நீங்கள் வாங்கும் பொருட்கள் போலியா..? அசலா..? கண்டுபிடிப்பது எப்படி..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

அதீத தள்ளுபடி விலை உங்களுக்கு வழங்கப்படுகிறது எனில், நீங்கள் வாங்கும் பொருள் போலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பிராண்டட் மற்றும் ஆடம்பர வகைப் பொருட்களுக்குச் சராசரியாக எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு வழங்கப்படும் விலை நம்ப முடியாத அளவிற்கு, உதாரணமாக அசல் விலையில் இருந்து 70-80% என்பது போல், குறைவாக இருக்குமானால், நீங்கள் கண்டிப்பாகப் போலியான பொருளை வாங்குகிறீர்கள் என்றே அர்த்தம்.

மலிவான பேக்கேஜிங்

பிராண்டட் வகைப் பொருட்களைப் பழுதின்றிப் பேக்கேஜ் செய்வதற்கு ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது. பணம் செலவழிக்கப்படுவது மட்டுமின்றி, மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இவ்வகைப் பொருட்கள் பேக்கேஜ் செய்யப்படுகின்றன.

பொருட்கள் ஏனோதானோவென்று பேக்கேஜ் செய்யப்பட்டிருந்தாலோ, பெட்டியில் சரியாகப் பொருந்தாமல் இருந்தாலோ, அல்லது மலிவான பிளாஸ்டிக், மெலிதான அட்டை போன்ற தரமற்ற பொருட்கள் பேக் செய்ய உபயோகிக்கப்பட்டிருந்தாலோ, அது போலி என்று உஷாராகி விடுங்கள். அதே போல், எவ்வித பேக்கேஜிங்கும் செய்யப்படாமல் இருந்தால், அது போலி தான் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

 

இலக்கணம் மற்றும் எழுத்துப் பிழைகள்

எழுத்துப்பிழை (அதிகப்படியான எழுத்து அல்லது தேவையான எழுத்து இல்லாமை) மூலம் போலியான பொருட்களை எளிதாகக் கண்டுகொள்ளலாம். உதாரணத்திற்கு, Hewlett Packard, Hewlet என்றும், Louis Vuitton, Vitton என்றும் எழுதப்படுவதைக் கூறலாம்.

பிராண்ட் பெயர்களில் காணப்படும் இவ்வகை எழுத்துப்பிழைகள் கவனக்குறைவான வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்க்காவிடினும், அப்பொருள் பற்றிய தகவல்கள் மற்றும் உபயோகிப்பாளர்க்கான ஆலோசனை கையேடான இன்ஸ்ட்ரக்ஷன் மானுவல் ஆகியவற்றில் அம்மோசடிக்காரரின் அறிவீனத்தைக் கண்கூடாகக் காணலாம். அதனால் இவற்றைக் கவனமாகப் படிப்பது முக்கியம்.

 

போலியான வலைத்தளங்கள்

ஆன்லைன் மூலம் நீங்கள் பொருட்களை வாங்க விழைந்தால், வலைத்தளங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பதன் மூலம் போலிப் பொருட்களை வாங்குவதிலிருந்து தப்பிக்கலாம். வலைத்தளமே போலியாக இருப்பின், பொருட்களும் நிச்சயம் போலியாகத் தான் இருக்கும். வலைத்தளத்தின் URL-ஐ உறுதிப்படுத்திக்கொள்வதோடு, மேலும், 'https' (http என்று இருக்கக்கூடாது) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதையும், லாக் சின்னம் இருக்கிறதா என்பதையும் பார்த்து, அவ்வலைத்தளம் பாதுகாப்பானது தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் ஒரு வலைத்தளத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்துக் கொள்ள, அவ்வலைத்தளத்தின் முகவரியை www.scamadviser.com மற்றும் http://whois. domaintools.com/ போன்ற வலைத்தளங்களில் பேஸ்ட் செய்து பார்க்கலாம். அவ்வலைத்தளம் நம்பகத்தன்மையை இவ்விரண்டு வலைத்தளங்களும் எளிதில் காட்டி விடும்.

 

போலிப் பொருட்களின் மலிவான தரம்

போலியான பொருட்களில் அசலான உட்பொருட்களுக்குப் பதிலாகப் பெரும்பாலும் தரமற்ற பொருட்களே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். அதனால், அவற்றின் தரம் பெரும்பாலும் கேள்விக்குறியே. இவை மோசமான பிளாஸ்டிக், போலி லெதர், தரமற்ற கண்ணாடி, இரண்டாந்தரத் துணி வகைகள், பழைய அல்லது உபயோகப்படுத்தப்பட்ட உதிரிப்பாகங்கள் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றில் ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவை வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளின் வடிவத்தில் கூடச் சில சமயம் சிறு வேறுபாடு இருப்பதைக் காணலாம். பொருட்கள் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்டது போல் பொலிவற்றிருந்தால் அவற்றை எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம். .

 

தப்பிதம் மற்றும் பொருத்தமின்மை

பொதுவாக நிறுவனங்கள் அனைத்தும், குறியீடுகள், சீரியல் அல்லது மாடல் எண்கள், வர்த்தக அடையாளம், காப்புரிமை தகவல்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் பற்றிய தகவல்களைப் பொருட்களின் மீதோ அல்லது அவற்றின் பேக்கேஜின் மீதோ பதிப்பித்திருப்பர்.

போலிப் பொருட்களின் மீது பதிப்பிப்பதற்காக இத்தகவல்களைப் பிரதியெடுக்க முற்படுகையில் பெரும்பாலும் ஒன்றிரண்டு விடுபட்டிருக்கும். இப்பொருட்களின் மீதுள்ள எண்களை ஆன்லைன் மூலம் உண்மையான பொருட்களின் எண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக, மின்னணு சாதனங்கள் போன்ற பொருட்களுக்கு இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

 

பிழையான ஃபான்ட்கள் மற்றும் லோகோக்கள்

எழுத்துப்பிழைகளைப் போலவே, போலியான லோகோக்கள், பிராண்ட் பெயர்கள் மற்றும் வர்த்தக அடையாளங்களைக் கண்டறிவதும் எளிதே. நீங்கள் விழிப்பானவராக இருந்து, அசல் லோகோக்கள் எவையென நன்கு அறிந்திருக்கும் பட்சத்தில், மிகச்சிறிதான வேறுபாட்டினையும் நீங்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். இது கடினமாகத் தோன்றினால், நீங்கள் போலி எனச் சந்தேகிக்கும் பொருளைப் புகைப்படம் எடுத்து அதனை ஆன்லைனில் அசலான பொருளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ஃபான்ட்டின் வடிவம் அல்லது அளவு போன்றவற்றில் சிறு வேறுபாடு காணப்படலாம். அதன் வண்ணம் கூட அசல் போல் அல்லாது சற்றே வெளுத்தோ அல்லது வேறுபட்டோ இருக்கலாம். பதிப்பிக்கப்பட்ட வார்த்தைகள் வெளுத்தோ, அழிந்தோ, படிக்க முடியாமலோ அல்லது கோர்வையாக இல்லாமலோ இருக்கலாம்.

 

 

தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் இல்லாதிருத்தல்

உற்பத்தியாளரின் முகவரி, மின்னஞ்சல், தொலைப்பேசி எண் அல்லது தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் போன்றவை பொருளின் மீதோ அதன் பேக்கேஜின் மீதோ குறிப்பிடப்படாதிருப்பின், அது சந்தேகத்திற்குரியதே. உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றை யாரிடம் தெரிவிப்பது என்பது போன்ற தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததையே இது காட்டுகிறது.

இது போன்ற பொருட்களைத் தவிர்த்து விடுவதே நல்லது. தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை வலைத்தளம் மூலம் சரிபார்த்துக் கொள்ள முயலுங்கள் அல்லது வாங்கும் முன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

விடுபட்ட உதிரிப்பாகங்கள்

பேக்கேஜ் மீது குறிப்பிடப்பட்டுள்ள உதிரிப்பாகங்கள் மற்றும் துணைப்பொருட்கள் அனைத்தும் பெட்டிக்குள் உள்ளனவா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இன்ஸ்ட்ரக்ஷன் மானுவல், வாரன்டி அட்டை, வயர்கள், ப்ளக்குகள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் விடுபட்டுப் போயிருப்பின், உடனடியாக விற்பனையாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இதைக் காட்டிலும், பொருளை வாங்கும் முன்பே கடையிலேயே பெட்டியைத் திறந்து சரிபார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. ஆன்லைனில் வாங்கியிருப்பின், டெலிவரியின் போது பெட்டியைத் திறப்பதை வீடியோ பதிவாக ரெகார்ட் செய்து கொள்ளலாம்.

 

அனுமதி பெறப்படாத மையங்கள்

மின்னணு இயந்திரங்கள், மின் சாதனங்கள் மற்றும் பிராண்டட் பொருட்களை, முறையாக அனுமதி பெற்ற கடைகள், உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான பிராண்ட் விற்பனைக் கூடங்கள், போன்றவற்றில் வாங்குவதே சிறந்தது. வேறு எங்கேனும் சகாயமான தள்ளுபடி விலையில் கிடைப்பதாகக் கேள்விப்பட்டால், அக்கடையின் முகவரியை ஆன்லைனில் சரிபார்த்து, தொடர்புக்கான தகவல்கள் நம்பகமானவை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to spot a fake product while purchasing?

How to spot a fake product while purchasing?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns