மாருதி நிறுவனத்தில் அடிக்கடி வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்து வருகிறது. இம்முறை நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டம் அந்நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் போல் உள்ளது.
தொழிலாளர் பிரச்சனை, வேலைநிறுத்தப் போராட்டம் அந்நிறுவனத்திற்கு ஏன் நல்லதல்ல என்பதைப் பார்க்கலாம்.
பயணிகள் கார் பிரிவு ஏற்கனவே பிரச்சனையில் உள்ளது. பெட்ரோல் கார்களில் இருந்து டீசல் கார்களுக்கு மாறிவரும் காலமாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் கார்கள் தான் மாருதியின் முக்கிய தயாரிப்பாகும். தற்போது மக்கள் டீசல் கார்களை அதிகம் விரும்புவது மாருதி நிறுவனத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
இன்றைய பஙகுச் சந்தையில் மாருதி நிறுவன பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழிலாளர் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் முதலீட்டாளர்களுக்கு மாருதி நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கை போய்விடக்கூடும்.
மாருதியின் வரலாற்றிலேயே 2011-2012ல் இந்திய பங்குச் சந்தையில் அதன் பங்குகள் 40 சதவீதத்திற்கு கீழ் சென்றது. ஆட்டோமொபைல் பிரிவில் எப்பொழுதுமே கடும் போட்டி இருக்கும். அப்படி இருக்கையில் மாருதி நிறுவனத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் சந்தையில் அதன் பங்கு, பிராண்ட் பெயர் போவதுடன் நஷ்டம் ஏற்படும்.
ஒரு ஆண்டுக்குள் 4வது முறை வேலைநிறுத்தப் போராட்டம் நடந்துள்ளது. மானேசரில் உள்ள மாருதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. நீண்ட காலம் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தால் கம்பெனி திவாலாகிவிடும். மாருதி நிறுவனத்தில் தற்போது அடிக்கடி வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த முறை மாருதி நிறுவனத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு ஊழியர் பலியாகியுள்ளார். மேலும் 40 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் தற்போது நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் கவலை அளிப்பதாக உள்ளது. மேலும் இந்த போராட்டம் நீண்ட நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது.