வெளிச்சந்தையிலும் விரைவில் ரூ. 20க்கு 1 கிலோ அரிசி.. ஜெ. அறிவிப்பு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

வெளிச்சந்தையிலும் விரைவில் ரூ. 20க்கு 1 கிலோ அரிசி.. ஜெ. அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தெரிவித்தார். இதற்காக 11 அம்ச திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரிசி விலையை உடனடியாக கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசி கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் என்ற விலையில் வெளிச் சந்தையில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த விற்பனை துவக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

விலைவாசி உயர்வு குறித்து சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில்,

விலைவாசி ஏற்றம் என்பது நாட்டின் பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதி கொள்கை, உரக் கொள்கை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி வீதங்கள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெரும்பாலான கொள்கைகளை வகுக்கும் அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் குவிந்து கிடக்கின்றன. எனவே, மத்திய அரசின் தவறான கொள்கைகளே தற்போதைய விலைவாசி உயர்விற்கான காரணம் என்று சொன்னால் அது நூற்றுக்கு நூறு உண்மை.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக கோடை வெயில் மக்களின் உடலை சுட்டெரிப்பது போல் விலைவாசி ஏற்றம் மக்களின் வாழ்க்கையை சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட வேளாண் தொழிலுக்கு அதிக மானியம் அளிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் இந்திய நாட்டில் இதற்கு முற்றிலும் எதிரான கொள்கை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான இடுபொருட்களின் விலைகள் மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் ஏறிக் கொண்டே செல்வதால் வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அரிசு, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது, தொடர் டீசல் விலை உயர்வு. டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பல்வேறு இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் வாகனக் கட்டணம் உயர்கிறது. இதன் விளைவாக, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், ஆகியவற்றின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

எனவே, மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே விலைவாசி உயர்வினை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

தமிழக அரசைப் பொறுத்த வரையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும்; இன்றியமையாப் பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும், அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்தி பொருட்களின் விலை ஏற்றத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு, 20 கிலோ விலையில்லா அரிசி முழுமையாகவும் தட்டுப்பாடு இன்றியும் வழங்கப்படுகிறது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை ஆகியன பொய்த்ததாலும், கர்நாடகம், காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும், எதிர்பார்த்த அளவு நெல் மகசூல் இல்லை. எனவே, வெளிச் சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது. வெளிச் சந்தையில் விற்கப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து, 25 கோடி ரூபாய் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், ஒப்பந்த புள்ளிகள் வழியாக வெளிச் சந்தையில் 10,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசி கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி அனைத்தும் வெளிச் சந்தையில் நுகர்வோருக்கு அடக்க விலையில் வழங்கப்படும்.

அரிசி விலையை உடனடியாக கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் என்ற விலையில் வெளிச் சந்தையில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த விற்பனை துவக்கப்படும்.

காய்கறி விலையைக் கட்டுப்படுத்த நகர்புற பகுதிகளில், கூட்டுறவு அமைப்புகள் மூலமும் தோட்டக்கலைத் துறை மூலமும் விவசாயிகளையும், நுகர்வோரையும், நேரடியாக இணைக்கக் கூடிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் அதாவது திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பருப்பு வகைகளையும் உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து, கொள்முதல் செய்து அவற்றை கூட்டுறவு சில்லறை அங்காடிகள் மூலம் நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனது தலைமையிலான அரசின் இந்த மக்கள் நல நடவடிக்கைகள் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் விலைவாசி ஏற்றம் என்ற கொடிய தாக்கத்திலிருந்து ஓரளவு மீள வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jayalalithaa holds Centre responsible for soaring prices | வெளிச்சந்தையிலும் விரைவில் ரூ. 20க்கு 1 கிலோ அரிசி.. ஜெ. அறிவிப்பு

Ms. Jayalalithaa listed out steps taken by her government to control rising prices which included providing 20 kg of rice free of cost to the poor through PDS and allotting Rs 25 crore to the Tamil Nadu Civil Supplies Corporation to control prices of rice.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns