இந்தியர்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அதிகளவில் வங்கி சேவையினை நாடி வாழ்க்கையை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி நாம் பயன்படுத்தி வரும் வங்கி அல்லது நிதி நிறுவனமானது நமது பணத்திற்கு எந்த அளவிற்குப் பாதுகாப்பை அளிக்கின்றன என்ற கேள்வி கடந்த சில நாட்களாகத் தீவரம் அடைந்துள்ளது.
பொதுவாக நாம் வங்கி கணக்கு என்பதை நமது பணத்தினைப் பாதுகாப்பாக வைக்கவும் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும் தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய மசோதாவால் நமது பணத்தினைத் தேவையின் போது எடுத்துப் பயன்படுத்த முடியாத நிலை வர வாய்ப்பு இருக்கின்றது என்று கூறப்படுகிறது.

உங்கள் பணம் என்ன ஆகும்?
மத்திய அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகும், வங்கி ஊழியர்கள் சங்கங்கள் எதிர்த்த பிறகு அது குறித்துப் பல விளக்கங்கள் அளித்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த விளக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் துறை சார்ந்த வல்லுநர்கள் எப்ஆர்டிஐ 2017 சட்டம் அமலுக்கு வந்தால் நீங்கள் பணத்தினை டெபாசிட் வைத்து வங்கி அல்லது நிதி நிறுவனமானது திவால் ஆகும் நிலையில் இருந்தால் உங்களைக் கேட்காமலே உங்கள் டெபாசிட் பனத்தினை எடுத்துப் பயன்படுத்த முடியும். மேலும் உங்களது குறிப்பிட்ட அளவிலான டெபாசிட் தொகையினைக் காலக்கெடு ஏதும் இல்லாத அளவிற்கு நிரந்தர வைப்பு நிதியாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்குப் பதிலாக டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு அந்த நிதி நிறுவனத்தின் பங்குகள் அளிக்கப்படும், இல்லை என்றால் நட்டம் அளித்து வரும் வங்கியினை வேறு வங்கியுடன் இணைப்பது, அல்லது விற்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கின்றனர்.
என்ன அதிர்ச்சியாக உள்ளதா? குழப்பமாக உள்ளதா? நம் பணத்தினை என்ன தான் செய்வது எனக் கவலையாக உள்ளதா? ஆம், இந்த மசோதா நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத்தில் நிறைவேறினால் இந்தச் சிக்கல் எல்லாம் வரலாம். எனவே எப்ஆர்டிஐ மசோதா என்றால் என்ன, அதனால் என்ன பாதிப்பு என்பதை எல்லாம் விளக்கமாகப் பார்க்கலாம்.

பின்னணி
2016-ம் ஆண்டு அமெரிக்காவின் பாங்க் ஆப் சைப்ரஸ் என்ற வங்கி திவால் ஆக இருந்த நிலையில் வாடிக்கையாளர்களின் படெபாசிட் தொகையினைப் பயன்படுத்தித் திவால் நிலையில் இருந்து மீல முயற்சி செய்தது. இதுபோன்ற நடவடிக்கை ஒன்றைத் தான் வங்கி தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்புறுதி திட்டம் மூலமாக மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.

உச்ச நீதிமன்றத்தாலும் கேள்வி கேட்க முடியாது?
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இதுபோன்ற ஒரு நடவடிக்கையினை மத்திய அரசு எடுப்பது மிகப் பெரிய தவறு என்ற நிலையில் இது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்க அனுமதி கிடையாது என்ற அளவிற்குச் சட்டத்தினை உருவாக்கி வருகிறது மத்திய அரசு.

எதற்காக இந்த எப்ஆர்டிஐ மசோதா 2017?
மத்திய அரசு எப்ஆர்டிஐ மசோதா நிறைவேறினால் வங்கி தவால் ஆகும் என்ற நிலையே ஏற்படாது, டெபாசிட்டர்களின் பணத்தினைப் பயன்படுத்தி வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் அல்லது பிற வங்கிகளுக்கு விற்பது அல்லது இணைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதனை ரெசல்யூஷன் கார்ப்ரேஷன் பார்த்துக்கொள்ளும் என்று கூறுகின்றனர்.

எப்போது எப்ஆர்டிஐ மசோதாவிற்கான பணிகள் துவங்கியது?
2008-ம் ஆண்டு அமெரிக்க வங்கிகள் திவால் ஆகும் நிலையினைச் சந்தித்த போது இதுபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ள நிலையில் 2009-ம் ஆண்டு முதல் நிதி நிலைப்புத்தன்மை வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி இதற்கான துவக்கப் பணிகள் நடைபெற்றுள்ளது.

2016-2017 பட்ஜெட்
2016-2017 பட்ஜெட் கூட்டத்தின் போது வங்கிகள் திவால் ஆகும் அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், இதனைத் தடுப்பதற்காக 2016-2017 பாராளுமன்ற கூட்டங்களின் போது புதிய சட்ட ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அஜய் தியாகி குழு
2016 மார்ச் 15 ம் தேதி தான் அறிவித்தது போன்றே அஜய் தியாகி தலைமையில் குழு ஒன்றை அமைத்து வரைவு சட்டம் ஒன்ற உருவாக்கத் துவங்கினர். அதய் தியாகி குழுவானது எப்ஆர்டிஐ சட்டத்தினை உருவாக்கியது. இந்தச் சட்டம் குறித்து நிதி அமைச்சகம் 2016 அக்டோபர் 31 வரை கருத்துக்களைப் பெற்று வந்துள்ளது. இந்தக் கருத்துக்களை எல்லாம் வைத்துக்கொண்டு மத்திய அமைச்சகம் பாராளுமன்றத்தில் இந்த மசோதாவினை அறிமுகம் செய்ய அனுமதி அளித்தது.

எப்ஆர்டிஐ மசோதாவில் உள்ள அம்சங்கள்
1. வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் திவால் ஆவதில் இருந்து தவிர்க்கப்படும்.
2. நிதி நெருக்கடியின் போது வாடிக்கையாளர்களின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்.
3. வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் நிதி நெற்றுக்கடியில் இருந்து தப்பிக்கப் பொது மக்கள் தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ள பணம் பயன்படுத்தப்படும்.
4. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நெருக்கடி காலங்களில் ஒழுங்குபடுத்தப்பட்டு இருக்கும்.
5. நிதி நெருக்கடி ஒரு வருடத்தில் தீர்க்கப்படும் என்று கூறினாலும் அது நீடிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
6. நிதி நெருக்கடியினைத் தவிர்ப்பதாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
7. நிதி நிறுவனங்களின் நிலைதன்மை மற்றும் பின்னடைவை ஒழுங்குபடுத்தி வலுப்படுத்த ரெசல்யூஷன் காப்ரேஷன் உருவாக்கப்படும்.

ரெசல்யூஷன் காப்ரேஷன் என்றால் என்ன?
1. ஆர்பிஐ இப்போது எப்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து வருகிறதோ அதேபோன்ற ஒரு புதிய நிறுவனமாகும்.
2. வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போது நிதி நிறுவனங்களை இது ஒன்றிணைக்கும்.
3. குறைந்த, மிதமான, பொருள், உடனடி மற்றும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய என்ற நெருக்கடி நிலைமையினை வகைப்படுத்தும்.
4. முக்கியமான நெருக்கடி நிலை என்ற போது ரெசல்யூஷன் காப்ரேஷன் தலையிட்டு அந்தச் சிக்கலை ஒரு ஆண்டிற்குள் தீர்க்கும்.
5. ஒன்றிணைத்தல் அல்லது கையகப்படுத்தல், சொத்துக்களை, பொறுப்புகளை மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவது அல்லது கலைத்தல் பொன்ற நடவடிக்கைகளை எடுக்கும்.
6. ஒரு நிறுவனத்தினை 2 வருடத்திற்குள் காப்பாற்ற முடியவில்லை என்றால் அந்த நிறுவனம் கலைக்கப்படும்.

ஊழியர்களின் நிலை என்ன?
திவால் ஆன வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் ஊழியர்களைப் பணியில் இருந்து ரெசல்யூஷன் கார்ப்ரேஷன் நீக்கும், தேவையான ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுத் தக்கவைத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் மற்றும் ரெசல்யூஷன் காப்ரேஷன் வித்யாசம் என்ன?
1. ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இரண்டும் ஏற்கனவே இதேபோன்ற வேலையினைத் தான் செய்து வருகிறது.
2. ரிசர்வ் வங்கியானது சிக்கலில் இருக்கும் வங்கிகளின் டெபாசிட்டர்களைப் பொதுத் துறை வங்கிகள் பாதுக்காக்க அனுமதி அளித்துள்ளது.
3. வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் மூலம் டெபாசிட்டர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை காப்பீடு அளிக்கப்படுகிறது.
4. புதிய மசோதா அமலுக்கு வந்தால் வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் முழுமையாக நீக்கப்படும்.
5. எவ்வளவு பணம் அளிக்க வேண்டும் என்பதையும் ரெசல்யூஷன் காப்ரேஷன் தான் முடிவு செய்யும்.
6. காப்பீட்டுப் பணம் எவ்வளவு அவ்வளவு தான் அளிக்கப்படும், முதலீட்டுப் பணம் மொத்தமாக ஒன்றும் கிடைக்காது.
7. செபி, ஆர்பிஐ, ஐஆர்ஆர்டிஐ, மற்றும் பிஎஃப்ஆர்டிஐ அதிகாரிகள் நிதி அமைச்சகத்தின் கீழ் இதில் இருப்பார்கள்.

பாதிப்பு எப்படி இருக்கும்?
எப்ஆர்டிஐ மசோதாவானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும் வரையில் சாதாரண மக்களுக்கு என்ன பயன் என்று கூற முடியாது. ஆனால் தற்போது பொது மக்களின் டெபாசிட் பணத்திற்கு உத்திரவாதம் இல்லை என்ற செய்திகள் மற்றும் தீயாகப் பரவி வருகிறது.

மத்திய அரசு விளக்கம்
அதே நேரம் வங்கி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதிச் சட்டம், 2017-ஐ வரும் குளிர்காலக் கூட்டத்தில் கொண்டு வர இருப்பதால் முன்பு வங்கி கணக்கில் டெபாசிட் செய்த பணத்திற்கு என்ன மாதிரியான பாதுகாப்புகள் இருந்தனவோ அதில் இருந்து எந்த மாற்றம் இல்லை என்று நிதி அமைச்சகம் சென்ற வாரம் டிவிட் செய்து இருந்தது.
எனவே முன்பு இருந்தது போன்று பணம் டெபாசிட் செய்துள்ளவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தில் எந்தக் குறைகளும் மாற்றமும் இல்லாமல் எப்ஆர்டிஐ மசோதாவின் கீழ் பணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது.
இது குறித்த உங்கள் கருத்துகளைக் கீழே உள்ளிடுக.