இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பாலிமர் உற்பத்தி ஆகிய துறையில் மட்டும் இருந்த நிலையில், அவரின் வாரிசுகள் நிறுவன பணிக்கு வந்த பின் பல மாறுபட்ட துறைகளில் முகேஷ் அம்பானி வர்த்தகத்தைத் துவங்கியுள்ளார்.
நாட்டில் அனைவரும் ஈகாமர்ஸ், ஸ்டார்ட்அப், தொழில்நுட்பம் எனச் சென்றுகொண்டு இருந்த வேளையில், 2 வருட திட்டமிடல் மற்றும் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் டெலிகாம் சந்தைக்குள் நுழைந்தார் முகேஷ் அம்பானி.
ஜியோவின் வெற்றி மற்றும் இதன் மூலம் டெலிகாம் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்நிலையில் முகேஷ் அம்பானி தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதுவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அடுத்தப் பெரிய திட்டமாகும்.

புதிய தளம்
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் AJIO வாயிலாக நுழையத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி, பிளிப்கார்ட், அமேசான் ஆதிக்கத்தால் பெரிய அளவில் வெற்றி அடையாமல் போனது.
இந்நிலையில் பிளிப்கார்ட் - வால்மார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு எதிராகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆன்லைன் ஆப்லைன் சந்தையை இணைக்கும் வகையில் ஹைப்பிரிட் வர்த்தகத் தளத்தை உருவாக்கி வருகிறது.

ஈகாமர்ஸ் சந்தை
இந்திய ஈகாமர்ஸ் சந்தையின் மொத்த வர்த்தகச் சந்தையின் மதிப்பு 2017இல் 25 பில்லியன் டாலராக இருந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் 20 சதவீத வளர்ச்சி அடையும் இத்துறையில் மதிப்பு 2022இல் 52 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பெரிய சந்தையை விட்டு வைப்பாரா முகேஷ் அம்பானி? இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது புதிய தளம்.

அடுத்தத் திட்டம்..
ஈகாமர்ஸ் சந்தையில் இருக்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தொடர்ந்து பல ஆயிரம் கோடிகளை இந்திய சந்தையில் கொட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், முகேஷ் அம்பானி மாறுபட்ட நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவின் வர்த்தகச் சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய திட்டத்தை வடிவமைத்து வருகிறார்.

பெரிய கடைகள் முதல் பெட்டி கடைகள் வரை..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே ரீடைல் சந்தையில் இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் கடைகள், குறிப்பாகப் பெட்டிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் இணைக்கும் வகையில் ஒரு புதிய வர்த்தகத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ரீடைல் நிறுவனங்கள்
பொதுவாக ரீடைல் நிறுவனங்களுக்கு ஊர் பக்கம் இருக்கும் பெட்டிக்கடைகள், சிறு சிறு கடைகளை நேரடியாக அடைவது என்பது விருப்பம் இல்லாத ஒன்று, கடினமான ஒன்றும் கூட. ஆனால் முகேஷ் அம்பானிக்கு இவர்களே பெரிய வாடிக்கையாளராகக் கருதி இப்புதிய தளத்தை உருவாக்கி வருகிறார்.

இணைப்பு
இப்புதிய திட்டத்தில் அம்பானி பொருட்களை நேரடியாக டெலிவரி செய்யும் பணிகளில் இறங்கப்போவதில்லை. இதற்கு மாறாக உற்பத்தியாளர்களை நேரடியாக விற்பனையாளர்களோடு இணைக்கப்போகிறார்.
இந்த இருதரப்பினரையும் ஜியோ வாடிக்கையாளர்களுடன் இணைக்கவும் முடிவு செய்துள்ளார் முகேஷ்.

