டெல்லி: நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தில் போதிய பருவமழை கிடைக்காவிட்டாலும் இனிவரும் மாதங்களில் நிச்சயம் மழைப்பொழிவு இருக்கும் என்று வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை தாமதமாகி வருவது மிகப் பெரிய பிரச்சனை இல்லை. இனிவரும் வாரங்களில் பருவமழை சீராகிவிடும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழையளவை இது சரி செய்துவிடும்.
மஹாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 31 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் மழை பொழிந்திருக்கிறது. இதனால் தானியங்கள் பயிரிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தானியங்கள் கையிருப்பு போதுமானதாக உள்ளது. மாநிலங்கள் கேட்கால் மத்திய அரசு அவற்றை கொடுக்கத் தயாராக இருக்கிறது.
வழக்கத்தைவிட அதிகளவு நெல் பயிரிடப்பட்டுள்ளதால் அரிசி உற்பத்தியில் பிரச்சனை ஏதும் இல்லை.
நாட்டின் விவசாய நிலங்களில் 40 விழுக்காடு மட்டுமே நீர்பாசனத்தைப் பெற்றுள்ளது. பருவமழை சீராக இருந்ததால், இந்தியா முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த ஆண்டு 252.56 மில்லியன் டன் உணவுதானியங்களை உற்பத்தி செய்தது என்றார் அவர்.