கடன் 'ஷாக்'கில் இருக்கும் மின்வாரியத்தை தூக்கி நிறுத்த ரூ.1000 கோடி நிதி-ஜெ.

By Sutha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் 'ஷாக்'கில் இருக்கும் மின்வாரியத்தை தூக்கி நிறுத்த ரூ.1000 கோடி நிதி-ஜெ.
சென்னை: தமிழக மின்வாரியத்தின் உடனடித் தேவைக்காக ரூ.1000 கோடியை முன்பணமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அதே வேளையில், பொது நலன் பாதுகாக்கப்படவும், மக்களுக்கு தரமான சேவை நியாயமான விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படவும் ஏற்படுத்தப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் திறம்பட செயலாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

 

இந்த வகையில், தமிழ் நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்தும், புதிய மின் திட்டங்களின் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அவை மின் உற்பத்தியைத் துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரவினம் மற்றும் செலவினங்களுக்கிடையே நிகர இடைவெளி ஏற்பட்டது. இதன் விளைவாக, இந்த நிதியாண்டின் துவக்கத்தில் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தொடர் இழப்பு 54,500 கோடி ரூபாயும், வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் 46,500 கோடி ரூபாயும் என இருந்தது. இவையன்றி, மின் உற்பத்தியாளர் மற்றும் இதர ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போது தமிழ் நாடு மின்சார வாரியம் இவ்வாறு அளவுக்கு மீறிய கடன் சுமைக்கு ஆளாகி, வாங்கிய கடனையும், வட்டியையும் திரும்பச் செலுத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. தமிழ் நாடு மின்சார வாரியத்தை இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீட்கும் வகையில், 2011-12ஆம் நிதியாண்டில் இது வரை வழங்கப்படாத உயர் அளவாக மானியத் தொகை, பங்கு மூலதனம் மற்றும் வழி வகை முன்பணம் என மொத்தம் 7913.45 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியது.

நடப்பு 2012-13ஆம் ஆண்டில் தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக 3020 கோடி ரூபாயையும், புதிய மின் திட்டங்களுக்கான பங்கு மூலதன உதவியாக 1500 கோடி ரூபாயையும் எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து 14.9.2012 அன்று எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலையை சீர்செய்யும் பொருட்டு, கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:

(1) 2012-2013ஆம் ஆண்டில் இதுவரை 3020 கோடியே 25 லட்சம் ரூபாய் மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உடனடித் தேவைக்காக தற்போது முன்பணமாக 1,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

(2) மத்திய அரசின் நிறுவனங்களாகிய மின் ஆற்றல் நிதி நிறுவனம் மற்றும் ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் ஆகிய நிறுவனங்களிடமிருந்து தலா 5,000 கோடி ரூபாய் உதவித்தொகையைக் கடனாகப் பெறும் வகையில் அந்நிறுவனங்களுக்கு மின்சார வாரியம் சார்பில் தமிழக அரசு கடன் உத்தரவாதம் அளிக்கும்.

(3) மின்சார வாரியங்களின் நிதி சீரமைப்புத் திட்டம் தொடர்பாக சதுர்வேதி குழுவின் அறிக்கையின் மீது மத்திய அரசின் மின்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் நிதி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குறுகிய மற்றும் நடுத்தர கால கடன் வகைகளில் 50 சதவீதத்தை, அதாவது, 9,529 கோடி ரூபாயை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

(4) நடப்பு நிதியாண்டில் மின்சார வாரியத்தில் ஏற்படக்கூடிய வருவாய் இழப்புத் தொகையில் 30 சதவீதத்தை, அதாவது, 1294 கோடி ரூபாயையும் தமிழக அரசு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை சீரடைய வழிவகை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jaya sanctions Rs. 1000 cr advance to TNEB | கடன் 'ஷாக்'கில் இருக்கும் மின்வாரியத்தை தூக்கி நிறுத்த ரூ.1000 கோடி நிதி-ஜெ.

Chief Minister Jayalalitha has sanctioned Rs. 1000 cr advance to TNEB.
Story first published: Sunday, September 16, 2012, 14:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X