இந்தியா ஈகாமர்ஸ் சந்தையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மத்தியிலான போட்டி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் பிளிப்கார்டின் போன்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களின் பேமெண்ட் சேவைகளுக்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் தனது பேமெண்ட் சேவை அளிக்கும் கிளை நிறுவனமான அமேசான் பே-இல் சுமார் 260 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்த முதலீட்டைச் சிங்கப்பூரில் இருக்கும் தனது அமேசான் கார்பரேட் ஹோல்டிங்க்ஸ் மூலம் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேமெண்ட் வர்த்தகம்
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இத்தகைய சந்தையைக் கைப்பற்றவே கூகிள் முதல் பிளிப்கார்ட் வரையில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு வருகிறது.
சமீபத்தில் கூகிள் நிறுவனம் கூட TEZ என்ன பணப் பரிமாற்ற செயலியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

350 கோடி ரூபாய்
அமேசான் நிறுவனம் தனது பேமெண்ட் வர்த்தகமான அமேசான் பேவில் இதுவரை சுமார் 350 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
சமீபத்தில் அமேசான் பே தனது அனுமதி அளிக்கப்பட்ட மூலதன அளவை 400 கோடியில் இருந்து 2,000 கோடி ரூபாயாக உயர்த்தியது. இந்நிலையில் இப்புதிய முதலீட்டு மூலம் அமேசான், பிளிப்கார்ட்-இன் போன்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுடன் போட்டி போட தயாராகியுள்ளது.

பிளிப்கார்ட்
சில வாரங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனமும் தனது பேமெண்ட் வர்த்தகத்தில் 500 மில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. இதில் முதல்கட்டமாக 180-200 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது.

பேடிஎம்
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பேடிஎம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டு வரவும் ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து சுமார் 1.4 பில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியுள்ளது.