திருவனந்தபுரம்- தமிழகம் ரயில் நீட்டிப்புக்கு எதிராக கேரளாவில் அவதூறு பிரச்சாரம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குமரி: திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலிக்கு ரயில்கள் நீட்டிப்பு செய்வதற்கு எதிராக கேரளாவில் உள்ள ஒரு சில அமைப்புகள் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதற்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அடுத்து வருகின்ற ரயில்வே நிதிநிலை அறிக்கையில் திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் செல்லும் இரண்டு ரயில்களில் ஒரு ரயிலை கன்னியாகுமரிக்கும் மற்றொரு ரயிலை திருநெல்வேலிக்கும் நீட்டிப்பு செய்யும் திட்டம் ரயில்வே துறையின் பரிசீலனையில் உள்ளது.

திருவனந்தபுரத்திலிருந்து மாலை நேரத்தில் மங்களூருக்கு புறப்படும் மூன்று ரயில்களில் ஏதாவது ஒரு ரயிலை 87 கி.மீ அருகில் உள்ள கன்னியாகுமரிக்கு நீட்டிப்புச் செய்வதற்கு கடந்த ஏழு ஆண்டுகளாக ரயில்வே துறைக்கு குமரி மாவட்டத்திலிருந்து குமரி மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

திருவனந்தபுரத்திலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் நெடுந்தூர ரயில் வசதிகள் உள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து கோழிக்கோடு, மங்களூர் மார்க்கம் பயணிக்கும் எந்த ஒரு நெடுந்தூர ரயிலும் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்ததாக வரலாறு இல்லை.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்திலிருந்து பல்வேறு ரயில்கள் கேரளத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. அவைகளில் குறிப்பாக மங்களூர்-புது டெல்லி ரயிலை எர்ணாகுளம் வரையிலும், மங்களூர்-பெங்களூர் ரயிலை கண்ணூர் வரையிலும், கோவை-பெங்களூர் பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை எர்ணாகுளம் வரையிலும், சென்னை-கோவை ரயில் மங்களூர் வரையிலும் கேரளா பயணிகளுக்காக கடந்த காலங்களில் நீட்டிப்பு செய்யபட்டுள்ளன.

இதை போல் தெற்கு ரயில்வே பொது மேலாளராக தாமஸ் வர்கீஸ் இருந்த காலத்தில் சென்னையிலிருந்து வடஇந்தியாவுக்கு இயக்கபட்ட பல்வேறு ரயில்கள் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யபட்டன. இவ்வாறு நீட்டிப்பு செய்யும்போது தமிழக மக்கள் பிராந்திய அடிப்படையிலோ மாநில வாரியாக ரயில்கள் என்றோ எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மற்ற இடங்களில் உள்ள அனைத்து ரயில்களையும் கேரளாவுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டுமாம். இவ்வாறு செய்வது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள முன்பதிவு ஒதுக்கீடையும் கேரளத்துக்கு சாதகமாக அதிகரித்துவிட்டனர். ஆனால் கேரளாவில் உள்ள எந்த ரயிலையும் மற்ற பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்யமாட்டார்களாம்.

ஒரு சில மலையாள பத்திரிக்கைகளில் கடந்த வருடம் திருவனந்தபுரம்-மங்களூர் பரசுராம் ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டது என்றும் இந்த ரயிலால் கேரளத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-மங்களூர் பரசுராம் ரயில் அதிகாலை 4:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறபட்டு செல்வதால் குமரி மாவட்ட பயணிகளை விடவும் கேரளாவில் உள்ள பாறசாலை, நெய்யாற்றின்கரை பகுதி பயணிகளுக்குகே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில் இந்த ரயிலால் கேரளத்துக்கு பாதிப்பு என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

திருவனந்தபுரம்-மங்களூர் 16603/04 மாவேலி ரயிலை கன்னியாகுமரிக்கும், திருவனந்தபுரம்-மங்களூர் 16347/48 ரயிலை திருநெல்வேலிக்கும் நீட்டிப்பு செய்வதால் ஐம்பது சதமானம் முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு திருவனந்தபுரத்திலிருந்து மாற்றி நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கும் ஒதுக்கப்படும் என்று அபாண்டமாக குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது குமரி, நெல்லை மற்றும் தென் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பயணிகள் மங்களூர் மற்றும் வடகேரள பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் திருவனந்தபுரம் வரை பேருந்தில் பயணித்து அதன்பிறகு அங்கிருந்து புறப்படும் ரயில்களில் பயணிக்கின்றனர். மங்களூர் மற்றும் அதைச்சுற்றிய வடகேரள பகுதிகளுக்கு தற்போது நேரடியாக பேருந்துகளிலோ மற்ற மார்க்கங்களிலோ பயணிக்க முடியாமல் ரயில்களில் மட்டுமே பயணிக்கும் நிலை உள்ளது.

இவ்வாறு இருக்கும் போது இந்த ரயில்களை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் கேரளாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திருவனந்தபுரத்திலிருந்து மூன்று ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் ஒரு ரயிலைத் தான் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் பயணிக்கும் மூன்று ரயில்களிலும் முன்பதிவு இருக்கைகள் தற்போது பொது ஒதுக்கீடாகவே உள்ளது.

இது தமிழகத்துக்கு நீட்டிப்பு செய்தாலும் பொது ஒதுக்கீடாகவே இருக்கும். ரயில்வேத்துறை ஓர் இரவு மட்டும் பயணிக்கும் ரயில்களில் புறப்படும் இடம் முதல் 500 கி.மீ பகுதிக்குள் இருக்கும் அனைத்து ரயில்நிலையங்களுக்கும் உட்பட்ட பயணிகளுக்கு உள்ள முன்பதிவு இருக்ககைகள் பொது ஒதுக்கீடாகவே இருக்கும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். இது ரயில்வே துறையில் பின்பற்றப்படும் குறைந்தபட்ச பொது விதி ஆகும். இந்த தகவல் கூடத் தெரியாமல் பத்திரிக்கைகள் வேண்டும் என்றே தமிழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த மூன்று ரயில்களில் சராசரி முன்பதிவு காத்திருப்போர் பட்டியல் நிலவரம் மிகவும் குறைவாகவே எப்போதும் காணப்படுகிறது. வார இறுதி நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் மட்டுமே இந்த ரயில்கள் காத்திருப்போர் பட்டியல் 50 முதல் 100 வரை மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நாட்களில் காலி இருக்கைகளுடன் இந்த ரயில்கள் செல்கின்றன.

கடந்த ரயில்வே பட்ஜெட்டில் திருநெல்வேலிக்கு கேரளாவிலிருந்து ஏழு ரயில்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அபாண்டமாக வாய் கூசாமல் பொய் செய்தியை வெளியிடுகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து சென்னை, பிலாஸ்பூர், ஹாப்பா, ஜம்முதாவி ஆகிய நான்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் திருநெல்வேலியில் இருந்து மூன்று ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதில் தாதர்-திருநெல்வேலி வாராந்திர ரயில் (வழி கேரளா), திருச்சி- திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் என இரண்டு புதிய ரயில்களும் யஷ்வந்பூர்-தாதர் வாரத்துக்கு மூன்று நாள் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பும் ஆகும். ஆக மொத்தம் திருநெல்வேலியில் இருந்து செல்லும் மொத்த ரயில்களின் எண்ணிக்கையே ஏழு மட்டுமே. இந்த ஏழு ரயில்களில் மூன்று ரயில்கள் கேரளா வழியாகவே இயக்கப்படுகிறது.

கடந்த பட்ஜெட்டில் அறிவித்த மூன்று ரயில்கள் திட்ட கருத்துருவின் போது நாகர்கோவிலுக்கு வந்த ரயில்கள் ஆகும். திருவனந்தபுரம் கோட்டம் இந்த ரயில்களை நாகர்கோவிலில் இருந்து இயக்க முடியாது என்றும், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கம் கேரளா பயணிகளுக்கு பயன்படும் ரயில்களை மட்டுமே இயக்க முடியும் என்றும் தெரிவித்ததின் அடிப்படையில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டது. இவ்வாறு இருக்கையில் வேண்டும் என்றே தமிழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியை உருவாக்கும் விதத்தில் பத்திரிக்கைகளில் செய்தியை வெளியிடுகின்றனர்.

இரண்டு ரயில்களை தமிழகத்துக்கு நீட்டிப்பு செய்வதால் திருவனந்தபுரம் கோட்டத்தின் வருமானம் குறையும் என்றும், இவ்வாறு படிப்படியாக திருவனந்தபுரம் கோட்டத்தை இல்லாமல் செய்வதாக பத்திரிக்கைகளில் போட்டுள்ளனர். இரண்டு ரயில்களை தமிழக பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்வதால் எவ்வாறு வருமானம் குறையும் என்று பத்திரிக்கைகள் தான் விளக்க வேண்டும்.

திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி வரை ஒரு ரயிலையும், திருவனந்தபுரம் கோட்டத்தின் தெற்கே உள்ள கடைசி எல்லைக்கு (மேலபாளையம்) அருகில் உள்ள திருநெல்வேலி வரை மற்ற ரயிலையும் நீட்டிப்பு செய்வதால் கோட்டத்தின் வருமானம் எந்த விதத்திலும் குறையாமல் மாறாக அதிகரிக்கவே செய்யும். திருவனந்தபுரம் கோட்ட எல்கைக்கு உட்பட்ட ரயில்நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு பயணச்சீட்டு, சாதாரண பயணச்சீட்டு ஆகியவற்றை மதுரை அல்லது பாலக்காடு கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களில் போய் எடுத்தால் ஒழிய கோட்டத்தின் வருமானம் எந்த அளவிலும் குறைய வாய்ப்பில்லை.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள குமரி மற்றும் நெல்லை மாவட்ட வழித்தடங்களை திருவனந்தபுரம் கோட்டத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மைதான் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.

குமரி மாவட்டத்துக்கு தேவையான புதிய ரயில்சேவைகள் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி வழியாக அதிக ரயில்கள், இங்குள்ள ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்தல், ரயில் முனைய வசதிகளை அதிகப்படுத்துதல், ரயில் நிலையங்களில் வருமானத்தின் அடிப்படையில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருதல், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நடைமேடை மூன்றில் இயக்குதல், தமிழக ரயில் பயணிகளை அவதிக்குள்ளாக்கும் திட்டங்களை கைவிடுதல் போன்ற பல ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை பாரபட்சம் இல்லாமல் நிறைவேற்றித் தந்தால் யாருமே கோட்டத்தை பிரிக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்.

கேரளத்துக்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் செய்துவிட்டு தமிழக ரயில் தடங்களை புறக்கணிப்பதினால் தான் திருவனந்தபுரம் கோட்டத்தை பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகளால் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ரயில்களையும் தமிழகத்துக்கு நீட்டிப்பு செய்தால் மட்டுமே திருவனந்தபுரத்திலிருந்து புதிய ரயில்கள் இயக்க முடியும். இதில் மாவேலி ரயில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் எந்தவித பராமரிப்பும் இன்றி காலையிலிருந்து மாலை வரை காலியாக நிறுத்தப்பட்டு இருக்கும். திருவனந்தபுரம்-மங்களூர் 16347/48 ரயில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் தினசரி 8 மணி நேரம் பிட்லெனில் நிறுத்தி பராமரிப்பு செய்யும் ரயில் ஆகும். இந்த ரயிலை நீட்டிப்பு செய்வதால் திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில் தற்போது உள்ள இடநெருக்கடியிலிருந்து மீண்டு அதிக இடவசதிகள் உருவாகும்.

தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களையும் ரயில் நிலையத்தின் வெளியே அதிக நேரம் நிறுத்தி வைப்பது தவிர்க்கப்பட்டு ரயில்கள் காலம் தவறாமல் ரயில்கால அட்டவணையில் உள்ளபடி குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு வந்து சேரும். இது மட்டும் இல்லாமல் திருவனந்தபுரத்திலிருந்து அடுத்த ரயில்வேபட்ஜெட்டில் சுமார் ஏழு முதல் பத்து புதிய ரயில்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் கோட்டம் ரயில்வே அதிகாரிகள் கேரளத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றனர் என்று செய்தி வெளியிட்டுள்ளனர். திருவனந்தபுரம் கோட்டம் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு பணிபுரிவர்கள் 95 சதமானத்திற்கும் அதிகமானவர்கள் மலையாளிகள் ஆவர். இந்த நிலையில் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு எதிராக எவ்வாறு திட்டங்களை செயல்படுத்த முடியும். அவ்வாறும் இருந்தால் இது போன்ற கேரளத்துக்கு எதிரான திட்டங்களை மலையாளிகள் தான் செயல்படுத்துகின்றனரா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Extension of trains to TN: False campaign in Kerala | திருவனந்தபுரம்- தமிழகம் ரயில் நீட்டிப்புக்கு எதிராக கேரளாவில் அவதூறு பிரச்சாரம்

The Kanyakumari District Railway Users' Association condemned the false campaign going on in Kerala about the extension of trains from Trivandrum to Kanyakumari and Tirunelveli.
 
Story first published: Monday, November 19, 2012, 12:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X