
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கை சிபிஐயும் அமலாக்கப் பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ராசா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கான ஆவணங்களை பரிசீலனை செய்த வருமான வரித்துறை, சில சொத்துக்களுக்கான வரி செலுத்தியதில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகக் கருதியது.
இதையடுத்து இது குறித்த விளக்கம் கேட்டு ராசாவுக்கு திருச்சி வருமானவரித் துறை அலுவலக உதவி கமிஷனர் ராமலிங்கம் சம்மன் அனுப்பியிருந்தார். ராசாவின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்மன் தொடர்பாக நேற்று ராசா, திருச்சி வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் ஆடிட்டர் ஒருவரும் உடன் வந்தார். வருமான வரி செலுத்தியதற்க்கான ஆவணங்கள், சொத்துக்களுக்கான ஆவணங்களை ராசா எடுத்து வந்தார்.
அவற்றை சரி பார்த்த அதிகாரிகள் ராசாவிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விரைவில் ராசாவின் மனைவி பரமேஸ்வரி மற்றும் சகோதரர் கலியபெருமாளுக்கும் சம்மன் அனுப்பப்படலாம் என வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications