மின்வெட்டுக்கு கடும் எதிர்ப்பு.. கோவையில் 20,000 தொழிற்சாலைகள் ஸ்டிரைக்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

மின்வெட்டுக்கு கடும் எதிர்ப்பு.. கோவையில் 20,000 தொழிற்சாலைகள் ஸ்டிரைக்
கோவை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு எதிரொலியாக தொழில் நிறுவனங்களை மூடும் நிலைக்கு தொழில் நிறுவனங்கள் தள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. மின்வெட்டைக் கண்டித்து கோவையில் 20,000 தொழிற்சாலைகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்திலும், முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டன.

குறைந்தது 8 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை தமிழகம் முழுவதும் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், தொழில்துறையினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வீட்டில் சட்னி அரைக்க முடியவில்லை, தொழில் நிறுவனங்களில் வேலைகளைப் பார்க்க முடியவில்லை. உற்பத்தி படுத்து விட்டது.

ஈரோட்டில் 40 சதவீத நிறுவனங்கள் மூடல்

ஈரோடு மாவட்டத்தில் 40 சதவீத தொழில் நிறுவனங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மின்வெட்டு காரணமாக இம்மாவட்டத்தில் தினமும் ரூ.15 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிகள், துணி பதனிடும் ஆலைகள், துணி சலவை ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், மஞ்சள் அரவை ஆலைகள், அரிசி ஆலைகள், உணவுப் பொருள்கள் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, ஆர்டர் இழப்பு, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் ஈரோடு தொழில் நிறுவனங்கள் சிக்கித் தவித்து வருகின்றன.

கடந்த ஒருவாரமாக ஈரோடு மாவட்டத்தில் தினமும் 14 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தொழில் நிறுவனங்களின் நிலை மேலும் மோசமாகிவிட்டது. நூல் உற்பத்தி ஆலைகள், காடா உற்பத்திக்கூடங்கள், துணி பதனிடும் ஆலைகள், துணி சலவை ஆலைகள், துணி உலர்த்தும் ஆலைகள் உள்ளிட்ட 13 வகையான துணி உற்பத்தி ஆலைகள், அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒருவாரமாக மின்வெட்டு அதிகரித்துள்ளதால் பிளாஸ்டிக், உணவுப்பொருள் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட 40 சதவீத தொழில் நிறுவனங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 25 சதவீத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பல லட்சம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு

தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் பெரிய நூற்பாலைகள் அதிக அளவில் உள்ளன. ஜவுளித் துறைக்குத் தேவையான இயந்திரங்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தவிர ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் உள்ளன.

இத்தொழிற்சாலைகளில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இது தவிர கோவையில் மட்டும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பம்ப், கிரைண்டர் தொழிற்சாலைகளிலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் மின்வெட்டால் கோவை பகுதியில் உற்பத்தியாகும் பொருள்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

தொழிற்சாலைகளுக்குக் கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்பட்டது. இப்போது நாளொன்றுக்கு சுமார் 16 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை. இதனால் கோவையில் உள்ள பல்வேறு நூற்பாலைகள், முக்கிய வார்ப்படத் தொழிற்சாலைகளை வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கு இங்குள்ள உரிமையாளர்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள முக்கியத் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டால் அதை நம்பியுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளும் இதில் வேலை பார்க்கும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

20,000 தொழிற்சாலைகள் ஸ்டிரைக்

இந்த நிலையில், தடையின்றி மின்சாரம் வழங்கக்கோரியும், மின்வெட்டை சமமாக நடைமுறைப்படுத்தக் கோரியும் இன்று கோவை மாவட்டத்தில் ஒரு நாள் ஸ்டிரைக் போராட்டம் நடந்தது.

ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) கோவை - திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா), தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட சிறு வார்ப்பட உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த அனைத்து தொழிற்கூடங்களும் மூடிக் கிடந்தன.

இதே போல் சிட்கோ தொழிற்பேட்டை உரிமையாளர் சங்கம், வெட் கிரைண்டர் அசோசியேசன், சிறு மின் விசை பம்ப் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் சங்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன.

கோவையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில் தொழிற்கூடங்கள் உள்ளன. அவை அனைத்தும் இன்று அடைக்கப்பட்டிருந்தன. மேலும், சிவானந்தா காலனியில் உள்ள தலைமை மின் பொறியாளர் அலுவலகமான டாடாபாத் மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடந்தது. இதில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

அதேபோல தமிழ்நாடு ஓட்டல் முன்பு இன்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் தொடங்கியது.

மதுரையிலும் நிலைமை மகா மோசம்

இப்போதுதான் ஒரு தொழில் நகராக மெல்ல மெல்ல வளர்ந்து வரும் மதுரை மாவட்டத்திலும் கூட நிலைமை மோசமாகத்தான் உள்ளது.

கப்பலூர், கே.புதூர், உறங்கான்பட்டி ஆகிய இடங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பிளாஸ்டிக், ரப்பர், என்ஜினீயரிங், ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் உள்ளிட்டவை சார்ந்த சிறுதொழில் கூடங்கள் உள்ளன.

கப்பலூர் தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக், ரப்பர் சார்ந்த தொழில் கூடங்கள் ஏராளமாக இருக்கின்றன. மின்வெட்டு காரணமாக உற்பத்தி தொடர்பாக எந்தவிதத் திட்டமிடலையும் தொழில்முனைவோர் மேற்கொள்ள இயலவில்லை.

தொடர் மின்வெட்டு காரணமாக கப்பலூர் தொழிற்பேட்டையில் மட்டும் ஏறத்தாழ 30 சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மின் வாரியத்திடம் இருந்து யூனிட் ரூ.6-க்கு மின்சாரம் பெறுகிறோம். ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் மின்சாரத்துக்கான செலவு ரூ.16 ஆக உயர்ந்துவிட்டது.
60 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரையை அடுத்த உறங்கான்பட்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சிறுதொழில் கூடங்களில் 30 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மூன்று ஷிப்டுகள் இயங்கிவந்த இந்த ஆலைகள் தற்போது ஒரு ஷிப்டை குறைத்துவிட்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: power cut, மின்தடை
English summary

Industries on dire situation due to power cut | மின்வெட்டுக்கு கடும் எதிர்ப்பு.. கோவையில் 20,000 தொழிற்சாலைகள் ஸ்டிரைக்

Industries are on dire situation due to power cut in Tamil Nadu. Many industrial firms have been closed due to lack of power.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns