ஒரு நிறுவனம் அல்லது வர்த்தகத்தின் வெற்றி அதனை முறையாக மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் இருந்து துவங்குகிறது. இன்றைய இண்டர்நெட் உலகில் நிறுவனத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல பல வழிகள் இருக்கிறது, அவை எளிமையாகவும் உள்ளதே இதன் சிறப்பு.
ஆனால் இந்த இண்டர்நெட் யுகத்தில் மக்களை எளிமையாக ஈர்க்க முடிந்தாலும், வர்த்தகத்தைத் தொடர்ந்து நிலையாகப் பெறுவது என்பது மிகவும் சவாலாக விஷயமாக உள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தச் சவாலான வேலைவையைச் சரியான திட்டமிடலுடன் செய்ய நியமிக்கப்படுபவர் தான் சிஇஓ என அழைக்கப்படும் தலைமை நிர்வாக அதிகாரி.

மக்களைக் கவர்ந்த சிஇஓ
மக்களால் அதிகமாகத் தேடப்பட்ட (மக்களை அதிகம் கவர்ந்த) சிஇஓக்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் லிங்கிடுஇன் நிறுவனம் வெளியிட்டு வருவதைப் போல் இந்த வருடமும் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் இடம்பெற வேண்டும் என்றால் பெரிய பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியதில்லை. மக்களைக் கவரக்கூடிய ஒரு ஐடியா அல்லது நிறுவனத்தை உருவாக்குவதே போதுமானது.
இப்படி 2017ஆம் ஆண்டின் மோஸ்ட் வியூவ்டு சிஇஓ பட்டியலில் இடம்பெற்ற 6 பேர் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

விஜய் சேகர் ஷர்மா
ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வாயிலாகக் கிரிகெட் ஸ்கோர், செய்திகள், ரிங்டோன், ஜோக்ஸ் ஆகிய சேவைகள் அளித்து வந்த இந்நிறுவனம் விஜய் சேகர் ஷர்மாவால் 2005ஆம் ஆண்டுத் துவக்கப்பட்டது. இதன் கிளை நிறுவனம் பேடிஎம் வாயிலாக மொபைல் ரீசார்ஜ், மின்சாரக் கட்டணம், டோல் எனப் பல்வேறு சேவைகளை அளிப்பது மட்டும் அல்லாமல், சமீபத்தில் பேடிஎம் மால் நிறுவனத்தின் மூலம் முழுமையான ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் இறங்கியுள்ளது.

சிபி குருஞானி
ஊழல் வழக்கில் சிக்கித்தவித்த சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா குழுமம் கைப்பற்றியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மஹிந்திரா சத்யம் நிறுவனமான இருந்த நாள் முதல் தற்போது இந்திய ஐடித்துறையில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் டெக் மஹிந்திராவாக இந்நிறுவனம் உருமாறியதில் முக்கியப் பங்கு வகித்தவர் தான் சிபி குருஞானி.
இவர் தற்போது டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

மனு சாயேல்
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சீடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் நிர்வாக இயக்குனராக உள்ளார் மனு சாயேல். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு டையம்லெர் நிறுவனத்தில் சேர்ந்தார்.

மனு குமார் ஜெயின்
உலகளவில் 5வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனத்தின் மனு குமார் ஜெயின் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் ஏந்தொரு புதிய வெளிநாட்டு நிறுவனத்திற்கும் கிடைக்காத ஒரு வர்த்தக வெற்றி சியோமிக்கு கிடைத்துள்ளதிற்குப் பின்னால் இருக்கும் ஒரு மனிதர் என்றால் அது மனு குமார் ஜெயின் தான்.
இவர் ஜபாங் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குனால் பஹால்
சில வருடங்களுக்கு முன்னால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தைக் கேள்விக்குறியாக்கிய ஸ்னாப்டீல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தான் குனால் பஹால். இவர் இப்பட்டியலில் இடம்பெறுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

அனில் சர்தானா
இந்தியா தற்போது மாற்று எரிசக்தி தயாரிப்பதில் முக்கியக் கவனத்தைச் செலுத்திவருகிறது, இப்புதிய முயற்சியில் டாடா குழுமத்தின் பங்கு இல்லாமல் இருக்குமா என்ன.
டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அனில் சர்தானாவும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.