ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 9 நிறுவனங்களுக்கு வழங்கிய 122 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த லைசென்ஸ்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஏலம் மூலம் விற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் நடந்தது.
அதில், ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவது தொடர்பாக குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்வது குறித்து ஆராயப்பட்டது. ஆனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கபடவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இனி எஞ்சியிருக்கும் 50 நாள்களுக்குள் (ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்) ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவது சாத்தியமில்லை என்பதால் கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.