துபாய்: கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து இந்தியாவில் இருந்து கறிக்கோழிகள், முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமனில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை உலக விலங்குகள் நல அமைப்பு கடந்த வாரம் உறுதி செய்தது. இதையடுத்து இந்தியாவில் இருந்து கறிக்கோழிகள் மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமனில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இந்த வாரம் முதல் அமலில் உள்ளது.
முன்னதாக ஒரிசா, திரிபுரா மற்றும் மேகாலயாவில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஓமனில் இந்திய கறிக்கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி தான் நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட 2 மாதத்திற்குள் இந்திய கறிக்கோழிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் பரவியதன் எதிரொலியாக அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் கோழி மற்றும் முட்டை லாரிகள் எல்லையிலேயே பரிசோதிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. தீபாவளி நேரத்தில் கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications