
2011-2012ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் நேற்று வருமான வரித்துறை அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ஆன்லைனில் தான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதால் கடைசி நாளான நேற்று ஆன்லைனில் அலைமோதிய கூட்டத்தால் வருமான வரித்துறையின் இணையதளம் பல மணிநேரம் முடங்கியே கிடந்தது.
மேலும் நேற்று வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என 20 மாநிலங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டதால் ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் கடந்த 28ம் தேதி 40 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டன. கடந்த 4 நாட்களாக செயல்பட்ட அந்த கவுண்ட்டர்களில் 51,455 பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.