வருமான வரித் துறை பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தாய் மட்டும் உள்ள ஒற்றைப் பெற்றோர்களின் குழந்தைகளுக்குத் தந்தை பெயர் கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய நேரடி வரி வாரியம் அன்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் தாய் ஒற்றைப் பெற்றோர் என்றால் அதற்கான தெரிவை தேர்வு செய்து தாயின் பெயரினை மட்டும் உள்ளிட்டால் போதும் என்றும் தெரிவித்துள்ளது.

தந்தை பெயர்
தற்போது நிரந்தரக் கணக்கு எண் என்று அழைக்கப்படும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தந்தையின் பெயர் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது முதல் புதிய விதி?
பான் கார்டு விண்ணப்பத்திற்கான இந்தத் தந்தை பெயர் கட்டாயமில்லை என்ற புதிய விதிமுறைகள் வர இருக்கும் டிசம்பர் 5-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

தாய் பெயர்
தற்போது பான் கார்டுகளில் தந்தையின் பெயர் அச்சிடப்படும் நிலையில் புதிய விதிமுறை அமலுக்கு வரும் போது தேவைப்பட்டால் தாயின் பெயர் அச்சிடப்படும்.

வருமான வரி
ஒரு நிதி ஆண்டில் தனிநபரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் வருமான வரி தாக்கல் செய்யப் பான் எண் கட்டாயம் ஆகும். மேலும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தற்போது ஆதார் கார்டு கட்டாயம் ஆகும்.

எதிர்பார்ப்பு
மத்திய அரசு செய்துள்ள இந்தப் புதிய முடிவின் மூலம் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை வரும் மதிப்பீட்டு ஆண்டு முதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.