இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீடு குறையும் அபாயம்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீடு குறையும் அபாயம்!
டெல்லி: இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீடு குறையும் அபாயம் உள்ளதாக சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து இன்று பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. மேலும் ரூபாயின் மதிப்பும் மேலும் சரிவடைந்தது.

'Will India be the first BRIC fallen angel?' என்ற தலைப்பில் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை அடங்கிய 'பிரிக்' (BRIC என்றால் Britain, Russia, India, China நாடுகளைக் குறிக்கும்) நாடுகளில் முதலீட்டு தர மதிப்பீடு குறைக்கப்படும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் மொத்த உற்பத்தி (GDP) சரிந்து வருவதாலும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்கிவிட்டதாலும் இந்த ஆபத்து எழுந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் கொள்கைகள், பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு தடைக்கல்லாக இருப்பதால் நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கி விட்டன. மேலும் கூட்டணிக் கட்சிகள் தான் முக்கிய மத்திய அமைச்சர் பதவிகளை வைத்துள்ளதால் பிரதமரால் நினைத்தபடி பொருளாதார நடவடிக்கைகளை அமலாக்க முடியவில்லை என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

இப்போது இந்தியாவின் முதலீட்டு தர மதிப்பீடு 'BBB' என்ற நிலையில் உள்ளது. பொருளாதார நிலைமை சீராகாவிட்டால் இந்தியாவின் முதலீட்டுத் தரத்தை 'யூகமான சந்தை' ('speculative grade') என்ற நிலைக்குக் குறைப்போம் என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் கூறியுள்ளது. தர மதிப்பீடு குறைக்கப்பட்டால், மத்திய அரசின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள முதலீடுகளை முதலீட்டாளர்கள் திரும்பப் பெறும் நிலை ஏற்படலாம். அந்தப் பணத்தை முதலீட்டாளர்கள் பொருளாதாரரீதியில் ஸ்திரமான நிலையில் உள்ள நாடுகளில் முதலீடு செய்யலாம்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மத்திய அரசின் பங்குகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் உள்ள முதலீடுகள் வாபஸ் ஆகலாம். இதனால் நாட்டில் பணப் புழக்கம் குறைந்து விலைவாசி மேலும் விண்ணைத் தொடும் அபாயமும் உள்ளது என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரித்துள்ளது.

மழை பொய்த்துவிட்டாலோ, சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல்கள் அதிகமானாலோ இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் என்ற நிலைக்குக் கூட சரியலாம் என்றும் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் கூறியுள்ளது.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருவதாலும், நாட்டில் இந்த ஆண்டு மழை சராசரி அளவுக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளதாலும் உணவுத் தட்டுப்பாடோ, எரிபொருள் பிரச்சனையோ இருக்காது. இதனால் இந்த நிதியாண்டிலேயே இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையை எட்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறினாலும் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் எச்சரிக்கையையடுத்து இன்று இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் (foreign institutional investors- FIIs) தங்களது முதலீடுகளை திரும்பப் பெற ஆரம்பித்து, பங்குகளை விற்க ஆரம்பித்ததால் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.

இதன் எதிரொலியாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் 32 பைசா சரிந்தது.

நிலைமை விரைவில் சீராகவிட்டால் பிரிக் (BRIC) நாடுகளில் உள்ள 'I', இந்தியாவுக்குப் பதிலாக இந்தோனேஷியாவைக் குறிக்கும் நிலை உருவாகிவிடும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தோனேஷியாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்ற, இறக்கங்கள் இல்லாமல் சீராக உள்ளதே இதற்குக் காரணம். இதனால் இந்தியாவில் முதலீடு செய்வதை விட இந்தோனேஷியாவில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நிலை உருவாகவும் வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Story first published: Tuesday, June 12, 2012, 16:12 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns