சிவகங்கை மாவட்டம் புது வயலுக்கு அடுத்தபடியாக தென்மாவட்டங்களில் அதிக அரிசி ஆலைகள் நெல்லை, பாவூர்சத்திரம் பகுதியில் இயங்கி வருகின்றன. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளுக்கு நெல்லை, தூத்துக்குடி தவிர விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.
தற்போது தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் நெல்லிற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் வரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதால் அரவைக்கு நெல் கிடைக்காமல் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் டீலக்ஸ் பொன்னி அரிசி ரூ.2500க்கு விற்பனையானது. தற்போது அதே ரக அரிசியின் விலை ரூ.3,000க உயர்ந்துள்ளது.
செல்ல பொன்னி ரகம் ரூ.2200லிருந்து ரூ.2800 ஆகவும், அம்பை 16 மற்றும் பச்சரிசி ரூ.2,200லிருந்து ரூ.2500 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.5 முதல் தரத்திற்கு ஏற்ப ரூ.10 வரை லாபம் வைத்து அரிசி விற்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல் மகசூல் கிடைக்க இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே நெல் மற்றும் அரிசி விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.