax Appellate Tribunal Centre பரிந்துரை செய்துள்ளது.