அதிக வர்த்தகம் அதிக லாபம்..
உற்பத்தியாளர்களை விற்பனையாளர்களோடு இணைப்பது மட்டுமே முகேஷ் அம்பானி செய்யும் வேலையாக இருந்தாலும், இதன் மூலம் உற்பத்தி பொருட்கள் எவ்விதமான இடைதரப்பு ஆட்கள் இல்லாமல் நேரடியாகக் கொண்டு சேர்க்க முடியும். இதன் மூலம் விற்பனையாளர்கள் அதிக லாபத்திற்குப் பொருட்களை விற்க முடியும்.
மேலும் உற்பத்தியாளர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கூடுதலான வர்த்தகம் கிடைக்கும். இது இருதரப்புகளுக்கு அதிகமான லாபத்தை அளிக்கக் கூடிய ஒன்று.

பொருட்களின் விலை..
ஒரு பொருட்களின் விலை பல்வேறு காரணிகள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
உதாரணமாக: ஒரு சோப்புத் தயாரிப்பு விலை 10 ரூபாய் என்றால் உற்பத்தியாளர்கள் 15-30 சதவீதம் வரையிலான லாபத்தை வைப்பார்கள். இப்போது இதன் விலை 13 ரூபாய்.
விளம்பரம், பேக்கிங், விநியோகம் என இதன் விலை 18-20 வரையில் உயரும். இதன் பின்பு டீலர்கள் அல்லது ஏஜென்ட்களுக்குக் கமிஷன்காக என்ற பெயரில் இதன் விலை 20-22 ரூபாய் வரையில் உயரும்.
விற்பனையாளர்களிடம் வரும்போது இதன் சந்தை விற்பனை விலை கிட்டத்தட்ட 22-25 ரூபாய் வரையில் உயரும். இதன் அளவீடுகளில் சில மாறுதல்கள் இருந்தாலும் பொருட்களைச் சந்தைப்படுத்தும் முறையில் இதுதான்.

இணைப்பு மூலம் கிடைக்கும் லாபம்..
முகேஷ் அம்பானி வடிவமைக்க உள்ள திட்டத்தின் அடிப்படையே இதில் இருந்துதான் வருகிறது. இப்போது உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும் நேரடியாக இணைத்துவிட்டால் பொருட்களின் சந்தைப்படுத்தும் விலை அதிகளவில் குறைவது மட்டும் அல்லாமல் உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடி வாடிக்கையாளர்கள் கிடைக்கும்.
இது உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் பெரிய அளவிலான லாபத்தை அளிக்கும்.

ஜியோ வாடிக்கையாளர்கள்
முகேஷ் அம்பானி அதோடு நிற்காமல் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் புதிதாக உருவாக்கப்படும் தளத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் பொருட்களைச் சந்தைப்படுத்த உதவும் வகையில் கூப்பன் திட்டத்தைக் கொண்டுவரப்போகிறார்.
உற்பத்தியாளர்களுடன் கூட்டணி வைத்துப் பொருட்களை வாங்க ஆஃபர்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெலிகாம் வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

முதற்கட்ட சோதனை திட்டம்..
இத்தளம் தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த வருடம் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
அதோடு முதற்கட்ட சோதனைக்காக மும்பை, சென்னை, அகமதாபாத் ஆகிய இடங்களையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஈகாமர்ஸ்
இந்தியாவில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வந்த பின்பு சிறு கடைகள் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது மட்டும் அல்லாலமல் லாபத்தின் அளவீடும் குறைந்துள்ளது.
ஆனால் அம்பானியின் இத்திட்டம் மூலம் சிறு கடைகளுக்கு வழக்கத்தை விடவும் அதிக வர்த்தகம் மற்றும் லாபத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. இப்புதிய திட்டத்தில் முகேஷ் அம்பானி தொழில்நுட்பம், ஈ-கேஷ், கூப்பன்ஸ் மற்றும் டெலிகாம் வாடிக்கையாளர்கள் என அனைத்தையும் பயன்படுத்த உள்ளார்.

திருபாய் அம்பானி
எப்போது ஒரு போன் கால் கட்டணத்தைப் போஸ்டு கார்டு விலையை விடவும் குறைவாக மாற்றுகிறோமோ அப்போது பல லட்ச இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றுவகையில் ஒரு மிகப்பெரிய புரட்சி உருவாகும்.

ஜியோவில் சாதித்தார்...
அவர் கூறியதை போலவே தற்போது ஜியோ மூலம் இலவசமாகப் போன் கால் மட்டும் அல்லாமல் போனையே இலவசமாக அளிக்கப் போகிறோம். இதுவே இன்றைய டிஜிட்டல் புரட்சி என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

வாய்ப்புகள் அதிகம்
இன்றைய நிலையில் ஈகாரமஸ் என்பது நாட்டில் வெறும் 3-4 சதவீதம் அதாவது 650 பில்லியன் டாலர் சந்தை மட்டுமே, ஆனால் ரீடைல் சந்தை இந்தியாவில் 8 சதவீதம் உள்ளது. இப்பரிவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது.

சிறு கடைகள் ஆதிக்கம்
அதுமட்டும் அல்லாமல் தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய வாழ்க்கையிலும் ரீடைல் சந்தையில் 88 சதவீதம் சிறு கடைகள் மட்டும் ஆட்சி செய்கிறது. இந்த மிகப்பெரிய சந்தைக்குள்ள நுழைய ஜியோ வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் உதவி செய்வார்கள்.

இவர்களுக்கும் ஆபத்து..
முகேஷ் அம்பானியின் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரீடைல் சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. டிஜிட்டல் வேலெட் சேவை அளிக்கும் பேடிஎம், மொபிவிக், மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவிலான போட்டியை உருவாக்கும்.

பாரத்..
இப்புதிய திட்டத்தின் பெயர் தான் பாரத் இந்தியா ஜோடோ திட்டம், இதன் வாயிலாகவே ஆன்லைன் சந்தையிலும், ஆப்லைன் சந்தையையும் இணைக்க திட்டமிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.

முதலீடு
இத்திட்டத்தில் ஜியோவிற்கு இணையான முதலீடு செய்யவும் முகேஷ் தயாராக உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே ஜியோ நிறுவனத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில் பாரத் திட்டத்திலும் 3 லட்சம் முதலீடு செய்தால் நாட்டின் வர்த்தக சந்தையின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

ஜியோ ஜிகாபைபர்
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ ஜிகாபைபர் திட்டத்தை ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கப்படுகிறது.

1,100 நகரங்கள்
இந்தச் சேவையை வேண்டும் என நினைப்பவர்கள், மைஜியோ அல்லது ஜியோ.காம் தளத்தில் கோரிக்கை வைக்கலாம். மேலும் அதிவேக ஜிகாபைபர் இண்டர்நெட் இணைப்பை ஜியோ நாட்டில் 1,100 நகரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் சேவை
ஜிகாபைபர் திட்டத்துடன் செட் டாப் பாக்ஸ்-ம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் டிடிஹெச் சேவையை ரிலையைன்ஸ் பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருவாயும் உருவாக்க உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜியோ ரிமோர்ட் வாய்ஸ் கன்ட்ரோல் கொண்டதாக உள்ளது. இதன் சேவையை முகேஷ் அம்பானியில் மகள் ஈஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானியும் அறிமுகம் செய்து வைத்தனர்.

நிறுவனங்கள்
ஜியோ திட்டத்தை போலவே முகேஷ் அம்பானி பிராட்பேண்டு சேவையும் குறைந்தது 6 மாதம் இலவசமாகவே அளிப்பார் என தெரிகிறது.
இந்திய பிராட்பேண்டு சந்தையில் வர்த்தகம் குறைவாக இருக்கும் நிலையிலும், நிறுவனங்கள் எண்ணிக்கை பிராந்தியம் வாயிலாக சிறு சிறு நிறுவனங்களாக பிரிந்து இருக்கிறது.
ஜியோவின் சேவை அறிமுகத்தில் இந்நிறுவனங்கள் காணாமலும் போகலாம், அல்லது முக்கியமான நிறுவனங்களை ஜியோ வாங்கவும் செய்யலாம். என்ன நடக்கிறது என்பதை ஆகஸ்ட் 15க்கு பின் பார்போம்.