குறைந்த விலையில் அரிசி, பருப்பு, பாமாயில் கிடைக்க நடவடிக்கை: ஜெயலலிதா

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைந்த விலையில் அரிசி, பருப்பு, பாமாயில் கிடைக்க நடவடிக்கை: ஜெயலலிதா
சென்னை: தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் அரிசி, பருப்பு விலைகளைக் குறைத்து விற்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

இது குறித்த அவரது அறிக்கை விவரம்:

"அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பது பெரும்பாலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையே சார்ந்துள்ளது என்றாலும், தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் விலையேற்றத்தால் பாதிப்பு அடையாத வகையில், விலைவாசியை குறைக்கும் நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.

இன்றியமையாப் பொருட்களின் விலை அளவுக்கு அதிகமாக உயரும் போது அவற்றைக் கொள்முதல் செய்து அமுதம் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலமாக நுகர்வோர்களுக்கு அடக்க விலையில் வழங்கும் வகையில், 50 கோடி ரூபாய் நிதி இருப்புடன் கூடிய ஒரு விலைக் கட்டுப்பாட்டு நிதியத்தினை ஏற்படுத்தினேன்.

கடந்த காலங்களில், மிளகாய், புளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் இருந்த போது, இந்த விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் அடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டதன் காரணமாக, வெளிச் சந்தையில் அவற்றின் விலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததன் காரணமாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, வெளிச்சந்தையில் விற்கப்படும் அரிசியின் விலை, குறிப்பாக சன்னரக அரிசியின் விலை உயர்ந்துள்ளது.

எனவே, இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து 11.9.2012 அன்று எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்தாலோசனைக்குப் பிறகு, விலைக் கட்டுப்பாட்டு நிதியத்தினைப் பயன்படுத்தி, நெல் விளைச்சல் அதிகமாக உள்ள மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டின் பொன்னி அரிசிக்கு இணையான சொர்ணா, ஐ.ஆர். 36 மற்றும் ஐ.ஆர். 50 அரிசிக்கு இணையான உயர் சன்ன ரக அரிசி ‘மினிகிட்' ஆகியவற்றை கொள்முதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ சொர்ணா, ஐ.ஆர். 36 அரிசியினை அடக்க விலையான 25 ரூபாய்க்கும், மினிகிட் அரிசியினை அடக்க விலையான 31 ரூபாய்க்கும் விற்பனை செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

சராசரியாக, மாதம் ஒன்றுக்கு 14,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 2,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பினை சிறிதளவு மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வந்தது. இவ்வாறு மத்திய அரசு வழங்கி வந்த துவரம் பருப்பின் அடக்க விலை ஒரு கிலோ 55 ரூபாய் ஆகும். இதனை எனது தலைமையிலான அரசு கிலோ 30 ரூபாய் என்ற விலையில் வழங்கி வருகிறது. இவ்வாறு மிகக் குறைந்த அளவிலான பருப்பிற்கு வழங்கி வந்த குறைந்த மானியத்தையும் மத்திய அரசு 30.6.2012 உடன் நிறுத்திவிட்டது.

 

இது தவிர, சராசரியாக மாதம் ஒன்றுக்கு 10,000 மெட்ரிக் டன் உளுத்தம் பருப்பும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கென மத்திய அரசு எவ்வித மானியத்தையும் அளிக்கவில்லை. இருப்பினும், எனது தலைமையிலான அரசு உளுத்தம் பருப்பினை கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் என்ற குறைந்த விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது.

பாமாயிலைப் பொறுத்த வரையில், மத்திய அரசு 66 ரூபாய் 30 காசு விலையுள்ள ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டினை 52 ரூபாய் 65 காசு என்ற விலையில் மாநில அரசுக்கு வழங்கி வருகிறது. அதில் மேலும் 27 ரூபாய் 65 காசு மானியம் வழங்கி, ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டை 25 ரூபாய் என்ற விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளினால் விலைவாசி உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, தற்போது நியாய விலைக் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை இதே விலைகளில் தொடர்ந்து மேலும் ஆறு மாதங்களுக்கு, அதாவது 1.10.2012 முதல் 31.3.2013 வரை வழங்க ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மேலும் ஆறு மாதங்களுக்கு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவதால் அரசுக்கு 907 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்கள் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றைப் பெற வழி வகுப்பதோடு மட்டுமல்லாமல், வெளிச்சந்தையில் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டிற்குள் இருக்கவும் வழிவகுக்கும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rice, pulsus prices will be reduced in co-op societies: Jayalalithaa | குறைந்த விலையில் அரிசி, பருப்பு, பாமாயில் கிடைக்க நடவடிக்கை: ஜெயலலிதா

Rice, pulsus prices sold through co-op societies will be reduced, CM Jayalalithaa has announced today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X